Last Updated : 02 Aug, 2023 05:58 PM

 

Published : 02 Aug 2023 05:58 PM
Last Updated : 02 Aug 2023 05:58 PM

கீழடியில் காவல் நிலையம் கட்ட தடை கோரியவருக்கு அபராதம் - கலைஞர் நூலகத்துக்கு ரூ.15,000 வழங்க உத்தரவு

மதுரை: கீழடியில் அரசு புறம்போக்கு நிலத்தில் காவல் நிலையம் கட்டுவதற்கு தடை கோரி மனு தாக்கல் செய்தவருக்கு உயர் நீதிமன்றம் அபராதம் விதித்தது.

சிவகங்கை மாவட்டம் கீழடியைச் சேர்ந்த கோட்டைச்சாமி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: 'கீழடி கிராம தலைவராக இருந்து வருகிறேன். இங்கு பழமையான அய்யனார் கோயில், அம்மன் கோயில், ஈஸ்வரன் கோயில் மற்றும் வெள்ளைப்பிள்ளையார் கோயில்கள் உள்ளன. இக்கோயில்களை கீழடி கிராமத்தைச் சேர்ந்த 8 கரைகாரர்கள் பராமரித்து வருகின்றனர். இங்கு அய்யனார் கோயில் களம் புறம்போக்கு இடத்தில் உள்ளது. கோயில் அருகே களம் புறம்போக்கு நிலத்தில் காவல் நிலையம் கட்டுவதற்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இங்கு காவல் நிலையம் கட்டினால் கோயில் திருவிழா மற்றும் பொதுமக்கள் கூடுவதில் இடையூறு ஏற்படும்.

இதனால் அய்யனார் கோயில் அருகே காவல் நிலையம் கட்டும் திட்டத்தை கைவிடக்கோரி சிவகங்கை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர் ஆகியோருக்கு மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. கோயில் அருகேயுள்ள களம் புறம்போக்கு நிலத்தில் 300 ஆண்டுகளுக்கு மேலாக நெல் சேமிப்பு மற்றும் நெல் உலர்த்துதல் பணிகளும், கோயில் திருவிழாக்களும் நடைபெறும். அந்த இடத்தை ஆக்கிரமித்து காவல் நிலையம் கட்டுவது சரியல்ல. எனவே, களம் புறம்போக்கு நிலத்தில் காவல் நிலையம் கட்டுவதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்' என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ''அய்யனார் கோயில் இடம் அரசு பதிவேட்டில் புறம்போக்கு நிலம் என வகைப்படுத்தப்பட்டு உள்ளது. புறம்போக்கு நிலத்தில் தேவைப்படும் பணிகளை மேற்கொள்ள அரசுக்கு உரிமை உள்ளது. எனவே, அந்த இடத்தில் காவல்நிலையம் கட்ட அனுமதிக்க வேண்டும்'' என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், ''அரசு புறம்போக்கு நிலத்தை அரசு என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். மனுதாரருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இப்பணத்தை மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலக வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது'' என உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x