Last Updated : 22 Nov, 2017 08:17 AM

 

Published : 22 Nov 2017 08:17 AM
Last Updated : 22 Nov 2017 08:17 AM

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான அடல் பென்ஷன் யோஜனா திட்டத்துக்கு வரவேற்பு: தேசிய அளவில் தமிழகம் 4-வது இடத்தைப் பிடித்தது

அமைப்புசாரா தொழிலாளர்களின் நலனுக்காக தொடங்கப்பட்ட அடல் பென் ஷன் யோஜனா திட்டத்துக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் காரணமாக, சுமார் 4.70 லட்சம் பேர் இத்திட்டத்தில் சேர்ந்துள்ளனர். இதன்மூலம், இந்திய அளவில் தமிழகம் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது.

அமைப்புசாரா துறைகளில் வேலை செய்பவர்கள் ஓய்வுக் காலத்துக்குப் பின் ஓய்வூதியம் பெற வேண்டும் என்பதற்காக அடல் பென்ஷன் யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த 2015, மே மாதம் அறிமுகப்படுத்தியது. அதாவது, ஒருவர் தனது ஓய்வு காலமான 60 வயதுக்குப் பின் மாதம் ரூபாய் ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை ஓய்வூதியம் பெற வேண்டும் என்பது தான் இத்திட்டத்தின் நோக்கமாகும்.

18 வயது முதல் 40 வயதுடைய வங்கி சேமிப்புக் கணக்கு வைத்துள்ள இந்தியர் யார் வேண்டுமானாலும் இத்திட்டத்தில் இணையலாம். இந்தத் திட்டத்தில் அரசு தன் சார்பாக வருடத்துக்கு ரூ.1,000-ம் அல்லது நாம் செலுத்தும் தொகையில் 50 சதவீதம் இவற்றில் எது குறைவோ அதைச் செலுத்தும்.

பென்ஷன் தொகை தரக்கூடியது போன்ற சமூக பாதுகாப்பு திட்டங்களில் ஏற்கெனவே இணைந்திருப்பவர்கள், வரிக்கணக்கு தாக்கல் செய்பவர்களும் இத்திட்டத்தில் சேரமுடியும் என்றாலும் அரசு தன் சார்பாக செலுத்தும் தொகையை இவர்களுக்கு வழங்காது.

எந்த வங்கிக் கிளையில் உங்களுக்கு சேமிப்புக் கணக்கு இருக்கிறதோ, அந்த வங்கிக் கிளையில் இந்த பென்ஷன் திட்டத்துக்கான விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து, முகவரிச் சான்று, புகைப்பட அடையாள அட்டை, ஆதார் அட்டை போன்றவற்றைத் தரவேண்டும். வங்கி உங்களுக்கு ஒரு ‘ப்ரான் எண்’ (PRAN NO.) வழங்கும். அந்த ‘ப்ரான் எண்ணுக்கு நம் கணக்கிலிருந்து பணம் கிரெடிட் செய்யப்படும். இந்த ‘ப்ரான் எண்’ நாம் அடல் திட்டத்தில் இணைந்ததற்கு ஆதாரமாக இருக்கும்.

தமிழகத்தில் இத்திட்டத்தில் சேர அமைப்புசாரா தொழிலாளர்கள் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இதுகுறித்து, தமிழக மாநில அளவிலான வங்கிகள் கூட்டமைப்பைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

அடல் பென்ஷன் யோஜனா திட்டம் குறித்து மத்திய அரசும், வங்கிகளும் மக்களிடையே பிரச்சாரம் மேற்கொண்டன. இதன் விளைவாக இத்திட்டத்துக்கு தமிழகத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இத்திட்டம் தொடங்கப்பட்ட 2015-16ல் தமிழகத்தில் ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 602 பேர் இத்திட்டத்தில் சேர்ந்தனர். இது படிப்படியாக அதிகரித்து நடப்பு ஆண்டில் 4 லட்சத்து 70 ஆயிரத்து 181 ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம், இந்திய அளவில் தமிழகம் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது.

இத்திட்டத்தில் அதிகம் பேரை சேர்த்த வகையில் பாரத ஸ்டேட் வங்கி முதலிடத்திலும், 2-வது இடத்தை பேங்க் ஆப் பரோடாவும், 3-வது இடத்தை ஆந்திரா வங்கியும் பிடித்துள்ளன. இத்திட்டத்தில் மக்கள் தானாக முன்வந்து ஆர்வத்துடன் சேரும்பட்சத்தில் தமிழகம் முதலிடத்தைப் பிடிக்கும் வாய்ப்புள்ளது.

இவ்வாறு அதிகாரி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x