Published : 05 Aug 2023 07:14 AM
Last Updated : 05 Aug 2023 07:14 AM
சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டும் செப்.1-ம் தேதி நெல் கொள்முதலை தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
ஆண்டுதோறும் குறுவை, சம்பா பருவத்தில் சாகுபடி செய்யப்படும் நெல், தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. அதற்கான தொகை குறிப்பிட்ட காலத்தில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 2022-23-ம் ஆண்டு கொள்முதல் (காரீப்) பருவத்தில் 3,497 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, மத்திய அரசின் முன்அனுமதி பெற்று, முன்கூட்டியே அதாவது செப்.1-ம் தேதி முதலே கொள்முதல் மேற்கொள்ளப்பட்டது. வழக்கமாக இது அக்டோபரில் தொடங்கும்.
2022 செப்.1-ம் தேதி முதல் கடந்தஜூலை 25-ம் தேதி வரை 42.29 லட்சம்டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, 8.82 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.9,096.67 கோடி வரவு வைக்கப்பட்டது. அந்த பருவத்தில் 9.70 லட்சம் டன் கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் கோரிக்கை: இந்நிலையில், 2023-24-ம் ஆண்டு காரிப் பருவத்துக்கான நெல் கொள்முதலையும் முன்கூட்டியே, அதாவது செப்.1-ம் தேதி முதல் தொடங்க அனுமதி அளிக்குமாறு, மத்திய உணவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின்கடிதம் எழுதினார். தமிழக உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி நேரில் சந்தித்தும் வலியுறுத்தினார்.
இதைத் தொடர்ந்து, அமைச்சர் அறிவுறுத்தலின்படி, கொள்முதல் செய்வதற்கான முன்னேற்பாடுகள், அரவை ஆலைக்கு அனுப்ப தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இந்நிலையில், முதல்வரின் கோரிக்கையை ஏற்று, செப்.1-ம் தேதி நெல் கொள்முதல் தொடங்க மத்திய அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து தமிழக தலைமைச்செயலருக்கு மத்திய உணவுத் துறை சார்பு செயலர் அசோக்குமார் வர்மா எழுதியுள்ள கடிதத்தில், ‘தமிழக அரசு கடந்த ஜூலை21-ம் தேதி கடிதத்தில் கேட்டுக்கொண்டதன்படி, 2023-24 காரிப் பருவத்துக்கான நெல் கொள்முதலை செப்.1-ம் தேதி முதல் மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கொள்முதல் அளவு, அரவை பருவம் தொடர்பான முடிவுகள் ஆகஸ்ட் இறுதியில் நடைபெறும் மாநில உணவுத் துறை செயலர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, நெல் கொள்முதலுக்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை தமிழக உணவுத் துறை விரைவில் தொடங்க உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT