Published : 04 Aug 2023 04:31 PM
Last Updated : 04 Aug 2023 04:31 PM
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் சிதிலமடைந்துள்ள சித்த மருத்துவ குடியிருப்பு கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிய குடியிருப்பு கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ‘சித்த மருத்துவம்’ மீதான பாராமுகம் தொடர்கிறது. ஆங்கில முறை (அலோபதி) மருத்துவ சிகிச்சைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை சித்த மருத்துவத்துக்கு மத்திய, மாநில அரசுகள் கொடுப்பதில்லை. மருத்துவர், பணியாளர்கள் நியமனம், குடியிருப்பு மற்றும் நிதி ஒதுக்கீடு என அனைத்தும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் சுகாதாரத் துறை செயல்படுவதை எளிதாக அறிந்து கொள்ளலாம்.
இதன் தாக்கம், திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் உள்ள ஜமுனாமரத்தூரில் இயங்கும் சித்த மருத்துவமனை ஊழியர்களின் குடியிருப்பில் எதிரொலிக்கிறது. பழங்குடியின மக்களுக்காக, முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ஆட்சியில் குடியிருப்புடன் கூடிய சித்த மருத்துவமனை தொடங்க ஆணையிடப்பட்டுள்ளது.
உதவி சித்த மருத்துவர், மருந்தாளுநர் மற்றும் மருத்துவ பணியாளர் தங்குவதற்காக 3 வீடுகளை கொண்ட குடியிருப்பும், சித்த மருத்துவமனையும் கட்டப்பட்டுள்ளன. இந்த 3 பணியிடங்களும் முழுமையாக நிரப்பப்படுவதில்லை. ஏதாவது ஒரு பணியிடம் காலியாகவே இருக்கும். தற்போதும், மருத்துவ பணியாளர் பணியிடம் காலியாக உள்ளது.
இந்நிலையில், 35 ஆண்டுகளாக உள்ள சித்த மருத்துவர் உள்ளிட்டவர்களின் குடியிருப்பு கட்டிடம் சிதிலமடைந்துவிட்டது. சித்த மருத்துவமனையை சீரமைக்கும் தமிழக அரசின் பொதுப்பணி துறை நிர்வாகம், குடியிருப்பை சீரமைக்க முன்வரவில்லை. ஜன்னல் கண்ணாடி உடைந்தும், மேற்கூரை மற்றும் தரையின் சிமென்ட் பூச்சு பெயர்ந்தும் கிடக்கிறது. இதனால், வசிப்பதற்கு தகுதியற்ற கட்டிடமாக திகழ்கிறது.
கட்டிடம் பலவீனமாக உள்ளதால், மேற்கூரை பெயர்ந்து விழுந்துவிடும் அச்சத்தில் ஊழியர்கள் உள்ளனர். மேலும், பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகளின் நடமாட்டமும், சர்வ சாதாரணமாக உள்ளதால் அச்சம் ஏற்பட்டுள்ளது. பழங்குடியின மக்களின் உடல் நலனில் கவனம் செலுத்தி உயிரை பாதுகாக்கும் சித்த மருத்துவ பணியாளர்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ளது.
கூடுதல் செலவினம்... இதனால், குடியிருப்பில் தங்குவதை உதவி சித்த மருத்துவ அலுவலர், மருந்தாளுநர் மற்றும் மருத்துவ பணியாளர் ஆகியோர் தவிர்த்துள்ளனர். இவர்கள், தனியே வீடு வாடகைக்கு எடுத்து தங்குகின்றனர்.
அரசாங்க குடியிருப்பில் தங்கவில்லை என்றாலும், அவர்களது ஊதியத்தில் வீட்டு வாடகை தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. ஊழியர்களின் நிலைக்கு ஏற்ப ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் பிடித்தம் செய்வது தொடர்கிறது. மேலும், ஜவ்வாதுமலையில் வீடு வாடகைக்கு எடுத்து தங்குவதால் கூடுதல் செலவினம் ஏற்படுகிறது.
கடிதத்துக்கு உயிரோட்டம்... சித்த மருத்துவமனை குடியிருப்பு கட்டிடத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாக உள்ளதால், கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிய குடியிருப்பு கட்டிடம் கட்டிக் கொடுக்க வலியுறுத்தப்படுகிறது. இக்கோரிக்கையை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகமும் மற்றும் பொதுப்பணித் துறையும் முன்வரவில்லை என்ற ஆதங்கம் தொடர்கிறது.
புதிய குடியிருப்பு கட்டிக் கொடுக்க வேண்டும் என பொதுப்பணித் துறைக்கு மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம் மூலம் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இக்கடிதத்துக்கு உயிரோட்டம் கொடுக்கும் வகையில், தொடர்ந்து அழுத்தம் கொடுத்து, குடியிருப்பு கட்டிடம் கட்டிக் கொடுக்க மாவட்ட சித்த மருத்துவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வலுப்பெற்றுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment