Published : 03 Aug 2023 04:03 AM
Last Updated : 03 Aug 2023 04:03 AM
சேலம்: தென்மேற்குப் பருவ மழைக் காலம் தொடங்கி 2 மாதங்கள் நிறைவடைந்து விட்ட நிலையில் சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி மாவட்டங்களில் சராசரிக்கும் குறைவான அளவே மழை பெய்துள்ளது.
நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழைக் காற்று வீசி வருவதால், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், குஜராத் என பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளைத் தவிர, பெரும்பாலான இடங்களில் குறைந்தளவே மழைப்பொழிவு இருந்து வருகிறது.
குறிப்பாக, சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில், கடந்த ஜூன், ஜூலை என 2 மாதங்களில் இயல்பான அளவை விட குறைந்த அளவே மழை பெய்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதத்தின் இயல்பு மழையளவு 141.4 மிமீ. ஆனால், நடப்பு ஆண்டில் 95.1 மிமீ அளவுக்கே மழை பெய்துள்ளது. இது இயல்பை விட, 33 சதவீதம் குறைவு.
ஈரோடு மாவட்டத்தின் இயல்பு மழையளவு 94.0 மிமீ. ஆனால், 53.5 மிமீ அளவுக்கே மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 43 சதவீதம் குறைவு.
நாமக்கல் மாவட்டத்தின் இயல்பு மழையளவு 103.6 மிமீ. ஆனால், 63.7 மிமீ அளவுக்கே மழை பெய்துள்ளது. இது இயல்பை விட, 39 சதவீதம் குறைவு.
தருமபுரி மாவட்டத்தில் இயல்பு மழையளவு 124.2 மிமீ. ஆனால், இங்கு 113.8 மிமீ மழையே பெய்துள்ளது. இது இயல்பை விட, 8 சதவீதம் குறைவு.
கிருஷ்ணகிரியில் இயல்பை விட, 8 சதவீதம் கூடுதலாக மழை கிடைத்துள்ளது. இம்மாவட்டத்தின் இயல்பு மழையளவு 113.3 மிமீ என்ற நிலையில், 122.8 மிமீ மழை பெய்துள்ளது.
இயல்பான அளவை விட குறைந்தளவே மழை பெய்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மேலும், போதிய மழையில்லாமல் ஆறுகள், ஏரிகள், குளங்கள் ஆகியவற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்துவிட்டதும் விவசாயிகளை கவலையடையச் செய்துள்ளது. எனினும், செப்டம்பர் வரை மழைக் காலம் தொடரும் என்பதால், கூடுதல் மழை கிடைக்கும் என்று விவசாயிகளிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரியில் இயல்பை விட, 8 சதவீதம் கூடுதலாக மழை கிடைத்துள்ளது. இம்மாவட்டத்தின் இயல்பு மழையளவு 113.3 மிமீ என்ற நிலையில், 122.8 மிமீ மழை பெய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT