Published : 03 Aug 2023 04:37 AM
Last Updated : 03 Aug 2023 04:37 AM

சேலம் மத்திய சிறையில் சாராயம் காய்ச்சியவர்கள் மீது கடும் நடவடிக்கை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை: சேலம் மத்தியச் சிறையில் சாராயம்காய்ச்சியவர்கள், அதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் மீதுகடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல் முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டன. ஆனால், திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, கள்ளச் சாராயம் காய்ச்சுவதும், விற்பதும் சிறப்பாக நடந்துவருகிறது. விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் 22 பேர் கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்துள்ளனர். அரசின் டாஸ்மாக் கடையில் மது குடித்தவர்கள் மரணமடைந்த அவலங்கள் நிகழ்ந்தபோது, அவர்கள் சயனைடு அருந்தி இறந்ததாக அரசு தெரிவித்துள்ளது.

ஏதோ கிராமங்களில்தான் பூமிக்குள் சாராயம் புதைக்கப்பட்டு இருக்கிறது என்றால், சென்னையில் காவல் துறை தலைமை அலுவலகம்எதிரே, மெரினா கடற்கரையில், முதல்வர் ஸ்டாலின் செல்லும் சாலையின் அருகிலேயே சாராயஊறல்கள் புதைத்து வைக்கப்பட்டிருந்தது திமுக அரசின் செயலற்ற தன்மையின் உச்சமாகும்.

சேலம் மத்திய சிறையில், கைதிகள் சாராய ஊறல்களை தயாரித்து பூமியில் புதைத்து வைத்ததாகவும், அவை கண்டுபிடிக்கப்பட்டதால் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த ஆட்சியில், சிறைக்குள் கஞ்சா உட்பட போதை பொருட்களும் அதிக அளவில் கடத்தப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், சாராய ஊறல் தயாரிப்பு என்பது, தமிழகம் எந்த அளவுக்கு சீர்கெட்டுப் போயுள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டாகும்.

சேலத்தில் நடந்ததுபோல, மற்ற சிறைகளிலும் நடக்காமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் முதல்வர் எடுக்க வேண்டும். சேலம்மத்திய சிறையில் சாராயம் காய்ச்சியவர்கள், அதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x