Published : 02 Aug 2023 03:13 PM
Last Updated : 02 Aug 2023 03:13 PM
பொள்ளாச்சி: ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள பழங்குடியின மக்களின் தொகுப்பு வீடுகள் குடியிருப்பதற்கு தகுதியற்றதாக உள்ளதால் தினமும் மக்கள் உயிரை பணயம் வைத்து வசித்து வருகிறார்கள். புதிய குடியிருப்புகள் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் பொள்ளாச்சி, உலாந்தி, வால்பாறை மற்றும் மானாம்பள்ளி ஆகிய வனச்சரகங்கள் உள்ளன. இவற்றில் வனப்பகுதியில் 17 பழங்குடியின கிராமங்களும், ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் 48 கிராமங்களும் உள்ளன. சுமார் 2,400 வீடுகளில் 8,000-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர்.
இதில் ஆழியாறு, சின்னாறுபதி, புளியங்கண்டி, டாப்சிலிப், கோழிகமுத்தி, பழைய சர்க்கார்பதி, தம்மம்பதி, நாகரூத்து, சுள்ளிமேட்டுப்பதி உட்பட பல கிராமங்களில் 40 ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்பட்டன. பல பழங்குடியின கிராமங்களில் தொகுப்பு வீடுகள் சிதலமடைந்து உள்ளன. இதுவரையில் அரசு சார்பில் தொகுப்பு வீடுகள் புதுப்பிக்கப்படாமல் உள்ளன.
குறிப்பாக, கோட்டூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆழியாறு கிராமத்தில் புளியங்கண்டி பகுதியில் கான்கிரீட் மேற்கூரையுடன் கட்டப்பட்ட வீடுகளில் சிமென்ட் பூச்சு உதிர்ந்து பக்கவாட்டு சுவர்கள் விரிசலுடன் காணப்படுகின்றன. கான்கிரீட் மேற்கூரைகளில் மழைநீர் கசிவதால் நிம்மதி இழந்துள்ளனர். இந்நிலையில், சொந்த செலவில் தார்ப்பாலின் சீட் வாங்கி வீட்டின்மேற்கூரையில் அமைத்துள்ளனர்.
பழுதடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய தொகுப்புவீடுகள் கட்டி தரவேண்டும் என பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறும்போது, ‘‘ஆனைமலை தாலுகா கோட்டூர் பேரூராட்சிக் குட்பட்டது புளியங்கண்டி கிராமம். இப்பகுதியில் 200-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் மூன்று தலைமுறையாக வசித்து வருகிறோம்.
எங்களுக்கு கடந்த 2001-ம் ஆண்டில் தமிழக வனத்துறை சார்பில் 41 தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்பட்டன. தற்போது அந்த வீடுகளின் மேற்கூரையில் சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. மேலும் வீடுகளின் சுவர்கள் வலுவிழந்து ஆபத்தான நிலையில் உள்ளன. எந்நேரமும் வீடுகள் இடிந்து விழும் தருவாயில் உள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
புதிய தொகுப்பு வீடுகள் கட்டித்தரக்கோரி பழங்குடியினர் நலத்துறை, வனத்துறை, வருவாய்துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மழைக் காலத்தில் வீடுகள் இடிந்து விழுந்து அசம்பாவிதம் நடைபெறும் முன்பு புதிய வீடுகள் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT