Published : 04 Aug 2023 05:08 AM
Last Updated : 04 Aug 2023 05:08 AM
சென்னை: ஆதார் இணைக்கப்படாத குழந்தைகளின் பெயர்கள் குடும்ப அட்டையில் இருந்து நீக்கப்பட்டதால், பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் 2 கோடியே 24 லட்சத்து 21 ஆயிரத்து 246 குடும்ப அட்டைகளுக்கு, 34 ஆயிரத்து 793 நியாயவிலைக் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் அரிசி, சர்க்கரை ஆகியபொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழக பொதுவிநியோகத் திட்டம் கணினி மயமாக்கப்பட்டு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டபோது, ஆதார் இணைப்பும் கட்டாயமாக்கப்பட்டது. தற்போது ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் சரிபார்ப்பு மூலம் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் ஆதார் கட்டாயமாக்கப்பட்டு, அதன் அடிப்படையிலேயே பதிவும் நடைபெறுகிறது. இதுவரை 6 கோடியே96 லட்சத்து 15 ஆயிரத்து 417 பயனாளிகள், ஆதார் எண்ணை இணைத் துள்ளனர்.
அதேபோல, மொத்தமுள்ள குடும்ப அட்டைதாரர்களில் 2கோடியே 23 லட்சத்து 95 ஆயிரத்து241 பேர் தங்கள் செல்போன் எண்ணை குடும்ப அட்டையுடன் இணைத்துள்ளனர்.பயனாளிகளில் இதுவரை 4,82,778 பேர் ஆதார்எண்ணை இணைக்கவில்லை. இந்நிலையில், ஆதார் இணைக்காதவர் களைக் கண்டறிந்து, அவர்களை குடும்ப அட்டையில் இருந்து நீக்கம் செய்யும் பணியில் உணவுத் துறை ஈடுபட்டுள்ளது.
குறிப்பாக, குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்கும்போது குழந்தை இருந்தால், குழந்தையின் பிறப்புச்சான்றிதழை இணைத்து விண்ணப்பித்தாலே குடும்ப அட்டை வழங்கப்படும். ஆனால், பின்னர் குழந்தைக்கு ஆதார் எண் பெற்றிருந்தால், அதை இணைத்திருக்க வேண்டும். அவ்வாறு இணைக்காதபட்சத்தில், குடும்ப அட்டைதாரர்களிடம் தெரிவிக்காமலேயே, தற்போது குழந்தைகளின் பெயர்கள், அட்டையில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றன. இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, சம்பந்தப்பட்ட உணவுப் பொருள் வழங்கல் உதவிஆணையரிடம் பெற்றோர் கேட்கும்போது, அவர்கள் மீண்டும் ஆதார் எண்ணுடன் விண்ணப்பித்தால் இணைத்துக் கொள்வதாகக் கூறுகின்றனர். இது குழப்பத்தையும், அலைச்சலையும் அட்டைதாரர் களுக்கு ஏற்படுத்துகிறது.
குடும்ப அட்டையுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்பதை அறிவித்தால், பொதுமக்களே தாங்களாகவே முன்வந்து இணைத்துவிடும் நிலையில், உணவுத் துறையின் இதுபோன்ற நடவடிக்கை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT