Published : 04 Aug 2023 04:55 PM
Last Updated : 04 Aug 2023 04:55 PM

ராகுல் காந்தி வழக்கு | “பாஜக மமதைக்கு அணைபோட்ட உச்ச நீதிமன்றம்” - மார்க்சிஸ்ட், விசிக கருத்து

கே.பாலகிருஷ்ணன் மற்றும் திருமாவளவன் | கோப்புப் படம்

சென்னை: ராகுல் காந்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு மார்க்சிஸ்ட், விசிக ஆகிய கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

கே.பாலகிருஷ்ணன்: “மோசடிப் பேர்வழிகளின் பெயர்களில் மோடி என்ற பெயர் இருப்பதை குறிப்பிட்டு ராகுல் காந்தி பேசியதற்காக குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம் அவருக்கு உச்சபட்சமாக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது. இதைத் தொடர்ந்து அவசரகதியில் அவருடைய எம்.பி., பதவி பறிக்கப்பட்டது. வசித்துவந்த வீடும் காலி செய்யப்பட்டது.

இந்த தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. பதவியை பறிக்கும் விதத்தில் 2 ஆண்டுகள் உச்சபட்ச தண்டனை வழங்கிட எந்தக் காரணமும் தீர்ப்பில் சொல்லப்படவில்லை என்றதுடன், பதவியை பறித்ததால் மக்களின் ஜனநாயக உரிமையையும் பாதித்துள்ளது என உச்ச நீதிமன்றம் சரியாகக் சுட்டியுள்ளது.

அதானி - மோடி இடையிலான கள்ளக்கூட்டினை நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்தி பேசியதற்கு பழிவாங்கும் நோக்கிலேயே பாஜக இந்த வழக்கை கையில் எடுத்தது. இவ்வாறுதான் மோடி ஆட்சி தன்னுடைய அரசியல் நோக்கங்களுக்காக எதிர்க்கட்சிகளை முடக்கும் விதத்தில் ஜனநாயகத்தின் அனைத்து அம்சங்களையும் சீர்குலைக்கிறது. ஆனால், அந்த மமதைக்கு உச்ச நீதிமன்றம் அணைபோட்டுள்ளது. 'இந்தியா' இன்னும் வலிமையோடு எழுந்து நின்று, எதேச்சதிகாரக் கூட்டத்தை வீட்டுக்கு அனுப்பும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

திருமாவளவன்: “ராகுல் காந்திக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகள். நீதித்துறை சங்பரிவார்களையும், அவர்களின் தீங்கான செயல்திட்டங்களையும் அம்பலப்படுத்தியுள்ளது.
இது ஜனநாயகத்தின் மகத்தான வெற்றி” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

முன்னதாக, மோடி பெயர் அவதூறு வழக்கில் காங்கிரஸின் முக்கியத் தலைவர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. | விரிவாக வாசிக்க > ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x