Published : 02 Aug 2023 04:57 AM
Last Updated : 02 Aug 2023 04:57 AM
சென்னை: சிவில் வழக்குகள் நீண்டகாலமாக நிலுவையில் இருந்து வருவதைகருத்தில்கொண்டு சிவில் நீதிபதிகள் தேர்வை ஆண்டுதோறும் நடத்த வேண்டும் என டிஎன்பிஎஸ்சி-க்கு சென்னை உயர் நீதி மன்ற நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
தமிழகத்தில் காலியாக உள்ள சிவில் நீதிபதிகள் பதவிகளுக்கான தேர்வு குறித்த அறிவிப்பாணையை டிஎன்பிஎஸ்சி கடந்த ஜூன் 1-ம்தேதி வெளியிட்டது. அதன்படி, ஆக.19-ம் தேதி இந்த தேர்வுநடைபெற உள்ளது. வழக்கறிஞராக 3 ஆண்டுகளுக்கு மேலாக தொழில் புரிந்து வருபவர்கள் மற்றும் 3 ஆண்டுகளுக்குள் சட்டப்படிப்பை முடித்தவர்கள் இத்தேர்வில் பங்கேற்க முடியும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிபந்தனைகளை தளர்த்தி, வயது மற்றும் வழக்கறிஞர் தொழில் அனுபவத்தில் சலுகை வழங்கி தங்களையும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என கோரி சட்ட பட்டதாரிகள் சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
300 பணியிடங்கள் காலி: சிவில் நீதிபதிகள் தேர்வுக்கானடிஎன்பிஎஸ்சியின் அறிவிப்பாணையில் எந்த விதிமீறலும் இல்லை. இந்த வழக்கில் மனுதாரர்கள் கோரும் நிவாரணங்களை வழங்கஇயலாது. கரோனா ஊரடங்கு காலகட்டத்தில் சிவில் நீதிபதிகள் பதவிகளுக்கான தேர்வு நடத்தப்படவில்லை. மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்றால் சிவில் நீதிபதி பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறாமலேயே போய்விடும்.
கீழமை நீதிமன்றங்களில் சுமார்300 சிவில் நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், சிவில் நீதிபதிகளாக பணிபுரிபவர்கள் சார்பு நீதிபதிகளாகவும், சார்பு நீதிபதிகளாக இருப்பவர்கள் மாவட்ட நீதிபதிகளாகவும் பதவி உயர்வு பெற முடியாமல் உள்ளனர். கீழமை நீதிமன்றங்களில் 30 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட சிவில் வழக்குகள்கூட நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வருகிறது.
எனவே, நிலுவை வழக்குகள் மற்றும் எதிர்கால வழக்குகள், நீதிபதிகளின் பணி ஓய்வு ஆகியவற்றை கருத்தில்கொண்டு சிவில் நீதிபதிகள் தேர்வை டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் ஆண்டுதோறும் நடத்த வேண்டும்.
இவ்வாறு தெரிவித்த நீதிபதிகள், வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT