Published : 02 Nov 2017 08:55 AM
Last Updated : 02 Nov 2017 08:55 AM
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2015-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி திறந்துவிடப்பட்ட பெருமளவு தண்ணீர் ஏற்படுத்திய பாதிப்பை சென்னை மக்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. கடந்த கால பாதிப்புகளில் இருந்து இன்னும் மீண்டு வராத மக்களை தற்போது பெய்துவரும் அதிகனமழை மிரட்டி வருகிறது. இருப்பினும் அந்த அளவுக்கு பாதிப்பு இருக்காது என்கின்றனர் பொதுப்பணித்துறையினர்.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து பெருமளவு தண்ணீரை திறந்துவிடுவதற்கு முன்பு பொதுப்பணித் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் சென்னை மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். இதற்கு பொதுப்பணித் துறை மட்டும் அல்லாமல் வருவாய்த் துறை உள்ளிட்ட துறைகளும், சென்னை மாநகராட்சியும்தான் பொறுப்பு என்கிற குற்றச்சாட்டு பரவலாக எழுந்தது.
2015-ம் ஆண்டு சம்பவத்துக்குப் பிறகு பெருமழை பெய்யும்போதெல்லாம் சென்னை மக்களை ஒருவித பதற்றம் தொற்றிக் கொள்கிறது. சென்னையில் பெருவெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் தற்போது சற்று எச்சரிக்கையாகவே இருக்கின்றனர். பலர் தங்கள் உறவினர் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
2015-ம் ஆண்டு நவம்பர் 28-ம் தேதி சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் ‘அடுத்த சில நாட்களுக்கு மிக பலத்த மழை பெய்யும்’ என்று தெரிவித்தது. அரசுக்கும் எச்சரிக்கை செய்திகளை அனுப்பியது. எனினும் அரசு வழக்கம்போல பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துவிட்டு, ஆண்டுதோறும் மழைக்காலத்தில் எடுக்கப்படும் வழக்கமான நடவடிக்கைகளை மட்டுமே எடுத்தது.
ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை கொட்டியது. நவம்பர் 30-ம் தேதி சில மணி நேரத்தில் 490 மில்லி மீட்டர் மழை கொட்டித் தீர்த்தது. அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் மட்டுமல்லாமல் சென்னை மற்றும் சுற்றுப்பகுதி முழுவதும் வெள்ளக்காடானது.
முன்னறிவிப்பு இல்லை
முறையான முன்னறிவிப்பு இல்லாமல் செம்பரம்பாக்கம் ஏரியை பொதுப்பணித் துறையினர் திறந்துவிட்டதே காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு அளவுக்கு அதிகமாக நீர்வரத்து இருப்பதால் உடனே பெருமளவு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று பொதுப்பணித் துறை செயலாளர், தலைமைச் செயலாளருக்கு தகவல் தெரிவித்தகாகவும் முதல்வரிடம் இருந்து தலைமைச் செயலாளர் அனுமதி பெறுவதற்கு தாமதமானதே சென்னை வெள்ளக்காடானதற்கு முக்கியக் காரணம் என்றும் எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின. நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.
2015-ம் ஆண்டில் ஏற்பட்ட பெரு வெள்ளம் தொடர்பாக பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, குளம், அணைகளில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடும்போது மட்டும்தான் முதல்வர் அனுமதி பெற வேண்டும். ஏரிக்கு அளவுக்கு அதிகமாக தண்ணீர் வரும்போது அணையின் பாதுகாப்பு கருதி ஏரி, குளமாக இருந்தால் உதவி பொறியாளரும், மேட்டூர் அணை போன்ற அணையாக இருந்தால் செயற்பொறியாளரும் முடிவெடுத்து அணையில் இருந்து தேவையான அளவு தண்ணீரைத் திறந்துவிடலாம். இதுதான் நீண்டகாலமாக பின்பற்றி வரும் நடைமுறையாகும். இது, பொதுப்பணித் துறையில் விதிமுறையாகவே உள்ளது.
பொதுப்பணித் துறையைப் பொருத்தவரை ஏரியின் பாதுகாப்புக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும். பெருமளவு தண்ணீர் திறந்து விட வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதுகுறித்து வருவாய்த் துறை, உள்ளாட்சி அமைப்புகளுக்கு முன்னரே தகவல் தெரிவித்துவிடுவோம். அவர்கள்தான் ஏரியின் கரையோரப் பகுதியில் வசிப்பவர்கள், தாழ்வான இடங்களில் வசிப்பவர்களிடம் தகவல் தெரிவித்து பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்.
2015-ம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து அதிக அளவு தண்ணீர் திறக்க நேர்ந்தபோதும் இதேபோல் முன்னரே தகவல் தெரிவித்து விட்டோம். வருவாய்த் துறையும், சென்னை மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளும்தான் மக்களுக்கு உரிய எச்சரிக்கை செய்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
எனினும் பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்ட காரணத்தால் செய்திகளை அறிந்து கொள்ள முடியாத நிலை மக்களுக்கு ஏற்பட்டது. இதனால் அரசின் எச்சரிக்கை மக்களுக்கு உரிய நேரத்தில் சென்று சேரவில்லை. பல பகுதிகளில் தண்டோரா மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது என்று வருவாய் மற்றும் உள்ளாட்சித் துறையினர் பின்னர் தெரிவித்தனர்.
இந்த எச்சரிக்கை பற்றி கருத்து தெரிவித்த பொதுமக்களில் பலர், “வழக்கமான முறையில் இந்த எச்சரிக்கை செய்திகள் இருந்ததால் பொதுமக்கள் இவற்றை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. 500 மில்லி மீட்டர் வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தவுடனேயே, மழையின் தீவிரமும் அதன் பாதிப்புகளும் எவ்வாறு இருக்கும் என்பதை உரிய எச்சரிக்கையுடன் அரசுத் துறைகள் மக்களுக்கு சொல்லியிருந்தால் இழப்புகளை பெருமளவில் தடுத்திருக்க முடியும்” என்று கூறினர்.
2015-ம் ஆண்டு அனுபவம் பற்றி பொதுப்பணித் துறை அதிகாரிகள் மேலும் கூறும்போது, “அந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 34 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. ஏரி வேகமாக நிரம்பியதால் ஏரியின் பாதுகாப்பு கருதி 19 சிறிய மதகுகள், 5 பெரிய மதகுகள் வழியாக விநாடிக்கு ஒரே நேரத்தில் 33 ஆயிரத்து 400 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. மற்ற நேரங்களைப்போல, திறந்துவிடும் தண்ணீரின் அளவை படிப்படியாக உயர்த்த முடியவில்லை. அவ்வாறு செய்திருந்தால் ஏரி உடைந்து மிகப்பெரிய சேதம் ஏற்பட்டிருக்கும்.
1 லட்சம் கனஅடி நீர்
செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்பட்ட தண்ணீர் மட்டுமல்லாமல், புறநகர் பகுதிகளில் பெய்த மழைநீரும், சென்னையில் உள்ள கால்வாய்களில் வந்த மழைநீரும் அடையாறில் கலந்ததால் அடையாறில் விநாடிக்கு சுமார் 1 லட்சம் கனஅடிக்கும் மேல் வெள்ள நீர் சென்றது. அந்த நேரத்தில் கடலும் சீற்றமாக இருந்ததால் மழைநீர் கடலுக்குள் போகவில்லை. அதையடுத்து அடையாறில் ஏற்பட்ட பெருவெள்ளம் ஊருக்குள் புகுந்து சேதம் ஏற்பட்டது.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 33 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தால் அரைநாளில் ஏரி நிரம்பிவிடும். 2015-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி சில மணி நேரங்களில் 490 மில்லி மீட்டர் மழை கொட்டியதால் ஏரிக்கு விநாடிக்கு 34 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. ஆனால், ஏரியில் உள்ள அனைத்து மதகுகளைத் திறந்துவிட்டாலும் விநாடிக்கு 33 ஆயிரத்து 400 கனஅடி தண்ணீர் மட்டுமே வெளியேறும். நீர்வரத்து மிக அதிகமாக இருந்ததால் ஏரியின் பாதுகாப்பு கருதி ஒரேநேரத்தில் திறந்துவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
விநாடிக்கு சுமார் 33 ஆயிரம் கனஅடி வீதம் 20 மணி நேரம் இவ்வாறு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. நுங்கம்பாக்கம், மாம்பலம், முகப்பேர், உள்ளகரம், கொளத்தூர் ஏரிகள் முழுமையாக கட்டிடங்கங்கள் ஆகிவிட்டன. மேலும் ஆதம்பாக்கம் ஏரியில் 25 சதவீதம், வேளச்சேரி ஏரியில் 35 சதவீதம் தவிர மற்றவை அனைத்தும் கட்டுமானங்களாக ஆகிவிட்டதாலும் தண்ணீரின் போக்கு மாறிவிட்டது. இந்த ஏரிகளைச் சேர்ந்த விவசாய நிலங்களில் அரசு மற்றும் தனியார் கட்டிடங்கள் பெருகிவிட்டன. பல இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. ஊருக்குள் வெள்ளம் புகுந்ததற்கு இதுவே முக்கியக் காரணம்.
அச்சம் தேவையில்லை
எனினும் அதேபோன்று வெள்ள பாதிப்பு ஏற்படும் என்று தற்போது அச்சப்படத் தேவையில்லை. 2015-ம் ஆண்டு பெரு வெள்ளத்துக்குப் பிறகு அடையாறு, கூவம் ஆறுகளில் ஓரளவு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. இந்த ஆறுகள் தூர்வாரப்பட்டுள்ளன. சில மணி நேரத்தில் 300 முதல் 350 மில்லி மீட்டர் வரை மழை கொட்டினாலும் அடையாறு, கூவம் ஆறுகள் வழியே வெள்ள நீர் வடிந்துவிடும். அதைவிடவும் அதிக அளவு மழை பெய்தால் நிலைமையை சமாளிக்க சிரமம் ஏற்படலாம். எனினும் 2015-ம் ஆண்டைப் போன்று பாதிப்புகள் நிச்சயம் ஏற்படாது” என்று தெரிவித்தனர்.
இந்தாண்டு வடகிழக்கு பருவமழை இயல்பான அளவில்தான் இருக்கும் வானிலை ஆய்வு மையத்தினர் தெரிவித்துள்ளனர். ஆகவே, 2015-ம் ஆண்டுபோல பெருவெள்ள பாதிப்பு ஏற்படும் என்று அச்சப்படத் தேவையில்லை என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
போக்கு கால்வாய் – வரத்துக் கால்வாய்
ஒரு ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் போக்கு கால்வாய் வழியாக அடுத்த ஏரிக்குச் செல்லும். இந்த ஏரிக்கு போக்கு கால்வாயாக இருப்பது அடுத்த ஏரிக்கு வரத்துக் கால்வாயாக இருக்கும். சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் போக்குக் கால்வாய், வரத்துக் கால்வாய்கள் ஆக்கிரமிப்புக்குள்ளானதால் வெள்ளம் ஊருக்குள் புகுந்து விடுகிறது.
தனித்துவமான செம்பரம்பாக்கம் ஏரி
சென்னையில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது செம்பரம்பாக்கம் ஏரி. 500 ஆண்டுகள் பழமையான இந்த ஏரி, பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது. அப்போதைய நீர்மட்டம் 19.5 அடியாக இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நீர்மட்டம் 19.5 அடியில் இருந்து 22 அடியாக உயர்த்தப்பட்டது. பின்னர் ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் கிருஷ்ணா நீரைத் தேக்கி வைப்பதற்காக நீர்மட்டம் 22 அடியில் இருந்து 24 அடியாக உயர்த்தப்பட்டது.
செம்பரம்பாக்கம் ஏரியின் கரை 9 கிலோ மீட்டர் நீளம் உடையது. 19 சிறிய மதகுகள், 5 பெரிய மதகுகள், 2 கலங்கல் (ஆயிரம் அடி நீளத்தில் தானாக உபரிநீர் வெளியேறும் பகுதி), 3 ஆயிரத்து 645 மில்லியன் கனஅடி கொள்ளளவுடன் பிரமாண்டமாக காட்சியளிக்கிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளில் இதுதான் பெரிய ஏரி.
2015-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி வரை இந்த ஏரியைப் பற்றி பலருக்கும் தெரியாது. இன்று இந்த ஏரியைப் பற்றி தெரியாத சென்னை மக்களே இருக்க முடியாது.
ஆக்கிரமிப்பில் சைதாப்பேட்டை பாலம்
சைதாப்பேட்டையில் அடையாறின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மறைமலை அடிகள் பாலத்தில் 12 கண்களில் (Vent) 9 கண்களுக்கு எதிரே முற்றிலுமாக ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டியுள்ளனர். அதனால்தான் 2015-ம் ஆண்டு பாலத்துக்கு மேலே வெள்ளம் சென்றது. அதன்பிறகு அந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இப்போது 3 கண்களுக்கு எதிரே மட்டும் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதில் வீடுகள் கட்டியிருப்போர் தங்கள் இடத்துக்கு பட்டா வைத்திருக்கிறார்கள். ஆற்றுக்குள்ளே பட்டா கொடுத்ததற்கு யார் பொறுப்பு?
“நீர் நிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் ஆறு, குளம், ஏரி பகுதிகளில் இப்போது யாருக்கும் பட்டா கொடுப்பதில்லை. மேலும், சைதாப்பேட்டையில் அடையாறு கரைப்பகுதியில் வீடுகள் கட்டுவதற்கு எப்போது பட்டாக்கள் கொடுக்கப்பட்டன என்பது குறித்து விசாரித்து அங்கிருப்பவர்களை சட்டப்படி அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தால்தான் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும். இதில் அரசியல் குறுக்கீடு இருப்பதால் இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருக்கின்றன” என்று வருவாய்த் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
ஆறுகளில் எப்படி நடக்கிறது ஆக்கிரமிப்பு?
ஆற்றுப் படுகையில் விவசாய நிலங்கள் பிற உபயோகங்களுக்கு மாற்றப்படுகின்றன. அவ்வாறு வகை மாற்றம் செய்யப்படும் நிலங்களை அரசே அவ்வப்போது முறைப்படுத்துகிறது. மேலும், நகரின் வளர்ச்சி என்ற பெயரில் பல நீர்நிலைகளில் அரசே கட்டிடங்களை கட்டுகிறது. உதாரணமாக வேளச்சேரி ஏரியில் 65 சதவீத இடத்தை வீட்டு வசதி வாரியத்திடம் அரசு வழங்கியது. பின்னர், அந்த இடத்தை தனியாருக்கு வாரியம் கொடுத்தது. விவசாய நிலங்களில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் கட்டுவதற்கு தனியாருக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதுவும் ஒருவகையான ஆக்கிரமிப்புதான். எந்த அரசு அமைப்பிடமும், எவ்வித அனுமதியும் பெறாமல் தனி நபர்கள் ஆக்கிரமிப்பதும் பரவலாக நடைபெறுகிறது. இத்தகைய ஆக்கிரமிப்புகள் மூலம் சென்னை புறநகர் பகுதிகளில் இன்று ஏராளமான புதிய குடியிருப்புகள் தோன்றியுள்ளன. நுங்கம்பாக்கம், மாம்பலம், முகப்பேர், உள்ளகரம், கொளத்தூர், ஆதம்பாக்கம், வேளச்சேரி ஆகிய ஏரிகளைச் சேர்ந்த ஆயிரம் ஏக்கர் பாசனப் பகுதிகள் இன்று வீடுகள், கடைகள், வணிகக் கட்டிடங்கள், ஐ.டி.தொழில் நிறுவனங்கள் என பார்க்கும் திசையெல்லாம் கட்டிடங்களாகக் காட்சியளிக்கின்றன.
விழிப்புணர்வு இல்லாத மக்கள்
“மக்களில் பலரும் பொறுப்பற்ற நிலையில் இருப்பதால் ஆக்கிரமிப்பும் அவதியும் தொடர்கிறது. அரசு கொடுத்தாலும், தனியார் விற்றாலும் நீர்வழித் தடங்களில் இடங்களையோ, வீடுகளையோ வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். ஆறுகளுக்குள் குடிசை போட்டுவிட்டு, வெள்ள காலத்தில் நிவாரணத்தை எதிர்பார்ப்பதும், ஆக்கிரமிப்பை அகற்றினால் அரசைக் குறை சொல்வதும் தொடர் கதையாகிவிட்டது. கட்சிக்காரர்களுக்காக ஆற்றுக்குள்ளேயே பட்டா போட்டுக் கொடுப்பதை அரசியல்வாதிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும். அதிகாரிகளுக்கு கடமையும், பொறுப்பும் இருக்க வேண்டும் என்று கோஷமிடும் போராட்டக்காரர்கள் மக்களுக்கும் அந்த பொறுப்பு இருக்கிறது என்பதை மறக்கக்கூடாது” என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT