Published : 04 Aug 2023 03:39 PM
Last Updated : 04 Aug 2023 03:39 PM
அரியலூர்: அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் சோழர்களின் பெருமைகள், ராஜேந்திர சோழனின் பெருமைகளை உணர்த்தும் வகையில் நவீன உலக தரத்திலான அருங்காட்சியகம் அமைய உள்ள இடத்தை தொல்லியல் துறை அமைச்சரும் நிதி அமைச்சருமான தங்கம் தென்னரசு நேரில் பார்வையிட்டு இன்று (ஆக.04) ஆய்வு செய்தார். அப்போது, அருங்காட்சியகம் அமைய உள்ள இடம், பரப்பளவு, மேற்கொள்ளப்படும் வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், மாவட்ட ஆட்சியர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா, எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, ''கங்கைகொண்ட சோழபுரத்தில் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கங்கைகொண்ட சோழபுரத்தில் சோழர்களின் பெருமைகளையும், குறிப்பாக ராஜேந்திர சோழனின் பெருமைகளை உலகுக்கு பறைசாற்றும் வகையில் உலக தரத்திலான அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் அறிவித்திருந்தார்.
அருங்காட்சியகம் எந்த இடத்தில் அமைந்தால் சிறப்பாக இருக்கும் என்பதை கண்டறிய தற்பொழுது ஆய்வு மேற்கொண்டேன். இதில் இரண்டு இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கோயிலுக்கு அருகில் உள்ள இடம் மற்றும் அகழ்வாராய்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய குருவாலப்பர் கோயில் உள்ளிட்ட இரண்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு இடங்களில் எந்த இடம் சிறப்பாக இருக்கும், அதிக அளவு பார்வையாளர்களை ஈர்க்கக்கூடிய இடமாக இருக்கும் என்பதை கண்டறியும் பணியை தொடங்கி உள்ளோம்.
இந்தத் திட்டத்தின் முக்கியத்துவத்தை கருதி விரைவாக முடிக்க வேண்டும் எனவும், மக்களை கவரும் வகையில் சிறப்பாக உலக தரத்தில் இந்த அருங்காட்சியகம் அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டுள்ளது. இந்தியாவிலேயே மிக அதிகமாக எல்லோரும் வந்து பாராட்டக்கூடிய இடம் கங்கைகொண்ட சோழபுரம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT