Published : 04 Aug 2023 05:31 AM
Last Updated : 04 Aug 2023 05:31 AM
முதுமலை: முதுமலைக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நாளை வருவதையடுத்து, தெப்பக்காடு யானைகள் முகாமில் வனத்துறை முதன்மை செயலாளர் சுப்ரியா சாஹூ தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தாயை பிரிந்த யானை குட்டிகள் ரகு, பொம்மி அவற்றை பராமரித்துவரும் பழங்குடி தம்பதி பொம்மன் - பெள்ளி இடையேயான பாச உறவை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்' ஆவணப் படத்துக்கு, 'ஆஸ்கர்' விருது கிடைத்தது. இதன்மூலமாக யானை குட்டிகள், பாகன் தம்பதி புகழ் பெற்றனர். இந்நிலையில், யானை குட்டிகளை பார்க்கவும், பாகன் தம்பதியை சந்திக்கவும் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நாளை (ஆக.5) முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு வருகிறார்.
நாளை பிற்பகல் மைசூருவில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு, மசினகுடியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக ஹெலிபேடில் இறங்கி, வாகனம் மூலமாக தெப்பக்காடு செல்கிறார். இதற்காக, முதுமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட மசினகுடி உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதையொட்டி, ஹெலிகாப்டர் ஒத்திகை நேற்று நடைபெற்றது. இதற்காக, நேற்று காலை மைசூருவில் இருந்து விமானப்படைக்கு சொந்தமான 2 ஹெலிகாப்டர்கள், மசினகுடி ஹெலிபேடில் இறங்கிச் சென்றன. இதற்கிடையே, முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமிலுள்ள வன உயிரின மேலாண்மை பயிற்சி அரங்கில், வனத்துறை முதன்மை செயலாளர் சுப்ரியா சாஹூ தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித், காவல் கண்காணிப்பாளர் கி.பிரபாகர், வனத்துறையினர் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில், குடியரசு தலைவர் வருகையின்போது தெப்பக்காடு யானைகள் முகாமில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகள் குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் முதன்மை செயலர் கேட்டறிந்தார். அதேபோல, ஹெலிகாப்டர் தளம் அமைந்துள்ள மசினகுடி சாலையிலிருந்து தெப்பக்காடு யானைகள் முகாம் வரை பாதுகாப்பு ஏற்பாடு குறித்து எஸ்.பி.யிடம் கேட்டறிந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT