Published : 04 Aug 2023 04:35 AM
Last Updated : 04 Aug 2023 04:35 AM

இந்திய ராணுவ மேஜர் ஜெனரலான முதல் தமிழ் பெண்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: இந்திய ராணுவ மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்ற முதல் தமிழ்ப் பெண் இக்னேசியஸ் டெலாஸ் புளோராவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் இக்னேசியஸ் டெலாஸ் புளோரா. இவர் இந்திய ராணுவத்தின் மருத்துவ (Nursing) பிரிவில் சேர்ந்து பணியாற்றி வருகிறார். படிப்படியாக பல்வேறு பதவி உயர்வுகள் பெற்று, தற்போது மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றுள்ளார். தமிழகத்தில் இப்பதவியை பெற்றுள்ள முதல் பெண் இவராவார். இவருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,"மேஜர் ஜெனரல் இக்னேசியஸ் டெலாஸ் புளோராவின் மகத்தான சாதனைக்கு பாராட்டுகள். தமிழ்நாட்டில் இருந்து முதல் பெண் மேஜர் ஜெனரலாக அவர் உயர்ந்திருப்பது சிறப்பான மைல் கல்லாகும். அவரது அபாரமான பணிக்கும், சேவைக்கும், ஆர்வத்துக்கும் எனது வணக்கங்கள்" என குறிப்பிட்டுள்ளார்.

மேஜர் ஜெனரல் இக்னேசியஸ் டெலாஸ் புளோராவுக்கு இந்திய ராணுவத்தின் வட இந்திய பிரிவு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து நேற்று முன்தினம் பதிவிட்டிருந்தது. அதை ரீட்வீட் செய்து முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, இந்திய ராணுவத்தின் வட இந்திய பிரிவு தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்த வாழ்த்து பதிவை நேற்று முன்தினம் நீக்கியது.

ஏற்கெனவே மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் மோதல் போக்கு நிலவி வருவதால், அமலாக்கத்துறை தொடர்ந்து தமிழகத்தில் முகாமிட்டுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்த பிறகு, ராணுவத்தின் ட்வீட் நீக்கப்பட்டது சர்ச்சையானது. இதற்கு கண்டனம் தெரிவித்த திமுக எம்பி கனிமொழி இந்திய ராணுவத்திடம் விளக்கம் கேட்டிருந்தார்.

இதற்கிடையில் ஒருங்கிணைந்த பாதுகாப்பு அதிகாரிகள் தலைமையகம் (Integrated Defence Staff) தனது ட்விட்டர் பக்கத்தில், இக்னேசியஸ் டெலாஸ் புளோராவுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டிருந்தது. அதில் "இந்த உயர் பதவியை பெற்ற முதல் தமிழ் பெண் இவராவார். இவர் பெண்கள் அதிகாரம் பெறுவதற்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்" என தெரிவித்துள்ளது. இந்த பதிவை, இந்திய ராணுவத்தின் வட இந்திய பிரிவு ரீட்வீட் செய்து, வாழ்த்து பதிவிட்டுள்ளது.

இது தொடர்பாக ராணுவ அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளித்ததாவது: அவர் பிரிகேடியர் பதவியில் இருக்கும் வரை அவர் வட இந்திய பிரிவு ராணுவ கட்டுப்பாட்டில் இருந்தார். தற்போது மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்ற நிலையில், வட இந்திய ராணுவ பிரிவு பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டிருந்தது. ஆனால் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்ற பிறகு, அவர் ஒருங்கிணைந்த பாதுகாப்பு அதிகாரிகள் தலைமையகத்தின் கீழ் வருகிறார். அதனால் அதன் ட்விட்டர் பக்கத்தில்தான் முதலில் வாழ்த்து பதிவிட வேண்டும். எனவே வட இந்திய ராணுவ பிரிவு பதிவிட்ட வாழ்த்து ட்வீட் நீக்கப்பட்டது. இதில் அரசியல் ஏதும் இல்லை. இவ்வாறு விளக்கம் அளித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x