Published : 02 Aug 2023 05:00 AM
Last Updated : 02 Aug 2023 05:00 AM

மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் கிரீமிலேயர் முறை ஒழிக்கப்பட வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

சென்னை: மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு சமூகநீதி கிடைக்க கிரீமிலேயர் முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள் ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

இந்தியா முழுவதும் உள்ள 45 மத்தியப் பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் 1,341 பேராசிரியர்களில் 60 பேர், அதாவது 4 சதவீதத்தினர் மட்டுமே பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். 2,817 இணைப் பேராசிரியர்களில் 187 பேர், அதாவது 6 சதவீதத்தினர் மட்டுமே பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களில் தெரியவருகிறது.

மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு1990-ம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு 34 ஆண்டுகள் ஆகியும் பேராசிரியர் பணிகளில் ஓபிசி வகுப்பினரின் பிரதிநிதித்துவம் 4 சதவீதத்தை தாண்டாதது அதிர்ச்சியளிக்கிறது. ஆனால் உயர்வகுப்பினர் நிரம்பியுள்ள பொதுப்பிரிவினரின் பிரதிநிதித்துவம் பேராசிரியர் பணியிடங்களில் 85 சதவீதமாகவும், இணைப் பேராசிரியர் பணியிடங்களில் 82 சதவீதமாகவும் உள்ளது.

27 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில் திட்டமிட்டு செய்யப்படும் சதிகள்தான் சமூகநீதிசூறையாடல்களுக்கு காரணம். இவ்வளவையும் செய்துவிட்டு, ஓபிசி பிரிவில் தகுதியானவர்கள் இல்லை என்று கூறி, அந்த இடங்கள் பொதுப்பிரிவுக்கு மாற்றப்பட்டு, உயர்சாதியினரைக் கொண்டு நிரப்பப்படுகின்றன. இப்படித்தான் சமூகநீதி சூறையாடப்படுகிறது.

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சமூகநீதி சூறையாடப்படுவதை தவிர்க்க, முதல் நடவடிக்கையாக கிரீமிலேயர் முறை ஒழிக்கப்பட வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் முழுக்க முழுக்க அவர்களைக் கொண்டே நிரப்பப்படவேண்டும். அந்த இடங்கள் பொதுப்பிரிவுக்கு மாற்றப்படக்கூடாது.

இவ்வாறு அவர் தெரிவித்துள் ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x