Published : 03 Aug 2023 06:29 AM
Last Updated : 03 Aug 2023 06:29 AM

பெரியபாளையம், மேல்மலையனூர், ஆனைமலை கோயில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டம் விரைவில் தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் கூடுதலாக பெரியபாளையம், மேல்மலையனூர், ஆனைமலை கோயில்களில் நாள்முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை செப்டம்பர் இறுதிக்குள் முதல்வர் தொடங்கி வைப்பார் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகள், சட்டப்பேரவை அறிவிப்புகளின் பணிமுன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம், அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

தமிழகத்தில் தற்போது 8 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டமும், 764 கோயில்களில் ஒரு வேளை அன்னதான திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, பெரியபாளையம் பவானி அம்மன், மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி, ஆனைமலை மாசாணி அம்மன் ஆகிய 3 கோயில்களில் முழுநேர அன்னதான திட்டத்தை செப்டம்பர் மாதத்துக்குள் முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார்.

அதேபோல, திருவண்ணாமலை குபேரலிங்கம் கோயில், காங்கேயம் மேட்டுப்பாளையம் நாட்டராய சுவாமி, புகளூர் புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி, மருங்காபுரி துவரங்குறிச்சி பூதநாயகி அம்மன், மணப்பாறை மட்டப்பாறை பத்ரகாளியம்மன் கோயில்,அறந்தாங்கி ராஜேந்திர சோழீஸ்வரர், ஆவுடையார்கோவில் சித்தக்கூர் சேவுகப்பெருமாள் ஆகிய 7 கோயில்களில் ஒருவேளை அன்னதான திட்டத்தையும் முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார்.

ஒருங்கிணைந்த பெருந்திட்ட வரைவின்கீழ் திருச்செந்தூர், பெரியபாளையம், பழனி, திருத்தணி, திருவண்ணாமலை, சமயபுரம், மருதமலை, சிறுவாபுரி, மேல்மலையனூர் உள்ளிட்ட 15 கோயில்களில் ரூ.1,495 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த ஆண்டு மயிலாப்பூர்,திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருநெல்வேலி, பேரூர் ஆகிய 5 இடங்களில் மகா சிவராத்திரி பெருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு கூடுதலாக மதுரை,திருவானைக்காவலில் நடத்தப்படவுள்ள மகா சிவராத்திரி விழா குறித்து விவாதிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x