Published : 04 Aug 2023 05:20 AM
Last Updated : 04 Aug 2023 05:20 AM

2024 உலக முதலீட்டாளர் மாநாட்டில் மக்கள் நலனுக்கான முதலீடுகளை ஈர்க்க வேண்டும்: பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை: திமுக அரசு 2024-ம் ஆண்டு ஜனவரியில் நடத்தும் உலக முதலீட்டாளர் மாநாட்டில் மக்கள் நலனுக்கான முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

திமுக அரசு, கடந்த 27 மாதகாலஆட்சியில் தமிழகத்தைப் பல துறைகளில் பெரும் பின்னடைவில் நிறுத்தியுள்ளது.

அந்நிய நேரடி முதலீடு ஈர்த்தலில் 2020-2021 ஆண்டில் 3-வது இடத்தில் இருந்த தமிழகத்தை, 2022-23-ல்27.7 சதவீதம் குறைவாக அந்நியமுதலீட்டை ஈர்த்து, 8-வது இடத்துக்குப் பின்னுக்குத் தள்ளியதுதான் முதல்வரின் சாதனை. தமிழகத்துக்கு இந்த ஆட்சியாளர்கள் கொண்டு வந்ததாகக் கூறப்பட்ட அனைத்து முதலீடுகளும் காகிதங்களில்தான் உள்ளதே தவிர, நிஜத்தில் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை.

தமிழகத்துக்குப் பெருமளவில் அந்நிய நேரடி முதலீட்டை அதிமுகஅரசு ஈர்த்த நிலையில், திமுகஆட்சியில், முதலீடுகள் இந்தியாவின் வேறு மாநிலங்களுக்குச் செல்வதைத் தொழில்துறையினரும், வேலைவாய்ப்புக்காகக் காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களும் கவலையுடன் பார்த்துக் கொண்டுள்ளனர். இதற்கான பதில், வரும் மக்களவை பொதுத் தேர்தலில் கண்டிப்பாகத் தெரியவரும்.

தமிழகத்துக்கு அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளுக்கு 2 முறை சுற்றுப்பயணம் செய்ததாகக் கூறும் முதல்வர், அவர் குறிப்பிட்டதைப் போல் எந்தவொரு முதலீட்டையும் கொண்டு வந்ததாகத் தெரியவில்லை.

எனவே, 2024-ம் ஆண்டு ஜனவரியில், திமுக அரசு நடத்த உள்ள உலகத் தொழில் முதலீட்டாளர் மாநாட்டிலாவது, தமிழக மக்களின் நலனுக்கான திட்டங்களையும், அதற்கான முதலீடுகளையும் ஈர்க்கவேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x