Published : 02 Aug 2023 07:41 PM
Last Updated : 02 Aug 2023 07:41 PM
சென்னை: ரூ.2820.90 கோடி மதிப்பீட்டில் 6 பெட்டிகள் கொண்ட 28 ரயில் தொடர்களை பன்னாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து நிதி பெற்று கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கருத்துருவுக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மொத்தம் 54.1 கி.மீ நீளத்துடன் கூடிய இரண்டு வழித்தடங்களை கொண்ட சென்னை மெட்ரோ ரயில் கட்டம்-I (நீட்டிப்புடன் சேர்த்து) முழுமையாக இயக்கப்பட்டு வருகிறது. கட்டம்-Iஇன் இயக்கத்துக்காக 4 பெட்டிகளுடன் கூடிய 52 ரயில் தொடர்களை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்கெனவே கொள்முதல் செய்திருந்தது.
முற்பகல் பீக் ஹவர் சேவைகள் காலை 8 மணி முதல் முற்பகல் 11 மணி வரையிலும் மற்றும் பிற்பகல் பீக் ஹவர் சேவைகள் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலுமாக, தற்போது ஒவ்வொரு நாளும் 19 மணி நேரம் (அதிகாலை 5 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை) ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இயக்கத்துக்காக இருப்பில் வைக்கப்படும் இரண்டு இரயில் தொடர்களையும் சேர்த்து மொத்தம் 45 ரயில் தொடர்கள் வாராந்திர பீக் ஹவர் இயக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன.
சென்னை மெட்ரோ ரயில் கட்டம்–Iஇன் கட்டமைப்பு முழுவதையும் இயக்குவதற்காகவும், 2028ம் ஆண்டின் உத்தேச பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் கூடுதலாக தேவைப்படும் ரயில் பெட்டிகளை கணக்கிட்டு ரூ.2820.90 கோடி மதிப்பீட்டில் 6 பெட்டிகள் கொண்ட 28 ரயில் தொடர்களை பன்னாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து நிதி பெற்று கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்த சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கருத்துருவுக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இக்கருத்துரு ஒன்றிய அரசின் வழியாக பன்னாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து வெளிநாட்டு கடனுதவி பெறுவதற்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT