Published : 03 Aug 2023 08:07 PM
Last Updated : 03 Aug 2023 08:07 PM
புதுடெல்லி: தொப்பூர் முதல் பவானி வரை மேட்டூர் வழியாக செல்லும் தேசிய இருவழி நெடுஞ்சாலையில் சுங்கக்கட்டணச் சாவடி அமைக்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திமுகவின் தருமபுரி எம்.பி. மருத்துவர் செந்தில்குமார் தம் எதிர்ப்பை மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து வலியுறுத்தி உள்ளார்.
இந்த சந்திப்பில் எம்.பி செந்திகுமாரிடம் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, சுங்கச்சாவடி பிரச்சினை குறித்து கவனமுடன் கேட்டுள்ளார். அவரது கோரிக்கையை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியுள்ளார்.
டெல்லியிலுள்ள மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை அலுவலகத்தில் அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து அளித்த கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது: தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில், தொப்பூர் முதல் மேட்டூர் வரையிலான நெடுஞ்சாலை உள்ளது. இதில், தேசிய நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இருவழிப் பாதையை சுமார் 33 கிலோமீட்டர் தூரத்திற்கு தற்பொழுது அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
அகலப்படுத்த பணி முடிந்தவுடன் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் தொப்பூர் முதல் மேட்டூர் வரையில் ஒரு இடத்திலும் சுங்க சாவடி அமைப்பதற்கும், ஈரோடு மாவட்ட பகுதியில் மற்றொரு சுங்கச்சாவடி அமைப்பதற்கும் தயாராக உள்ளனர். இதுபோன்ற இருவழி பாதையை சுமார் 1.5 மீட்டர் அளவிற்கு அகலப்படுத்தி விட்டு சுங்கச்சாவடி அமைப்பது என்பது இப்பாதையை பயன்படுத்தும் பல நூறு கிராம மக்கள் அன்றாட போக்குவரத்தை பாதிக்கும். மேலும், நான்கு சக்கரவாகனங்கள் . கார் மற்றும் மினி லாரிகள் போன்ற போக்குவரத்துக்கும் பாதிக்கும்.
அதே நேரத்தில் தற்பொழுது விரிவாக்கம் செய்யப்படும் சாலை சுங்கச்சாவடி கட்டணம் வசூலிப்பதற்கு தகுதி இல்லாத சாலை ஆகும் . இதுவரை நான்கு வழி சாலையில் மட்டுமே தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சுங்கசாவடிகள் அமைக்கப்பட்டு வந்தது. தமிழகத்தில் தற்பொழுது இதுபோன்ற இருவழிச் சாலை வழி பாதையிலும் சுங்கக்கட்டணம் வசூலிப்பதை இப்பகுதி பொதுமக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே, தாங்கள் சுங்கச்சாவடி அமைப்பதை உடனடியாக கைவிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
ஏற்கெனவே, இது சம்பந்தமாக கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இருமுறை சென்னையில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை துறையின் பொது மேலாளருக்கும் அதன் பிறகு ஆகஸ்ட் முதல் வாரத்தில் ஜூலை முதல் வாரத்தில் புதுடெல்லியில் அமைந்துள்ள தமிழ்நாடு பிரிவு முதுநிலை பொது மேலாளருக்கும் விரிவாக கடிதம் எழுதியுள்ளேன்.
இக்கடிதத்தில், சுங்கச்சாவடி அமைக்க கூடாது என நான் எதிர்ப்பு தெரிவித்துள்ளேன். எனவே, இந்த சாலையில் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று கட்டணச் சாவடி அமைப்பதை கைவிட வேண்டும். இருவழிச் சாலை பாதையில் அதுவும் சுமார் 1.5 மீட்டர் மட்டுமே விரிவாக்கம் செய்து அதில் சுங்கச் சாவடி அமைப்பதை தொகுதி மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.'' இவ்வாறு அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT