Last Updated : 03 Aug, 2023 08:16 PM

1  

Published : 03 Aug 2023 08:16 PM
Last Updated : 03 Aug 2023 08:16 PM

ஆடிப்பெருக்கு விழா | நீர் நிலைகளில் குலதெய்வ பூஜை பொருட்களை புனித நீருற்றி கழுவி வழிபாடு

எடப்பாடி அருகே காவிரி ஆற்றில் குலதெய்வ சாமி சிலைகளையும், பூஜை பொருட்களையும் புனித நீரூற்றி கழுவி சாமிக்கு அலங்காரம் செய்து பூஜை செய்து வழிபட்டனர்.

சேலம்: ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு நீர் நிலைகளில் குல தெய்வங்களுடைய பூஜை பொருட்களை புனித நீருற்றி கழுவி, பூஜைகள் செய்து பொதுமக்கள் வழிபாட்டில் ஈடுபட்டனர்.

மகாபாரத போரும், ஆடிப்பெருக்கு விழாவும்: மகாபாரத போரானது ஆடி 1ம் தேதி துவங்கி ஆடி 18ம் தேதி முடிவுற்றது. தர்மத்துக்கும், அதர்மத்துக்குமான போராக புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ள மகாபாரத போரில் கிருஷ்ணன் தலைமையில் பஞ்ச பாண்டவர்கள் ஓரணியில் அணிவகுத்து நின்று தர்ம யுத்தம் செய்தனர். அதர்மத்தின் வழியில் நின்று போரிட்ட துரியோதனனை எதிர்த்து போரிட்ட பஞ்சபாண்டவர்கள் அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்டிய ஆடி 18ம் தேதி வெற்றி கண்ட நாளை இதனை நினைவு கூறும் வகையில், காவிரி கரையோர மக்கள் வழிவழியாக ஆடிப்பெருக்கு தினத்தை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். போர் முடித்து அந்த போரில் பயன்படுத்திய ஆயுதங்களை நீர் நிலைகளில் கழுவி சிறப்பு பூஜை செய்து குலதெய்வ கோயில்களில் வைத்து வழிபாடு நடத்தி விழாவை வெகு விமர்சையாக கொண்டாடுகின்றனர்.

காவிரி ஆற்றில் குவிந்த மக்கள் : ஆடிப்பெருக்கு நாளில் புதுவெள்ளமாக ஓடும் காவிரி ஆற்றில் நீராடி அம்மனை வணங்குவதால் காவிரியன்னை தன்னை வணங்கும் பெண்களுக்கு நல்ல கணவர் அமையும் என்றும், திருமணமான பெண்களுக்கு கணவனின் உடல் நல்ல ஆரோக்கியத்தை கொடுப்பாள் என்பது நம்பிக்கை. மேலும், ஆடிப்பெருக்கில் காவிரி படித்துறையில், மஞ்சள் பிள்ளையார் பிடித்து, விளக்கேற்றி, நைவேத்தியம் படைத்து பொன்னி அம்மனுக்கு கற்பூர ஆரத்தி காட்டி வழிபாடு செய்து புதுமன தம்பதிகள் காவிரி ஆற்றில் புனித நீராடினர். மேலும், திருமணமான பெண்கள் தாங்கள் அணிந்திருக்கும் தாலி கயிரை மாற்றி புது மஞ்சள் தாலி கயிறை அணிந்து கொண்டனர்.

புனித நீராடி குலதெய்வ வழிபாடு: சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கல்வடங்கள், பூலாம்பட்டி காவிரி ஆற்றில் விடியற்காலை முதலே ஏராளமா பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து காவிரியில் புனித நீராடி காவிரி தாயை வணங்கினர். குலதெய்வ சாமி சிலைகளையும், பூஜைக்கு பயன்படுத்தும் கத்தி, வேல், வீச்சரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை காவிரி ஆற்றுக்கு எடுத்து வந்து புனித நீரூற்றி கழுவி சுத்தம் செய்து சாமிக்கு அலங்காரம் செய்து பூஜை செய்து வழிபட்டனர்.

பின்னர் காவிரி ஆற்றில் இருந்து புனித தீர்த்தம் எடுத்துச் சென்று முன்னோர்கள் சமாதிக்கு தெளித்து பொங்கல் வைத்து, கிடாவெட்டி முன்னோர்களை வணங்கினர். பூலாம்பட்டி காவேரி ஆற்றங்கரையோரம் பொதுமக்களின் பாதுகாப்புக்காக பூலாம்பட்டி போலீஸார் மற்றும் தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

செயற்கை நீரூற்றில் புனித நீராடிய மக்கள்: ஆடிப்பெருக்கு விழாவையொட்டி சேலம் மாமாங்கத்தில் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் செயற்கை நீரூற்று அமைத்து, காவிரி ஆற்றில் இருந்து வரும் புனித நீரில் மக்கள் நீராடி மகிழ்ந்தனர். இந்த செயற்கை நீரூற்றில் சாமி சிலைகளை கழுவி வழிபாட்டுக்கு பொதுமக்கள் கொண்டு சென்றனர். ஏராளமானோர் அங்கு அமைக்கப்பட்டிருந்த செயற்கை நீரூற்றில் நீராடி பூஜைக்கு செய்து வழிபாடு செய்தனர். பெண்கள் புனித நீராடி தாலிக்கயிற்றை மாற்றி சுமங்கலியாக நீடூடி வாழ வேண்மென என வேண்டி கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x