Published : 02 Aug 2023 08:40 PM
Last Updated : 02 Aug 2023 08:40 PM
தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் யானைகள் காப்பகம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என ஒகேனக்கலில் நடந்த ஆடிப்பெருக்கு விழாவில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் பேசினார்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல்லில் 3 நாட்கள் ஆடிப்பெருக்கு விழா நடைபெறுகிறது. இன்று (ஆகஸ்ட் 2) இவ்விழாவின் தொடக்க விழா நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் நடந்த இவ்விழாவில் தமிழக சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி திட்ட விளக்க உரை ஆற்றினார். தொடர்ந்து தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் சிறப்புரை ஆற்றினார்.
விழாவில் அவர் பேசியது: "தமிழகத்தில் நடந்து வரும் திராவிட மாடல் ஆட்சியின் சிறப்பை நான் கூறி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. ஒவ்வொரு திட்டங்களையும் தமிழக முதல்வர் வரிசைப்படுத்தி முக்கியத்துவம் அளித்து செயல்படுத்தி வருகின்றார். உலகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தலைவர்களும் பாராட்டும் வகையிலான ஆட்சியை தமிழகத்தில் தந்து கொண்டிருக்கிறார். இந்த நல்லாட்சியில் தமிழக சுற்றுலா துறையின் வளர்ச்சிக்கான திட்டங்கள் விரைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அடிக்கடி துறை வாரியான அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தி வளர்ச்சிப் பணிகளை வேகப்படுத்தி வருகிறார். இவ்வாறு கூட்டங்கள் நடத்தி குறைகளை நிவர்த்தி செய்து வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளச் செய்து வருகிறார்.
தமிழகம் முழுக்க உள்ள தமிழ்நாடு ஓட்டல்களில் வாடிக்கையாளர்களுக்கு அமுதம் எனும் திட்டத்தின் கீழ் வாழை இலையில் மட்டுமே உணவு வழங்க வேண்டும் என உத்தரவிட்டு செயல்படுத்தச் செய்து வருகிறார். தமிழ்நாடு ஓட்டல்களில் அமைந்துள்ள உணவகங்களில் வழங்கப்படும் உணவு வகைகளின் சுவை மற்றும் தரத்தை மேலும் உயர்த்தும் வகையில் பிரபல சமையல் கலைஞர்கள் மூலம் தமிழ்நாடு ஓட்டல் சமையல் பணியாளர்களுக்கு போதிய பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு ஓட்டல்களில் உள்ள அறைகளின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு மிகத் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. நட்சத்திர விடுதிகளில் உள்ள படுக்கைக்கு நிகரான தரத்தில் படுக்கை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும். குடும்ப நலனுக்காக ஆண்டு முழுக்க பல்வேறு பணிகளில் ஈடுபடும் மக்கள் ஆண்டுக்கு ஒரு முறை குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் இணைந்து சில நாட்கள் சுற்றுலா செல்ல வேண்டும் என்பதை விரும்புகின்றனர். இவ்வாறு சுற்றுலா வருபவரின் மனம் மகிழ்ச்சியடையும் வகையில் சுற்றுலா தலங்களை மேம்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்துக்கு சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் 22 கோடி சுற்றுலா பயணிகள் தமிழகத்துக்கு வருகை தந்துள்ளனர். நட்பா ஆண்டில் இந்த எண்ணிக்கை 30 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல ஒகேனக்கல்லுக்கு கடந்தாண்டில் ஒரு கோடி சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். இதை 2 கோடியாக உயர்த்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஒகேனக்கலில் எதிர்காலத்தில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் சூழல் சுற்றுலா அம்சங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
நீலகிரி மாவட்டம் முதுமலையில் இருப்பது போலவே தருமபுரி மாவட்டத்திலும் யானைகள் காப்பகம் அமைத்தால் மக்களிடம் சிறந்த வரவேற்பு கிடைக்கும். எனவே, அதற்கான முயற்சிகளை அதிகாரிகள் மேற்கொள்வர். ஒகேனக்கலில் தற்போது ரூ. 18 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா தல மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வரும் டிசம்பர் மாதத்துக்குள் இந்த பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணிகள் முடிவுற்றவுடன் தமிழக முதல்வரை அழைத்து வந்து திறக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.
தருமபுரி அடுத்த வத்தல்மலையில் ரூ.2.23 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா அம்சங்கள் விரைவில் உருவாக்கப்படும். சுற்றுலா தலத்தின் மூலம் ஒரு நாட்டின், ஒரு மாநிலத்தின், அந்த தலம் அமைந்துள்ள கிராமத்தின் பொருளாதாரம் சிறப்பாக வளர்ச்சி பெறும். இதற்கு அந்தந்த பகுதி உள்ளூர் மக்கள் சுற்றுலா பயணிகளிடம் அன்புடனும், கனிவுடனும் நடந்து கொள்வது முக்கியம்.தமிழகத்தில் கடற்கரை சுற்றுலா, மருத்துவ சுற்றுலா, ஆன்மீக சுற்றுலா உட்பட பலதரப்பட்ட சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கும் வகையில் சுற்றுலா தலங்களை மேம்படுத்துவது சுற்றுலா அம்சங்களை ஏற்படுத்துவது உள்ளிட்ட பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது", இவ்வாறு பேசினார்.
விழா முடிவில், 77 பயனாளிகளுக்கு ரூ.72 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் வழங்கினார். தொடர்ந்து சுற்றுலா மற்றும் கலை பண்பாட்டு துறைகளில் சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில், பென்னாகரம் எம்எல்ஏ ஜி.கே.மணி, தருமபுரி எம்எல்ஏ வெங்கடேஸ்வரன், மாவட்ட வன அலுவலர் அப்பால நாயுடு, முன்னாள் அமைச்சர் பழனியப்பன், முன்னாள் எம்எல்ஏ தடங்கம் சுப்பிரமணி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT