Published : 03 Aug 2023 05:25 PM
Last Updated : 03 Aug 2023 05:25 PM
மதுரை: கட்சிகள், வேட்பாளர்களை தேர்தல் பிரச்சாரம் செய்யவிடாமல் தடுப்பவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என ‘மாமன்னன்’ படத்தைக் குறிப்பிட்டு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் 2014-ல் நடைபெற்ற எம்பி தேர்தலில் பாஜக வேட்பாளராக கருப்பு முருகானந்தம் போட்டியிட்டார். அவர் இஸ்லாமியர்கள் அதிகளவில் வசிக்கும் மல்லிப்பட்டினத்துக்கு பிரச்சாரத்துக்கு சென்றபோது வன்முறை நிகழ்ந்தது. இதில் சேதமடைந்த இயந்திர படகுகள், வாகனங்களுக்கு இழப்பீடு மற்றும் நீதி விசாரணை கோரி ஹபீப்முகமது என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: மாமன்னன் திரைப்படத்தில் நடிகர் வடிவேல் எம்எல்ஏவாக வருவார். அவர் இடைத்தேர்தலில் போட்டியிடுவார். அவரை தேர்தலில் வீழ்த்த எதிர் தரப்பினர் வித்தியாசமான திட்டத்தை செயல்படுத்துவார். வடிவேலுவால் பிரச்சாரத்துக்கு செல்ல முடியாது. அவர் கிராமங்களுக்கு பிரச்சாரத்துக்கு செல்ல முடியாமல் தடுக்கப்படுவார். அதிர்ஷ்டவசமாக அவருக்கு தொழில்நுட்பம் கைகொடுக்கும். சமூக வலைதளங்கள் வழியாக அவர் வாக்காளர்களை சென்றடைவார். அதேபோன்ற சூழ்நிலையை 2014 மக்களவைத் தேர்தலில் கருப்பு முருகானந்தம் சந்தித்துள்ளார்.
அவர் 14.4.2014-ல் மல்லிப்பட்டினம் கிராமத்துக்கு பிரச்சாரத்துக்கு சென்றபோது கிராமத்துக்கு வெளியே ரகுமான்கான் தலைமையில் இஸ்லாமியர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். தேர்தலில் வாக்களிப்பது சட்டப்படியான உரிமை. வாக்கு கேட்பது அடிப்படை உரிமை. நமது அரசியலமைப்பின் அடிப்படை அம்சம் ஜனநாயகம் தான். தேர்தலில் போட்டியிடுபவர்கள் பல்வேறு வழிகளில் வாக்குகளை சேகரிக்கின்றனர். கட்சிகளும், வேட்பாளர்களும் பேரணி, பொதுக்கூட்டம் நடத்தி வாக்குகளை சேகரிக்கின்றனர்.
இவற்றை தடுப்பது என்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி குற்றமாகும். வேட்பாளர்கள், கட்சித் தொண்டர்களுக்கு வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க உரிமை உண்டு. அவர்களால் அமைதியான முறையில் வாக்கு கேட்கவும், எந்த இடத்துக்கும் செல்லவும் முடியும். இதை தடுக்க எந்த தனிநபர்களுக்கும் உரிமையில்லை. தேர்தல் இல்லாமல் ஜனநாயகம் இல்லை. சுதந்திரமான, வலுவான பிரச்சாரம் இல்லாவிட்டால் தேர்தல் கேலி கூத்தாகிவிடும். வேட்பாளர்கள், கட்சிகளை பிரச்சாரம் செய்யவிடாமல் தடுப்பவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
இந்த வழக்கில் சில சூழ்நிலைகளில் இழப்பீடு வழங்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியும். அதற்கு முன்னதாக உண்மையை ஆய்வு செய்ய வேண்டும். இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள், எதிர் குற்றச்சாட்டுகள் உள்ளன. இதனால் கீழமை நீதிமன்றம் தான் முடிவெடுக்க முடியும். எனவே மனுதாரர் கீழமை நீதிமன்றத்தில் விசாரணை முடிவில் இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்ய உரிமை வழங்கப்படுகிறது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT