Published : 02 Aug 2023 07:17 PM
Last Updated : 02 Aug 2023 07:17 PM

‘செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிப்பது முக்கியம். ஏன்?’ - உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை வாதம்

அமைச்சர் செந்தில் பாலாஜி | கோப்புப்படம்

புதுடெல்லி: செந்தில் பாலாஜியை தனிப்பட்ட முறையில் காவலில் எடுத்து விசாரிப்பது மிகவும் முக்கியமானது என்ற அமலாக்கத் துறையின் வாதம் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜி தரப்பின் மேல்முறையீட்டு வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்த நிலையில், அவரை விடுவிக்கக் கோரி அவருடைய மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த, 3-வது நீதிபதியான சி.வி.கார்த்திகேயன், நீதிபதி டி.பரத சக்ர வர்த்தியின் தீர்ப்பை உறுதி செய்தார். அவர் தனது தீர்ப்பில், செந்தில் பாலாஜியும் சட்டத்துக்கு உட்பட்டவர்தான் என்பதால் அவரை அமலாக்கத் துறை கைது செய்தது செல்லும் என்றும், அவர் பரிபூரணமாகக் குணமடைந்த பிறகு அவரை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்றும் தீர்ப்பளித்தார்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பிலும், அமலாக்கத் துறை தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஏ.எஸ்.போபண்ணா மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான துஷார் மேத்தா, "செந்தில் பாலாஜி தங்களை இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடத்த விடாமல் அனைத்து வகைகளிலும் தடுத்து இடையூறுகளை விளைவித்தார். செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை எங்களால் விசாரணைக்கு உட்படுத்த முடியவில்லை.

எனவே உச்ச நீதிமன்றம், அவர் மருத்துவமனை மற்றும் நீதிமன்ற காவலில் உள்ள இருந்த காலகட்டத்தை முதல் 15 நாட்களாக எடுத்துக் கொள்ளக்கூடாது. செந்தில் பாலாஜியை விசாரணைக்கு எடுத்து விசாரிக்கும் வரையறுக்கப்பட்ட காலமாகவும் கருதக் கூடாது. எனவே, தற்போது அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்.

இந்த வழக்கில், முதலில் புகார் கொடுத்தவர்கள் செந்தில் பாலாஜியைத்தான் முதன்மைக் குற்றம்சாட்டப்பட்டவராக கூறினார்கள். அதன்பின்னர் சமாதானமாக போவதாகக் கூறி வழக்கிலிருந்து விடுபட்டுக் கொள்வதாக தெரிவித்தனர். ஆனால், இதை எதிர்த்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. லஞ்சம், ஊழல், பொதுமக்கள் பணத்தை கையாடல் என பல்வேறு புகார்கள் செந்தில் பாலாஜிக்கு எதிராக கொடுக்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜியிடம் வாக்குமூலங்களை பெற முயற்சித்தோம். ஆனால், அவர் எந்த ஒத்துழைப்பையும் வழங்கவில்லை. இதனால்தான் அவரை கைது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் அவர் ஈடுபட்டிருப்பார் என்ற சந்தேகத்துக்கு வலுவான காரணங்கள் இருந்ததால்தான் உரிய விதிமுறைகளை பின்பற்றி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டபோது அவருக்கு அது தொடர்பான தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், அங்கிருந்த இரண்டு சாட்சிகளிடம் கையொப்பமும் பெறப்பட்டது. 24 மணி நேரத்துக்குள் சம்பந்தப்பட்ட நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கை சரி என்பதால்தான் கீழமை நீதிமன்ற நீதிபதி அவருக்கு நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டார்.

செந்தில் பாலாஜி அதிகாலையில் கைது செய்யப்படுகிறார். உடனடியாக அவருக்கு நெஞ்சுவலிப்பதாக கூறியதைத் தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாக தெரிவித்தனர். அவருக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டாலும், மாவட்ட குற்றவியல் நடுவர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, அவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இதனிடையே, ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த வழக்கில், செந்தில் பாலாஜியை தனிப்பட்ட முறையில் காவலில் எடுத்து விசாரிப்பது மிகவும் முக்கியமானது. ஒருவர் நீதிமன்ற காவலில் இருக்கும்போது அவரை ஒப்படைக்க கோரி ஆட்கொணர்வு வழக்கு தாக்கல் செய்ய முகாந்திரம் இல்லை. அந்த வகையில் செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. குற்றம்சாட்டப்பட்டவரை காவலில் எடுத்து விசாரிப்பது என்பது அமலாக்கத் துறைக்கு இருக்கும் உரிமை. அதை யாராலும் மறுக்க முடியாது.

செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் இருக்கும்போதே விசாரிக்கலாம் என நீதிமன்றம் கூறுகிறது. ஆனால், அவரை மருத்துவமனையை விட்டு வெளியே அழைத்துச் செல்லக் கூடாது என்றும் கூறுகிறது. அப்படி என்றால் அவரை நாங்கள் காவலில் எடுத்து விசாரிக்கக் கூடாது என்று அர்த்தமாகிறது. எனவேதான், அவர் மருத்துவமனை மற்றும் நீதிமன்ற காவலில் இருக்கும் நாட்களை விசாரணை காலமாக கருதக் கூடாது என கோருகிறோம்.

உதாரணமாக, நாங்கள் கைது செய்து வைத்துள்ள ஒருவர் எங்கள் காவலில் இருந்து தப்பித்து தலைமறைவாகி விடுகிறார். பின்னர், 15 நாட்கள் கழித்து சரணடைந்து விட்டு, உங்களுக்கு வழங்கப்பட்ட 15 நாட்கள் முடிந்து விட்டது. இனி நீங்கள் காவலில் எடுத்து விசாரிக்க கூடாது எனக் கூற முடியுமா? அதேபோலத்தான் இந்த வழக்கிலும் கருத வேண்டும்.குற்றம்சாட்டப்பட்ட நபர்கள், அமலாக்கத் துறைக்கு உள்ள உரிமைகளை மறுக்கவும் அவற்றை மீறவும் அதிகாரம் கிடையாது. அவ்வாறு செய்யவும் அனுமதிக்கக் கூடாது. நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்தபோது கூட செந்தில் பாலாஜியை அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு தங்களால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியவில்லை.

இந்த குறிப்பிட்ட காலத்தை விசாரணை காலமாக கருதக் கூடாது என நாங்கள் கோரிக்கை வைத்தும், அது தொடர்பாக நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்காமல் உள்ளது. செந்தில் பாலாஜி மருத்துவமனை மற்றும் நீதிமன்ற காவலில் உள்ள நாட்களை அமலாக்கத் துறைக்கான விசாரணை காலமாக கருதினால், செந்தில் பாலாஜி சட்டத்தை உடைக்க நாம் அனுமதிக்கிறோம் என்று அர்த்தமாகிறது. ஒருவரை நீதிமன்ற காவலில் வைப்பது என்பது அந்த நபரை முழு கட்டுப்பாட்டில் வைத்திருப்பது ஆகும். மாறாக அவரை மருத்துவமனையிலோ அல்லது சிறையிலோ சென்று விசாரிப்பது அல்ல" என்று அவர் தனது வாதத்தை நிறைவு செய்தார்.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், செந்தில் பாலாஜி தொடர்ந்து மேல்முறையீட்டு வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x