Published : 04 Aug 2023 05:12 PM
Last Updated : 04 Aug 2023 05:12 PM

பாழடைந்து வரும் ‘ஸ்ட்ராங் ரூம்’... ‘எங்களுக்கும் நோய் இருக்காதா?’ - வேலூர் மத்திய சிறையால் குமுறும் காவலர்கள்

வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பாழடைந்துள்ள சிறைவாசிகளுக்கு சிகிச்சை அளிக்கும் கட்டிடம்.படங்கள்: வி.எம்.மணிநாதன்.

வேலூர்: வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிறை கைதிகளுக்காக கட்டப்பட்ட ‘ஸ்ட்ராங் ரூம்’ கட்டிடம் சிதிலமடைந்து வருவதுடன், மருத்துவமனையின் மருந்தகமாக பயன்படுத்தப்படுகிறது. இதனால், இணை நோய் பாதிப்புள்ள கைதிகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும், பாதுகாப்பு அளிப்பதிலும் சிரமம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.

வேலூர் தொரப்பாடியில் ஆண்கள் மத்திய சிறைச்சாலை கடந்த 1867-ம் ஆண்டு கட்டப்பட்டது. சுமார் 153 ஏக்கர் பரப்பளவுடன் வட்ட வடிவில் 7 தொகுதிகளையும் கண் காணிக்கும் வகையில் உயர் கண்காணிப்பு கோபுரத்துடன் கட்டப்பட்டுள்ளது. இங்கு, ஒரே நேரத்தில் 2,100 கைதிகளை அடைத்து வைக்க முடியும்.

சுதந்திர போராட்டத்தின் போது கைதான முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை உள்ளிட்டோர் வேலூர் சிறையில் பல்வேறு கால கட்டங்களில் அடைக்கப்பட்டனர். வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் தற்போது 700-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த சில மாதங்களாகவே வேலூர் மத்திய சிறை நிர்வாகம் நடந்துகொள்ளும் முறையால் காவல் துறையினர் கடுமையான அதிருப்தியில் உள்ளனர்.

மருத்துவ பரிசோதனை: பொதுவாக, காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்படும் நிலையில் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அவர்களின் உடல் நிலை குறித்து பரிசோதனை செய்து, அதன் அறிக்கையுடன் மத்திய சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கின்றனர்.

அப்படி, வேலூர் மத்திய சிறைக்குள் அடைக்கும்போது கைதிகளுக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பாதிப்பு அதிகம் இருந்தால் சிறைக்குள் அனுமதிக்காமல் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவரை அனுமதித்து சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் குறைந்த பிறகே மீண்டும் சிறைக்குள் அனுமதிக்கின்றனர்.

இந்த இடைப்பட்ட காலத்தில் கைதியின் காவலுக்கு செல்லும் காவலர்கள் அந்த கைதியுடன் மருத்துவமனையில் பாதுகாப்புக்காக இருக்க வேண்டியுள்ளது. இது பாதுகாப்பு பணிக்கு செல்லும் காவலர்களுக்கு அதிக மன அழுத்தத்தையும், தேவையில்லாத பதற்றத்தையும் அதிகரிப்பதாக புகார் எழுந்துள்ளது.

‘வேலூர் மத்திய சிறைக்குள் மருத்துவமனை இயங்கி வருகிறது. அங்கு மருத்துவர், செவிலியர், உதவியாளர் என இருக்கும்போது, எதற்காக மீண்டும் மருத்துவமனைக்கு அனுப்பி எங்கள் நேரத்தையும், கவலையையும் சிறை அதிகாரிகள் அதிகரிக்கின்றனர். இதனால், காவல் நிலைய வழக்கமான பணியும் கிடப்பில் போட வேண்டியுள்ளது. குடும்பத்தையும் கவனிக்க முடியாத நிலையில் எப்போதுதான் கைதியை சிறைக்குள் அடைப்போம் என காத்திருக்க வேண்டியுள்ளது’ என காவலர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

‘‘வேலூர் மத்திய சிறை நிர்வாகம் கடந்த சில மாதங்களாக இப்படி ‘ரஃப் அண்ட் டஃப்பாக’ நடந்து கொள்கிறது’’ என விவரிக்கும் சில காவல் நிலைய ஆய்வாளர்கள், ‘‘வேலூர் போன்ற நகர காவல் நிலையங்களில் தினசரி கைதிகளை சிறைச்சாலைக்கு அழைத்து செல்ல வேண்டியுள்ளது. அங்கு, மருத்துவ காரணங்களால் எங்களை அல்லாட வைக்கின்றனர்.

ஏற்கெனவே, ஆட்கள் பற்றாக்குறையால் பணிச்சுமை அதிகரித்து மன உளைச்சலில் இருக்கிறோம். இதில், சிறை நிர்வாகம் எங்களை மனிதர்களாகவும் மதிப்பதில்லை. சாதாரண வார்டில் ஒரு கைதியை படுக்க வைத்து சிகிச்சை அளிக்கும்போது அந்த வார்டில் இருக்கும் மற்ற நோயாளிகளின் நிலையையும் கொஞ்சம் யோசிக்க வேண்டும். எங்களுக்கெல்லம் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இல்லையா’’ என்றனர்.

ஆண்கள் சிறைவாசிகளுக்கு சிகிச்சை அளிக்கும்
அறையில் மருந்துகள் வைக்கும் கிடங்காக மாறியுள்ளது.

பாழடைந்த ஸ்ட்ராங் ரூம்: தமிழ்நாட்டில் ஒவ்வொரு மத்திய சிறை உள்ள மாவட்டங்களில் செயல்படும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிறை கைதிகளுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக ‘ஸ்ட்ராங் ரூம்’ கட்டப்பட்டுள்ளது. வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஆண்கள் மற்றும் பெண் கைதிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் கடந்த 2009-ம் ஆண்டு ‘ஸ்ட்ராங் ரூம்’ கட்டிடத்தை அப்போதைய சிறைத்துறை தலைவர் நட்ராஜ் திறந்து வைத்தார். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியாக 10 படுக்கைகள் கொண்டதாக கட்டப்பட்டுள்ளன.

தொடர்ந்து, 10 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த வளாகம் கடந்த 2019-ம் ஆண்டுக்கு பிறகு கொஞ்சம், கொஞ்சமாக பயன்பாட்டில் இல்லாமல் போனது. கரோனா காலத்தில் மூடப்பட்ட அந்த கட்டிடம் பாழடைந்து வருகிறது. ஆண்கள் பிரிவு வளாகத்தை மட்டும் மருத்துவமனை நிர்வாகம் மருந்து கிடங்காக பயன்படுத்தி வருகிறது. பெண்கள் வளாக கட்டிடம் சிதிலமடைந்து வருகிறது.

‘‘ஸ்ட்ராங் ரூம் பயன்பாட்டில் இல்லாததால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் கைதிகள் சாதாரண நோயாளிகள் உள்ள வார்டுகளில் அனுமதிக்கப்படும்போது பாதுகாப்புக்கு இருக்கும் காவலர்கள் கட்டாயம் கண்ணில் எண்ணெய் ஊற்றி கவனிக்க வேண்டி இருக்கிறது. ‘ஸ்ட்ராங் ரூம்’ இருந்தால் பாதுகாப்பு பணி கொஞ்சம் சுலபமாக இருக்கும்’’ என்கின்றனர் காவல் துறையினர்.

சிறை நிர்வாகம் விளக்கம்: சிறைக்கு அழைத்து வரப்படும் அனைத்து கைதிகளின் உயரம், எடையளவு, இணை நோய் பாதிப்புகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சேகரித்து கேட்டறிந்த பிறகே உள்ளே அனுமதிக்க வேண்டும். அவருக்கு ஏதாவது மருத்துவ பிரச்சினை ஏற்பட்டால் அதற்கெல்லாம் நாங்கள்தான் பதிலளிக்க வேண்டும். சிறை மருத்துவமனையில் போதுமான அளவுக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்க்கான மாத்திரைகள் உள்ளன.

குற்றவாளியாக அழைத்து வரும் நபர்களுக்கு அவை அதிகமாக இருந்தால் அதை குறைக்கத்தான் மருத்துவமனையில் அனுமதிக்க கூறுகிறோம். வேலூர் சிறையில் 2 மருத்துவர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். கைதிகளுக்கு ஏதாவது உடல்நிலை பாதிப்பு ஏற்படாமல் அரசு மருத்துவமனைக்கு அனுப்ப ஆயுதப்படையில் இருந்து காவலர்களை உடனடியாக அனுப்புவதில்லை. ‘ஸ்ட்ராங் ரூம்’ இல்லை என்ற கவலை எங்களுக்கும் இருக்கிறது.

ஏனென்றால் சிறை காவலர்களும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். ‘ஸ்ட்ராங் ரூமில்’ 10 கைதிகளுக்கு கொடுக்கின்ற பாதுகாப்பும், ஒரு கைதிக்கு கொடுக்கின்ற பாதுகாப்பு எண்ணிக்கையும் ஒன்றாக உள்ளது. உதாரணமாக ‘ஸ்ட்ராங் ரூம்’ இருந்தால் அங்கு ஒரு தலைமை வார்டர் உள்ளிட்ட 3 பேர் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்.

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் இருக்கும் ‘ஸ்ட்ராங் ரூமை’ சீரமைத்து கொடுக்குமாறு டீனிடம் பேசி இருக்கிறோம். பொதுப்பணித்துறை மூலம் அந்த இடத்தை சரி செய்வதாக கூறி இருக்கிறார்கள். பெண்கள் ‘ஸ்ட்ராங் ரூம்’’ மட்டும் மோசமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதை எப்படியாவது சரி செய்துகொடுக்குமாறு கேட்டுள்ளோம்’’ என தெரிவித்தனர்.

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சிதிலமடைந்து வரும் ‘ஸ்ட்ராங் ரூம்’ கட்டிடத்தை விரைவில் சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் சிறைத்துறை, காவல் துறையினர் இடையே ஏற்பட்டுள்ள ‘ரத்தஅழுத்தம், சர்க்கரை நோய்’ உரசலை தவிர்க்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x