Published : 03 Aug 2023 02:58 PM
Last Updated : 03 Aug 2023 02:58 PM

மேகேதாட்டு விவகாரம் | “தமிழின ஒதுக்கல் கொள்கையில் காங்கிரஸும் பாஜகவும் இரட்டையர்கள்” - வேல்முருகன்

கர்நாடகாவில் காவிரி பாயும் மேகேதாட்டுப் பகுதி.

சென்னை: தமிழகத்தின் தொடர் எதிர்ப்பையும் மீறி, மேகேதாட்டு எனும் இடத்தில் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு அளவீடும் பணியை கர்நாடக அரசு முடித்திருப்பது கண்டனத்துக்குரியது என்று தமிழர் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மேட்டூர் அணையின் நீர்மட்டம் 62.05 அடியாகவும், நீர் இருப்பு 26.23 டிஎம்சியாகவும் குறைந்துள்ளது. கர்நாடக அணைகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு ஜூன் மாதத்தில் திறந்து விட வேண்டிய 9.19 டிஎம்சி நீரும், ஜூலையில் திறந்து விட வேண்டிய 31.24 டிஎம்சி நீரும் திறந்து விடப்படவில்லை. ஆக்ஸ்ட் மாதத்தில் 45 டிஎம்சி நீரும் திறந்து விடப்படுமா என்பது கேள்விக்குறியே. தற்போது மேட்டூர் அணையில் 25 நாட்களுக்கு மட்டுமே நீர் திறப்பதற்கான வாய்ப்பு இருக்கும் நிலையில், டெல்டா மாவட்டத்தில் 5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதோடு, சம்பா சாகுபடி 8 இலட்சம் ஏக்கருக்கு மேல் எந்த நம்பிக்கையில் பயிர் செய்வார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மாதந்திர அடிப்படையில் கர்நாடகாவில் இருந்து தண்ணீர் பெற தமிழ்நாடு அரசு, முயற்சி செய்யவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது. இது ஒருபுறமிருக்க, கடந்த காலங்களில் கர்நாடகம் பல அணைகளை கட்டி, தமிழகத்துக்கு வர வேண்டிய நீரை தடுத்துள்ளது. தற்போது 66 டிஎம்சி கொள்ளளவில் மேகேதாட்டு அணையை கட்டினால், தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு நீர் கூடாது வராது. இதன் காரணமாக, காவிரி குறுக்கே மேகேதாட்டு அணையை கட்டக் கூடாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், அரசியல் இயக்கங்களும், விவசாய அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், தமிழ்நாட்டின் தொடர் எதிர்ப்பையும் மீறி, மேகேதாட்டு எனும் இடத்தில், 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு அளவீடும் பணியை கர்நாடக அரசு முடித்திருப்பது கண்டனத்துக்குரியது. மேலும், முழு அளவீடும் பணிகள், 60 நாட்களில் முடியும் என்றும் தெரிவித்திருப்பது அம்மாநில அரசின் ஆணவப்போக்கை வெளிப்படுத்துகிறது. காவிரி நீர் பங்கீடு குறித்த உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் இருக்கும் நிலையில், அதனையெல்லாம் பொருட்படுத்தாமல், மேகேதாட்டு எனும் இடத்தில், காவிரியின் குறுக்கே அணை கட்ட அம்மாநில காங்கிரஸ் அரசு தீவிரம் காட்டுகிறது. ஆனால், இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத ஒன்றிய பாஜக அரசு, கைக்கட்டி வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது.

இந்திய ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், மேகேதாட்டு அணைகட்ட அனுமதி கொடுக்காத நிலையில், அதே அரசின் இன்னொரு பிரிவான நீராற்றல் துறை இவ்வளவு வேகமாக அந்த அணைக்கு அனுமதி கொடுத்தது எப்படி? கடந்த காலங்களில் காங்கிரசு ஒன்றிய அரசு, கர்நாடகம் சட்ட விரோதமாக ஏமாவதி, ஏரங்கி, கபினி, சுவர்ணவதி அணைகள் கட்ட அனுமதித்தது. அதே ஓரவஞ்சனையில், இப்போது மேகேதாட்டு அணையைக் கட்டி முடிக்கக் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு, ஒன்றிய பாஜக அரசு துணை செய்கிறது. தமிழின ஒதுக்கல் கொள்கையில், காங்கிரஸ், பாஜக இருவருமே இரட்டையர்கள் என்பது, மேகேதாட்டு விவகாரத்தில் மீண்டும் நிரூபணமாகி இருக்கிறது.

காவிரி நீர் வரவில்லை என்றால் 22 மாவட்டங்களுக்கு தமிழ்நாட்டில் குடிநீர் இல்லை; 15 மாவட்டங்களில் பாசனம் இல்லை. இதனை பற்றியெல்லாம் காங்கிரசும், பாஜகவும் கவலைப்படாது. நமக்கான உரிமையை நாம் தான் பெற வேண்டும். எனவே, காவிரியின் குறுக்கே மேகேதாட்டு பகுதியில், சட்டவிரோதமாக அணைக்கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை, தமிழ்நாடு அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இதற்காக, மேகேதாட்டு பகுதிக்கு வல்லுநர் குழுவை அனுப்ப வேண்டும். காவிரி நீர் பங்கீடு தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகளை தமிழ்நாடு அரசு விரைவுப்படுத்தி, அணை கட்ட தடை பெற வேண்டும்.

மேலும், டெல்டா மாவட்டங்களில் 5 இலட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி அபாய கட்டத்தில் இருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசுக்கு போதிய அழுத்தம் கொடுத்து, மாதந்திர அடிப்படையில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான நீரை பெற வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது. அதோடு, தமிழ்நாட்டின் தொடர் எதிர்ப்பையும் மீறி, மேகேதாட்டு எனும் இடத்தில், கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிப்பது, இந்திய ஒன்றியத்தின் இறையாண்மையை பாதிக்கும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கை விடுக்கிறது'' என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x