Last Updated : 29 Nov, 2017 12:04 PM

 

Published : 29 Nov 2017 12:04 PM
Last Updated : 29 Nov 2017 12:04 PM

தினகரன் ஆதரவு விருத்தாசலம் எம்எல்ஏ அணி மாற ஆயத்தமாகிறாரா?

தினகரன் அணியில் இருந்த விருத்தாசலம் எம்.எல்.ஏ. கலைச்செல்வன், தற்போதைய சூழலில் எடப்பாடி அணியின் பக்கம் செல்ல ஆயத்தமாகிறார் எனத் தகவல்கள் பரவி வருகின்றன.

கடலூர் மாவட்டத்தில் 5 அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களும், 2 நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். இவர்களில் தொழில் துறை அமைச்சராக எம்.சி சம்பத் உள்ளார். சம்பத்தின் செயல்பாடுகளால் அதிருப்தியடைந்த மற்ற எம்எல்ஏ-க்கள் மற்றும் எம்பிக்கள், கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண்மொழித்தேவன் தலைமையில் தனி அணியாக செயல்பட்டு வந்தனர்.

மாவட்டத்தில் நடைபெறும் முக்கிய அரசு நிகழ்ச்சிகளில் சம்பத் பங்கேற்றால், அதைத் தவிர்த்தும் வந்தனர். கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அதிருப்தி எம்எல்ஏக்களை அழைத்துப் பேசிய பிறகே இவர்கள் சமாதானமாகி எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்றனர்.

இந்த நிலையில் தான் விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன், திடீரென தினகரன் அணிக்கு மாறினார். இவர் அணி மாறினாலும், அரசுக்கு எதிராக கவர்னரிடம் ஊழல் புகார் கடிதம் எதுவும் வழங்கவில்லை. அதனால் இவர் மீது தகுதி நீக்கம் செய்யப்படாமலேயே இருந்துவருகிறார்.

அணி மாறிய போது, சம்பத்தின் மீதான அதிருப்தி காரணமாகவே அணி மாறியதாகக் கூறினாலும், தினகரனின் உறவினர் காவல் துறையைச் சேரந்த அதிகாரி ஒருவரின் கட்டாயத்தின் பேரிலேயே அவர் தினகரனுக்கு ஆதரவு நிலை எடுத்தார் என்கிறார்கள்.

இந்தச் சூழலில் கலைச்செல்வனுடனான நெருக்கத்தை தினகரனும் அதிகரித்துக் கொண்டார்.மேலும் கடலூர் அதிமுக மாவட்டச் செயலாளர் என்ற பொறுப்பையும் வழங்கினார். அதன் எதிரொலியாக விருத்தாசலத்தில் முன்னாள் அமைச்சர் பழனியப்பனை வைத்து கூட்டத்தை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதியும் கலந்துகொண்டார்.

இரட்டை இலை சின்னம், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியினருக்கு ஒதுக்கப்பட்ட அன்றைய தினம் விருத்தாசலத்தில், கலைச்செல்வன் வீட்டில் மதிய உணவு அருந்திய தினகரன், இரட்டை இலைச் சின்னம் எதிரணி முகாமிற்குக் கிடைத்த தகவலறிந்து அங்கிருந்து வேகமாக வெளியேறி சேலம் சென்றார்.அப்போது தினகரனுக்கு ஆதரவாக வைக்கப்பட்டிருந்த ப்ளக்ஸ் பேனர்களும் சேதப்படுத்தப்பட்டன.

இதனிடையே தினகரன் முகாமிலிருந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் மூன்று பேர், நேற்று முன் தினம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். மேலும் அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதியும், எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்கப் போவதாகவும் அறிவித்தார்.இதனால் மனக்குழப்பத்திலிருந்து வரும் கலைச்செல்வன், மீண்டும் எதிர்முகாமுக்கு செல்ல ஆயத்தமாகி வருவதாகவே கூறப்படுகிறது.

மேலும் இவரது தொகுதி மேம்பாட்டு நிதியையும் மாவட்ட நிர்வாகம் முடக்கி வைத்திருப்பதால், தனது தொகுதியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை எனவும், இது தொடர்பாக கடந்தவாரம் மாவட்ட திட்ட அலுவலரைச் சந்தித்து முறையிட்டுள்ளார்.இந்த நிலையில் நேற்று முன் தினம் திருச்சியில் தினகரன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திலும் கலைச்செல்வன் பங்கேற்கவில்லை.

இதுகுறித்து எம்எல்ஏ கலைச்செல்வனிடம் கேட்டபோது, திருச்சிக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. தற்போதைய சூழலில் தேவையில்லாத சர்ச்சைகளில் ஈடுபட வேண்டாம் என ஒதுங்கி இருக்கிறேன் என்றார்.

அணி ஏதேனும் மாறத் திட்டமிட்டுள்ளீர்களா என்றபோது, நான் இந்த நிமிடம் வரை அதிமுக சட்டப்பேரவை உறுப்பினராகத் தான் தொடர்ந்து கொண்டிருக்கிறேன் என்று முடித்துக் கொண்டார்.

விருத்தாசலத்தில் உள்ள அவரது ஆதரவாளர்கள் சிலரிடம் இதுகுறித்துக் கேட்டபோது, இரட்டை இலை சின்னம், தினகரனுக்கு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து வந்தார். தற்போது கட்சி எடப்பாடி அணி வசம் வந்துவிட்டதால், எடப்பாடி அணியுடன் ஐக்கியமாகிவிடலாம் என்று யோசனையில் இருப்பதாகத் தெரிவித்தனர்.

தொகுதியில் எந்த வளர்ச்சிப் பணிகளையும் மேற்கொள்ள முடியாததால், விரக்தியில் இருந்துவரும் கலைச்செல்வன், கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண்மொழித் தேவன் மூலம் எடப்பாடி அணிக்கு செல்லலாம் என ஆலோசித்து வருவதாகவும் கட்சியினர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x