Published : 04 Aug 2023 08:14 PM
Last Updated : 04 Aug 2023 08:14 PM

கணவரை இழந்தவர் என்பதால் கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுப்பதா? - உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: கணவரை இழந்தவர் என்பதால் கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுப்பதா? என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், மனுதாரரை கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கவும், அவருக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தைச் சேர்ந்த பெண், தங்கமணி என்பவர் தாக்கல் செய்த மனுவில்,"ஈரோடு மாவட்டம் நம்பியூர் தாலுக்காவில் பெரிய கருப்பராயன் கோயில் உள்ளது. எனது கணவர் இந்த கோயிலில் பூசாரியாக இருந்தார். பின்னர் அவர் இறந்துவிட்டார்.

தற்போது, இந்த கோயிலில் ஆடி திருவிழா வரும் 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடக்கிறது. இந்தத் திருவிழாவில் நானும் எனது மகனும் கலந்து கொள்ளவிருந்தோம். ஆனால் கோயில் நிர்வாகத்தினர் நான் கணவரை இழந்தவள் என்பதால் என்னை கோயிலுக்குள் வரக்கூடாது என்று தெரிவித்துள்ளனர்.

இதனால் நான் கோயிலுக்குள் செல்ல முடியவில்லை.எனவே, எனக்கும் என்னுடைய மகனுக்கும் உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கணவரை இழந்தவர் என்பதால் கோயிலுக்குள் அனுமதி மறுப்பதா? என்று கேள்வி எழுப்பினார்.

பின்னர், இது தவறானது. மனுதாரரை கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுப்பது நியாயமற்றது. எனவே அவரை கோயில் திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும். அவருக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x