Published : 02 Aug 2023 05:45 PM
Last Updated : 02 Aug 2023 05:45 PM

தனி கிராம ஊராட்சியாக மாறுமா அல்லேரி? - மலை கிராம மக்கள் கோரிக்கையும் பின்புலமும்

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் பாம்பு கடித்து 2 பேர் உயிரிழந்த நிலையில் சாலை வசதிக்காக காத்திருக்கும் அல்லேரி கிராம மக்கள் தங்களின் மலை கிராமங்களை உள்ளடக்கி தனி கிராம ஊராட்சியாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட ஜவ்வாது மலை தொடரின் ஒரு பகுதியாக அல்லேரி மலை கிராமம் உள்ளது. ஏறக்குறைய 200 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட அல்லேரி மலை கிராமம் இயற்கை எழில் சூழ்ந்த வனப்பகுதிகளை உள்ளடக்கி இருப்பதுடன், பெரியளவில் வளர்ச்சி அடையாத கிராமமாக இருந்து வருகிறது.

முறையான சாலை வசதிக்காக போராடும் அல்லேரி மலை கிராமத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஒன்றரை வயது பெண் குழந்தையும், கூலி தொழிலாளி ஒருவரும் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது என்பதுடன், அரசு இயந்திரங்கள் அல்லேரி மலைவாழ் மக்கள் மீது முழு வீச்சில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர்.

பீஞ்சமந்தை மலை கிராம ஊராட்சிக்கு உட்பட்ட அல்லேரி மலை கிராமம் சுரட்டியான்கொல்லை, அத்திரமரத்துகொல்லை, ஆட்டுகொந்தரை, பலாமரத்துகொல்லை, நெல்லிமரத்துகொல்லை, கரப்பனாங்கொல்லை, ஜடையன்கொல்லை, அவுசரிஓடை, கூனம்பட்டி, வாழைப்பந்தல், பங்களாமேடு, ஏரிகொல்லை, மருதவல்லிமேடு, பெரியதட்டாங்குட்டை என 14 குக்கிராமங்களை உள்ளடக்கியது.

சுமார் 2,800 மக்கள் தொகை கொண்ட பீஞ்சமந்தை கிராமத்தில் வாக்காளர்கள் மட்டும் சுமார் 1,000 பேர் உள்ளனர். தொழில்: சாமை, கேழ்வரகு, உளுவல்(கொள்ளு), கம்பு, சோளம், நெல், வாழை ஆகியவை முக்கிய பயிர் தொழிலாக உள்ளது. உள்ளூரில் வேலை இல்லாவிட்டால் பலர் குடும்பம், குடும்பமாக கேரள காபி, மிளகு தோட்டங்களில் தங்கி நாள் ஒன்றுக்கு ரூ.300 கூலிக்கு வேலை செய்வதாக கிராமத்து பெண்கள் தெரிவிக்கின்றனர்.

சிலர் வேலூர், அணைக்கட்டு உள்ளிட்ட பகுதிகளில் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். 200 முதல் 300 அடி ஆழத்தில் ஆழ்துளைக் கிணறு அமைத்து போர்வெல் மூலம் விவசாய பயிர்களை காப்பாற்றி வருகின்றனர். அதேநேரம், அல்லேரி மலை கிராமத்தில் ஆண்டு முழுவதும் வற்றாத நீரூற்றை பயன்படுத்தி சிலர் விவசாயம் செய்து வருகின்றனர். மழைக் காலங்களில் நீரூற்றில் இருந்து செல்லும் வெள்ள நீர் மலையடிவாரத்தில் உள்ள வரதலம்பட்டு வழியாகச் சென்று பாலாற்றில் கலக்கிறது.

அல்லேரி மலை கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கூறும்போது, ‘‘எனக்கு சொந்தமாக 2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. நெல் பயிரிட்டுள்ளேன். எங்கள் கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறை இருந்ததே கிடையாது. எங்கள் கிராமத்தில் இருந்து ஓடையாக செல்லும் தண்ணீரை தேக்கி வைக்க தடுப்பணை கட்ட வேண்டும். வனத்துறை அனுமதி இருந்தால் மட்டுமே அதை செய்ய முடியும். ஆங்காங்கே தடுப்பணை கட்டினால் தேக்கி வைக்கப்படும் நீரை பயன்படுத்தி நாங்கள் விவசாயம் செய்ய முடியும்’’ என்றார்.

மேலும் அவர் கூறும்போது, ‘‘எங்களுக்கு சாலை வசதி செய்து கொடுத்தால் மட்டும் போதும், மற்றதை நாங்களே பார்த்துக்கொள்கிறோம். எங்கள் கிராமம் பீஞ்சமந்தை பஞ்சாயத்துக்கு உட்பட்டது. இங்கிருந்து பீஞ்சமந்தைக்கு நேரடி பாதை எதுவும் இல்லை. மலையில் இருந்து வரதலம் பட்டுக்கு கீழே இறங்கி அங்கிருந்து முத்துக்குமரன் மலை வழியாக பீஞ்சமந்தைக்கு 25 கி.மீ தொலைவு செல்ல வேண்டியுள்ளது. அல்லேரியை தனி பஞ்சாயத்தாக அறிவித்தால் நாங்கள் நீண்ட தொலைவுக்கு அலைய வேண்டியதில்லை’’ என்றார்

பிரகாஷ்

கல்வி; வேலை வாய்ப்பு: அல்லேரி மக்களை பொறுத்தவரை விரைவில் சாலை அமைத்துக் கொடுத்து சோப்பு, ஊதுவத்தி போன்ற ஏதாவது ஒரு தொழிற்சாலை அமைத்து 100 பேருக்கு வேலை கொடுத்தால் எப்படியாவது பிழைத்துக்கொள்வார்கள். 5-ம் வகுப்பு வரை இருக்கும் உண்டி உறைவிட பள்ளியின் ஆசிரியர் தினசரி பேரணாம்பட்டில் இருந்து புறப்பட்டு தினசரி பகல் 12 மணிக்குத்தான் வருகிறார்.

அந்த நேரத்தில் பள்ளியில் மாணவர்கள் யாரும் இருப்பதில்லை. இதனால், மாணவர்களின் கல்வியும் பாதிக்கிறது. இங்கு பெரும்பாலும் கைநாட்டுகளாக இருப்பதாக கவலை தெரிவிக்கின்றனர். 5-ம் வகுப்பு முடித்தவர்கள் அடுத்த கல்வியை பெறுவதற்காக வேலூரில் உள்ள விடுதிகளில் தங்கி படிக்க ஆரம்பிக்க தொடங்கியுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகத்தான் எங்கள் கிராமத்து பிள்ளைகளுக்கு கல்லூரிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

சுந்தரேசன்

அல்லேரி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரேசன் என்பவர் பீஞ்சமந்தை ஊராட்சியின் துணைத் தலைவராக உள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, ‘‘மாவட்ட ஆட்சியர் எங்கள் கிராமத்தை பார்த்தவுடன் இங்கு படித்த மாணவர்களின் பட்டியலை எடுத்து கொடுக்குமாறு கூறியுள்ளார். அவர்களின் கல்வி தகுதிக்கு ஏற்ப ஏதாவது வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க இருப்பதாக? உறுதியளித்துள்ளார்.

அனைவருக்கும் ஆடு, மாடு வழங்கப்படும் என்று கூறியுள்ளார். எது இருந்தாலும் சாலை வசதி மட்டும் வந்துவிட்டால் எங்கள் வாழ்வாதாரம் மாறிவிடும். எங்கள் கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு பழங்குடியினர் சாதிச்சான்றிதழ் வழங்க சிறப்பு முகாம் நடத்தினால் விடுபட்டவர்கள் சான்றிதழ் பெற்றுக்கொள்ள முடியும். அது இருந்தால்தான் அரசின் திட்டங்களை பெற முடிகிறது. தனி பஞ்சாயத்து கோரிக்கையை நிறைவேற்றினால் நாங்கள் சிரமப்பட மாட்டோம்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x