Published : 04 Aug 2023 06:23 AM
Last Updated : 04 Aug 2023 06:23 AM
விழுப்புரம்: சென்னை, காஞ்சிபுரம், மதுரை, திருநெல்வேலி. திருச்சி, கோவை என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் 10 ரூபாய் நாணயங்களை எவ்வித மறுப்பும் சொல்லாமல் வாங்கி கொள்கின்றனர்.
ஆனால் விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் நிலைமை அப்படியில்லை. ‘10 ரூபாய் நாணயம் செல்லாது’ என யாரோ விஷமிகள் சில ஆண்டுகளுக்கு முன் கிளப்பி விட்ட வதந்தி, இன்று வரைக்கும் தொடர்கிறது.
‘அப்படியெல்லாம் இல்லை. இந்திய அரசால் ஏற்பளிப்பு செய்யப்பட்டு, இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட இந்த 10 ரூபாய் நாணயம் செல்லும்’ என்று வங்கிகளின் வழியே அறிவிப்பு வெளியிடப்பட்டும், இந்த நிலைமை தொடரவே செய்கிறது.
கடந்த 2009-ம் ஆண்டு இந்த 10 ரூபாய் நாணயங்கள் வெளியிடப்பட்டன. குறைந்த அளவே பயன்பாட்டில் இருந்தாலும், கையாள மிக எளிதான நாணயம் இது. 10 ரூபாய் நோட்டுகளைப் போல் கிழியாது; எக்கச்சக்க அழுக்குகளை தன்னுடன் எடுத்து வராது என்பதால் இந்த நாணயத்தை பல பேருக்கு பிடிக்கும்.
ஆனால் விழுப்புரம் மாவட்டத்தினருக்கு மட்டும் இது இன்று வரைக்கும் எட்டிக் காயாகவே இருக்கிறது. விழுப்புரத்தை தொட்டப்படி உள்ள புதுச்சேரி பகுதிகளிலும் ஏறக்குறைய இதே நிலைதான். சில சமூக ஆர்வலர்கள் இதை சரி செய்யும் வகையில், ஆங்காங்கே வேண்டி விரும்பி 10 ரூபாய் நாணயங்களை தங்கள் கடைகளில் வாங்கிக் கொண்டாலும், மக்கள் இந்த நாணயத்தைக் கண்டு சற்று தள்ளியே நிற்கின்றனர். அதனால் இந்தப் பகுதிகளில் மட்டும் இந்த நாணயத்தின் புழக்கம் வெகுவாக குறைந்துள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன் அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் கூட, இந்த 10 ரூபாய் நாணயத்தை வாங்க மாட்டோம் என்று நடத்துநர்கள் கூறும் கதையெல்லாம் உண்டு. சில தனியார் வங்கிகளும் இதை வாங்க மறுத்து வருகின்றனர்.
இந்நிலையில், இதுதொடர்பாக வங்கி அதிகாரிகள், வர்த்தக பிரமுகர்கள், நுகர்வோர் அமைப்பினர் மற்றும் ஆட்சியரைக் கொண்ட விழுப்புரம் மாவட்ட அளவிலான நாணய மேலாண்மை குழு கூடி விவாதித்து, சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இதன்படி, அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களிடம் 10 ரூபாய் நாணயங்களை வாங்குமாறு மாநில அரசு அறிவுறுத்த வேண்டும். மேலும், பேருந்துகளில் இது தொடர்பான அறிவிப்புகளை ஒட்ட வேண்டும்.
அதேபோல, வங்கி ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து எவ்வித மறுப்பும் இன்றி 10 ரூபாய் நாணயங்களை வாங்க வேண்டும். வங்கிகளிலும் இதுகுறித்த அறிவிப்பை அதிகப்படியாக ஒட்ட வேண்டும். அனைத்து வங்கிகளும் இணைந்து 10 ரூபாய் நாணயங்கள் குறித்த விழிப்புணர்வு விளம்பரங்களை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
“நாணயங்களை பராமரிப்பது மிக கடினம், ரூபாய் நோட்டுகளாக இருந்தால் கவுன்டிங் மெஷினில் வைத்து சுலபமாக கணக்கிட முடியும். இந்த நாணயங்களை வங்கி அதிகாரிகள் வாங்க மறுப்பதால், நாங்களும் வாங்குவதில்லை” என்று விழுப்புரம் நகர வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து வங்கி அலுவலக வட்டாரங்களில் கேட்ட போது, ‘‘இது பழைய கதை; இப்போதெல்லாம் 10 ரூபாய் கட்டுகளை எந்த வாடிக்கையாளர்களும் கேட்பதில்லை. 100,200, 500 என்றே கேட்கின்றனர். புதிதாக வந்திருக்கும் 20 ரூபாய் நாணயங்களை கூட சில்லறை தேவைக்காக ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். 10 ரூபாய் நாணயங்களையும் வாடிக்கையாளர்கள் கேட்டுப் பெறுவதில்லை.
வங்கிகளைப் பொருத்த வரையில், சில வங்கி அதிகாரிகள் நாணயங்களை வாங்க மறுத்திருக்கலாம். அப்படி மறுத்தால் சம்மந்தப்பட்ட வங்கியின் மேலதிகாரியிடம் எழுத்துபூர்வமாக புகார் அளித்தால் நிச்சயம் தீர்வு கிடைக்கும்” என்கின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் நிலைமை இப்படி இருக்க, கடலூர் மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயங்களின் புழக்கம் ஓரளவுக்கு சீராகி வருகிறது. குறிப்பாக சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, நெய்வேலி, வடலூர் பகுதி வர்த்தகர்கள் கூட்டம் போட்டு, ‘இனி 10 ரூபாய் நாணயங்களை கடைகளில் வாங்க வேண்டும்’ என்று முடிவெடுத்து செயல்படுத்தி வருகின்றனர். இதே போல் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் முன்பு போல் இல்லாமல் கடைகளில் இந்த நாணயங்களை வாங்கத் தொடங்கியுள்ளனர்.
விழுப்புரம் மாவட்ட வர்த்தகர்கள், கடலூர் மாவட்டத்தைப் போல் இதில் உறுதியான முடிவெடுத்து நடைமுறைப்படுத்தினால், 10 ரூபாய் நாணயங்கள் இந்த மாவட்டத்திலும் செல்லுபடியாகும்.
நாணயங்கள் பற்றி, வீண் புரளிகளை பரப்பும் நபர்கள் மீது இந்திய சட்ட விதிமுறை 489 ஏ மற்றும் 489 இ பிரிவின் கீழ் தண்டனை அளிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT