Published : 04 Nov 2017 12:05 PM
Last Updated : 04 Nov 2017 12:05 PM

திண்டுக்கல் மாவட்டத்தில் வறண்டு கிடக்கும் குளங்கள்: மழையை எதிர்பார்த்து நம்பிக்கையுடன் காத்திருக்கும் விவசாயிகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளாக கடும் வறட்சி ஏற்பட்டது. இதன் காரணமாக குளம், கண்மாய்கள் மட்டுமின்றி அணைகளும் வறண்டன. நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்தது.

தென்மேற்குப் பருவமழை பரவலாக பெய்தபோதும் நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரவில்லை. திண்டுக்கல் மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை ஆண்டு சராசரி 218.3 மில்லிமீட்டர். 146.45 மில்லிமீட்டர் அதிகமாக 364 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. அக்டோபர் மாதம் வரை பெய்ய வேண்டிய ஆண்டு சராசரி மழை அளவு 607 மில்லிமீட்டர். ஆனால் 53.25 மில்லிமீட்டர் கூடுதலாக 660.45 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. இருந்தபோதும் நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கவில்லை. இதனால் வடகிழக்குப் பருவ மழையை முழுமையாக நம்ப வேண்டிய நிலை உருவானது.

அக்டோபர் கடைசி வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், கொடைக்கானல் மலைப்பகுதியில் மட்டும் மழை பெய்து வருகிறது. இதனால் மலையடிவாரத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து உள்ளது. இதன் காரணமாக, திண்டுக்கல் மாவட்டத்தில் வரதமாநதி அணை, மருதாநதி அணைகள் நிரம்பின.

பரப்பலாறு அணை நிரம்பவில்லை

இதையடுத்து அணைகளில் இருந்து நீர் திறக்கப்பட்டு குளம், கண்மாய்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இதனால் பழநி, ஆத்தூர், நிலக்கோட்டை பகுதிகளில் மட்டும் ஒரு சில குளங்கள் நிரம்பி உள்ளன. மாவட்டத்தில் உள்ள ஆறுகள் இன்று வரை வறண்டே காணப்படுகிறது. ஒட்டன்சத்திரம் அருகே பரப்பலாறு அணை நிரம்பாததால், அதிலிருந்து குளம், கண்மாய்களுக்கு நீர் கொண்டு செல்ல முடியவில்லை. நத்தம், வேடசந்தூர், குஜிலியம்பாறை, தொப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குளம், கண்மாய்களும் வறண்டுள்ளன.

மாவட்டத்தில் பரவலாக உள்ள குளம், கண்மாய்களில் நீர் தேங்கினால்தான் கிணறுகளில் நீர்மட்டம் உயரும். இதைக்கொண்டு இறவை பாசனம் செய்யமுடியும். கண்மாய்களுக்கு தண்ணீர் வந்தால் குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்.

04MAPTR-RASOOLMOHAIDEEN(KANMAI NEWS) ஏ. ரசூல் மொகைதீன் வறண்டுள்ள ஊராட்சி குளங்கள்

திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊராட்சிக்கு சொந்தமான 2093 குளம், கண்மாய்கள் உள்ளன. இவற்றில் பொதுப்பணித்துறை கண்மாய்களில் சில மட்டும் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரால் நிரப்பப்பட்டு வருகிறது. ஊராட்சிகளுக்கு சொந்தமான குளங்கள் பெரும்பாலான வறண்டநிலையில் தான் உள்ளன.

குளம், கண்மாய்களில் நீர்தேங்காததால், திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தமுள்ள 91488 பாசன கிணறுகளில் சுமார் 80 சதவீத கிணறுகளில் இரண்டு மணி நேரம் தான் தண்ணீர் இறைக்கமுடியும் நிலை உள்ளது. நிலத்தடி நீர்மட்டம் உயரவில்லை என்றால், அடுத்த ஆண்டு குடிநீர் பிரச்சினை விரைவில் ஏற்பட்டுவிடும்.

நம்பிக்கையுடன் விவசாயிகள்

இதுகுறித்து விவசாயி ஏ. ரசூல்மொகைதீன் கூறியதாவது: வடகிழக்கு பருவமழை தொடங்கி 10 நாட்களுக்கு மேலாகியும், போதிய அளவு பெய்யாததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதே நிலை தொடர்ந்தால் பயிர்களை காப்பாற்ற முடியாது. ஆட்சியர் டி.ஜி.வினய் முயற்சியால் பல குளங்கள், கண்மாய்கள் தனியார் நிதியுதவியுடன் தூர்வாரப்பட்டு தயார் நிலையில் உள்ளன. ஆனால் பருவமழை கை கொடுக்கவில்லை. ஆனால் மழைக்காலம் முடிய இன்னும் நாட்கள் இருப்பதால் நம்பிக்கையுடன் உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x