Published : 07 Nov 2017 10:22 AM
Last Updated : 07 Nov 2017 10:22 AM
கோ
வை - திருச்சி சாலை வழியாகச் செல்லும் கோவையின் நகரப் பேருந்துகளில் 6 கிலோ மீட்டர் தொலைவு சென்றதும் ஓரிடத்தில், ‘சென்ட்ரல் ஸ்டுடியோ எறங்கு!’ என நடத்துநர் உரக்கச் சொல்வதைக் கேட்கலாம். ஊருக்குப் புதியவர்கள் யாராவது அங்கே இறங்கிப் பார்த்தால் ஸ்டுடியோவும் இருக்காது; சென்ட்ரலும் இருக்காது!
விவரம் தெரிந்த அந்தக் காலத்து மனிதர்களைக் கேட்டால் மட்டும், அந்தப் பேருந்து நிறுத்தத்துக்கு நேர் தென்புறம் உள்ள காம்பவுண்டுக்குள் இருக்கும் அந்தப் பரந்த வெளிதான் சென்ட்ரல் ஸ்டுடியோ இருந்த இடம் என்பார்கள். இப்போது அதனுள்ளே நுழைந்தால் சுமார் அரை ஏக்கருக்கு இருபுறமும் பார்த்தினியம் செடிகள் வளர்ந்து புதர் மண்டிக் கிடக்கிறது. அதைக் கடந்தால் உள்ளே சில பார்சல் அலுவலகங்கள், கம்பெனிகள், இரும்புக் குடோன்கள் வியாபித்திருக்கின்றன.
கனவு காண வைத்தார்கள்
இந்த வளாகத்தில் தான் அந்தக் காலத்தில் தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா, எம்.ஜி.ஆர் உள்ளிட்ட கதாநாயகர்கள் கதாநாயகிகளுடன் டூயட் பாடினார்கள். ‘மன்மத லீலையை வென்றார் உண்டோ.!’ என வெற்றிலைச் சிவப்பு வாயால் பாடி பலரையும் கனவு காண வைத்தார்கள்.
சென்னைக்கு வெளியே சேலத்தில் 1935-ல் டி.ஆர்.சுந்தரம் ‘மாடர்ன் தியேட்டர்ஸ்’ ஸ்டுடியோவை தொடங்கினார். இதுதான் அப்போது அனைத்து வசதிகளும் கொண்ட படப்பிடிப்பு நிலையமாக இருந்தது. இதைப் போலவே கோவையிலும் ஒரு ஸ்டுடியோவை உருவாக்க வேண்டும் என கோவை தொழிலதிபர்கள் முயற்சித்தார்கள். அப்படி உருவானதுதான் கோவை சென்ட்ரல் ஸ்டுடியோ. இதை உருவாக்கியதில் ரங்கசாமி நாயுடு, ஆர்.கே.ராமகிருஷ்ணன் செட்டியார், இயக்குநர் எஸ்.எம்.ஸ்ரீராமலு நாயுடு ஆகியோருக்கு முக்கியப் பங்குண்டு.
மாத ஊதியத்தில்..
ஒலிப்பதிவுக் கூடம், படத்தொகுப்பு நிலையம் என நவீன வசதிகளுடன் சென்ட்ரல் ஸ்டுடியோ அமைக்கப்பட்டது. அப்போதே இங்கு 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள நவீன ரக கேமரா பயன்படுத்தப்பட்டது. கேமரா மேன், ஒலிப்பதிவாளர்கள் உள்ளிட்ட ஜெர்மன்நாட்டு தொழில்நுட்பக் கலைஞர்களும் இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு தலைமையிலான இசைக் குழுவினரும் மாத ஊதியத்தில் இங்கே பணியாற்றினார்கள்.
1937-ல், ஸ்ரீராமலு நாயுடு இயக்கிய ‘துக்காராம்’ இங்குதான் படமாக்கப்பட்டது. பி.யு.சின்னப்பாவை திரையுலகுக்கு அறிமுகம் செய்ததே கோவை சென்ட்ரல் ஸ்டுடியோவின் ஜூபிடர் பிக்சர்ஸ்தான். வெள்ளிவிழா கண்ட எம்.கே.தியாகராஜ பாகவதரின் சிவகவி (1938) இந்நிறுவனத்தின் தயாரிப்புதான். அந்நாளைய புகழ்பெற்ற இயக்குநர்களான ஏ.எஸ்.ஏ.சாமி, எஸ்.எம்.ஸ்ரீராமலு நாயுடு, கிருஷ்ணன்-பஞ்சு, ஏ.பி.நாகராஜன் ஆகியோருக்கும் தேவர் பிலிம்ஸின் சாண்டோ எம்.எம்.சின்னப்பா தேவருக்கும் என்ட்ரி கொடுத்தது இந்த ஸ்டுடியோதான்.
பட்சிராஜா ஸ்டுடியோ
கருணாநிதி, எம்.ஜி.ஆர் இருவரின் திரை வாழ்க்கையை சென்ட்ரல் ஸ்டுடியோவை ஒதுக்கிவிட்டு எழுத முடியாது. ஜி.ராமநாதன், எஸ்.எம்.சுப்பையா நாயுடு, எம்.எஸ்.விஸ்வநாதன், கவிஞர்கள் பாபநாசம் சிவன், கண்ணதாசன் உள்ளிட்டோருக்கும் கோவை சென்ட்ரல் ஸ்டுடியோதான். சென்ட்ரல் ஸ்டுடியோவை உருவாக்கியவர்களில் ஒருவரான ஸ்ரீராமலு நாயுடு, 1946-ல் அதிலிருந்து விலகி, புலியகுளம் பகுதியில் பட்சிராஜா ஸ்டுடியோ என்ற புதிய திரைத்தளத்தை உருவாக்கினார். இந்நிறுவனமும் பல வெற்றிப்படங்களைத் தந்தது.
கருணாநிதியின் கதை வசனத்தில் எம்.ஜி.ஆர் நடித்த ‘மலைக்கள்ளன்’ இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், தமிழ், சிங்களம் என 6 மொழிகளில் ஒரே நேரத்தில் இங்கு தயாரிக்கப்பட்டது. ஸ்ரீராமலு நாயுடு தனியாக பிரிந்து சென்றுவிட்ட நிலையில், ஜூபிடர் பிக்சர்ஸ் சென்ட்ரல் ஸ்டுடியோவை லீசுக்கு எடுத்து நடத்தியது. அவர்களும் குத்தகை முடிந்து சென்னைக்குச் சென்றுவிட்டதால் 1956-ல் சென்ட்ரல் ஸ்டூடியோ மூடப்பட்டது.
அதைத் தொடர்ந்து, சென்ட்ரல் ஸ்டுடியோ இருந்த இடம் பல கைகள் மாறியது. சினிமாக் கம்பெனிகள் எல்லாம் சென்னையை மையம் கொண்டதால் பட்சிராஜா ஸ்டுடியோவும் மூடப்பட்டது. அதன் பிறகும் பல ஆண்டுகள் சுற்றுச் சுவர் முகப்பில் ‘சென்ட்ரல் ஸ்டுடியோ’ என்ற பெயர் மட்டும் இருந்தது.
“20 வருசம் முந்தி, நாங்க இங்க வந்தபோதுகூட செயற்கையாக உருவாக்கப்பட்ட குளங்கள், மலைக் குன்றுகளும், ஒப்பனை அறைகள், சண்டைக் காட்சிகளை படம் பிடிக்கும் பெரிய பெரிய கொட்டகைகள், படங்களுக்குப் பூஜை போடும் விநாயகர் கோயிலும் இங்க இருந்துச்சு. இப்ப, அதெல்லாமே அகற்றப்பட்டு விட்டன. இந்த இடத்தின் பங்குதாரர்கள், இடத்தைப் பிரித்து கட்டிடங்களைக் கட்டி வாடகைக்கு விட்டுட்டாங்க” என்கிறார்கள் இங்குள்ள பார்சல் அலுவலகத்தில் பணிபுரிபவர்கள்.
சென்ட்ரல் ஸ்டுடியோ நிலை இப்படி என்றால் பட்சிராஜா ஸ்டுடியோ கல்யாண மண்டபமாக மாற்றப்பட்டுவிட்டது. இதுகுறித்து நம்மிடம் பேசிய கோவை குறித்த வரலாற்று நூல்களை எழுதியிருக்கும் சி.ஆர்.இளங்கோவன், “அந்தக் காலத்தில் தமிழகத்தில் 5 பிரபலமான சினிமா ஸ்டுடியோக்கள் இருந்தன. அதில் இரண்டு கோவையில்தான் இருந்தது. அப்போது கோவை இன்னொரு கோடம்பாக்கமாக இருந்தது. இங்கு எடுக்கப்பட்ட ஹரிதாஸ் மூன்று தீபாவளிகள் கண்டது.
நினைவுச் சின்னங்கள் போல்..
சூப்பர் ஸ்டார் கலாச்சாரம், தியாராஜ பாகவதர் காலத்தில் இங்கிருந்தே ஆரம்பித்தது. அந்தக் காலத்து இளைஞர்கள் பாகவதரைப் போலவே தலைமுடி வைத்துக்கொள்வார்கள்; ஸ்டைலாகப் பாடுவார்கள். இங்கு எடுக்கப்பட்ட சினிமாக்கள் ஹிட் ஆனதுக்கு ஸ்ரீராமுலு போன்றவர்களே காரணம். சரியான திரைத்துறை வாரிசுகள் உருவாகாமல் போனதால்தான் கோவையில் சினிமா ஸ்டுடியோக்கள் வீழ்ச்சி கண்டது. தொடர்ந்து இங்கே சினிமா ஸ்டுடியோக்களை செயல்பட வைக்க அரசும் முயற்சி எடுத்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாததால், கோவையில் பிரபலமான சினிமா ஸ்டுடியோக்கள் இருந்த இடங்கள் இப்போது நினைவுச் சின்னங்கள் போல் ஆகிவிட்டன” என்று சொன்னார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT