Published : 05 Aug 2023 12:35 AM
Last Updated : 05 Aug 2023 12:35 AM
திருநெல்வேலி: நெய்வேலி என்எல்சியில் அமைய உள்ள மூன்றாவது சுரங்கம் குறித்து தமிழக முதலமைச்சர் வாய் திறக்கவில்லை. நிலக்கரி சுரங்கம் அமைக்க அனுமதிக்க மாட்டோம் என முதல்வர் சட்டமன்றத்தில் கூறிய உறுதிமொழி என்னவானது. அனைத்து விவகாரத்திலும் பாஜகவை எதிர்க்கும் திமுக என்எல்சிக்கும் மட்டும் ஏன் ஆதரவாக செயல்படுகிறது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.
என்எல்சிக்கு எதிராக நெய்வேலியில் நடந்த போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட பாமகவை சேர்ந்த 20 பேர் பாளையங்கோட்டை மத்திய சிறையிலும், 18 பேர் மதுரை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை அன்புமணி ராமதாஸ் நேற்று பார்த்து ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: என்எல்சிக்கு எதிராக அமைதியாகத்தான் போராட்டம் நடைபெற்றது. அதில் சில சமூக விரோதிகள் ஊடுருவி கலவரத்தை ஏற்படுத்தினர். காவல் துறையினரும் எங்களது கட்சியினரை கல்வீசி தாக்கி மண்டைகளை உடைத்தனர். என்எல்சிக்கு எதிராக யாரும் போராடக் கூடாது என்பதற்காகவே கடுமையான நடவடிக்கைகளை காவல்துறை எடுத்து வருகிறது. என்எல்சியில் 3-வது குவாரி தோண்டப்பட உள்ளது. இதற்காக அப்பகுதியில் உள்ள 23 கிராமங்களில் 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு தமிழக அரசு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
புதிய நிலக்கரி சுரங்கம் அமைக்கப்படாது என சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உறுதிமொழி அளித்திருந்தார். இப்போது என்எல்சி 3-வது சுரங்கம் அமைக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் அதுகுறித்து ஏன் ஸ்டாலின் வாய் திறக்கவில்லை.
என்எல்சி வெளியேற வேண்டும் என்பதே எங்களது நோக்கம். இப்போது விளைநிலங்களை அழித்துவிட்டு பின்னர் சாப்பாட்டிற்கு என்ன செய்ய போகிறோம். அனைத்து விவகாரத்திலும் பாஜகவை எதிர்க்கும் திமுக, என்எல்சிக்கு மட்டும் ஏன் ஆதரவாக இருக்கிறது. வரும் சில ஆண்டுகளில் என்எல்சி தனியாருக்கு கொடுக்கப்பட இருக்கிறது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தமிழர்கள் மீது அக்கறை இருந்தால், டெல்லி சென்று நிலக்கரியை இறக்குமதி செய்து அதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய கோரிக்கை வைக்கட்டும்.
மத்திய, மாநில அரசுகளை கண்டித்துத்தான் நெய்வேலி போராட்டம் நடக்கிறது. என்எல்சி விவகாரம் என்பது மண், மக்களுக்கு எதிரான பிரச்சினை. தமிழகத்தில் இருக்கும் அனைவரும் என்எல்சிக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும். தொடர்ந்து எங்கள் போராட்டம் கடுமையான முறையில் நடக்கும். இது தேர்தலுக்காக நடத்தபட்ட போராட்டமல்ல.
பூடான் நாட்டில் புகையிலை பொருட்களுக்கு தடை உள்ளது போல் இந்தியாவிலும் வரவேண்டும். ஒவ்வொரு ஆண்டும் புகையிலையால் 13.5 லட்சம் மரணங்கள் நிகழ்கிறது. புகைப்பிடித்தல் தொடர்பான கடுமையான சட்டங்கள் கொண்டுவந்து அதனை தடுக்க உறுதி செய்ய வேண்டும். வரும் 2026 -ம் ஆண்டு பாமக மற்றும் அதனையொட்டியுள்ள நோக்கம் உள்ள கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பதே எங்கள் இலக்கு. அதற்கான நடவடிக்கைகள் 2024 -ல் தொடங்கும் என்று தெரிவித்தார்.
அப்போது, கட்சியின் முன்னாள் தலைவர் சட்டப் பேரவை உறுப்பினர் கோ. க. மணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...