Published : 02 Jul 2014 12:34 PM
Last Updated : 02 Jul 2014 12:34 PM

முப்பது ஆண்டுகளில் 4,600 ஆயுள் கைதிகளை பட்டதாரிகளாக்கிய நோவா: ஓய்வுபெற்ற பேராசிரியரின் ஒப்பற்ற சேவை

பேராசிரியர் நோவா - தமிழகத்தின் முக்கிய சிறைகளில் உள்ள ஆயுள் கைதிகளில் இவரைத் தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள். 30 வருடங்களுக்கும் மேலாக ஆயுள் கைதிகளை நல் வழிப்படுத்தும் பணியை செய்து கொண்டிருக்கிறார் நோவா.

தூத்துக்குடியைச் சேர்ந்த நோவா மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த் துறை தலைவராக இருந்தவர். 1979-ல் பணிப் பாதுகாப்பு கோரி தமிழகம் முழுவதும் கல்லூரிப் பேராசிரி யர்கள் நடத்திய போராட்டத்தில் கைதான நோவா, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட் டார். அவரது 15 நாள் சிறை அனுபவம்தான் ஆயிரக்கணக் கான ஆயுள் கைதிகளை புது மனிதர் களாக்கிக் கொண்டிருக்கிறது.

தனது முப்பது வருட சேவை குறித்து நோவா நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.

’’சிறைக்குள்ளே கைதிகள் கூட்டம் கூட்டமாக உட்கார்ந்து பொழுதைக் கழிக்கிறார்கள். தாதாக்கள் மேடைகளில் உட்கார்ந்து கொண்டு, எப்படி கொள்ளையடிக்கலாம், கொலை செய்யலாம், எப்படி கள்ள நோட்டு அடிக்கலாம் என ஜூனியர் கைதி களுக்கு கிளாஸ் எடுக்கிறார்கள். சிறையில் இருந்த நாட்களில் நான் கண்ட காட்சி இதுதான்.

வெளியில் வந்ததுமே, ‘இந்த அவலத்தை எப்படியாவது மாற் றுங்கள்; கைதிகளை நல்வழிப் படுத்துங்கள்’ என்று அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆருக்கு கடிதம் எழுதினேன். பதிலுக்கு அவர், ’இதை மாற்ற என்ன செய்யலாம் என நினைக்கின்றீர்கள்?’ என்று எனக்கு கடிதம் எழுதினார். ’எனக்குத் தெரிந்த பேராசிரியர்களை அழைத் துச் சென்று சிறைக் கைதிகளுக்கு இலவசமாக கல்வியை போதிக்க முடியும்’ என்று சொன்னேன். உடனே, எனது பெயரிலேயே ஒரு அரசாணையை வெளியிட்டு தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளில் ஆயுள் கைதிகளுக்கு கல்வி கற்பிக்கும் பணியை என் னிடம் ஒப்படைத்தார் எம்.ஜி.ஆர்.

இதையடுத்து, ஒரு மத்திய சிறைக்கு 5 பேராசிரியர்கள் வீதம் தமிழகத்தின் அனைத்து சிறை களிலும் ஆயுள் கைதிகளுக்கு கல்வி போதிக்கும் பணியில் இறங் கினோம். திறந்த நிலை பல் கலைக்கழகங்கள் மூலம் பலரை எம்.ஏ. எழுத வைத்தோம். அவர் களுக்காக 1988-ல் மதுரை, திருச்சி மத்திய சிறைகளில் சிறப்பு பட்டமளிப்பு விழாக்களை நடத்தினோம். ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி எம்.ஏ. படித்தார், முருகன் பி.பி.ஏ. படித்தார் என்றெல்லாம் சொல்ப வர்கள் அவர்கள் எப்படி படித்தார்கள் என்று கேட்பதில்லை. எங்களது பேராசிரியர்கள்தான் அவர்களை படிக்க வைத்திருக் கிறார்கள்.

சிறையில் எங்களால் பயிற்று விக்கப்பட்டவர்கள் இப்போது உயர் பதவிகளிலும் இருக்கிறார்கள். பாளை சிறையில் இருந்த ஆயுள் கைதி ஒருவர் சிறைக்குள் வந்து எம்.எஸ்சி. படித்தார். அவர் சட்டம் படிக்க வேண்டும் எனச் சொன்னதால் திருச்சி சிறைக்கு மாற்றிக் கொடுத்தோம். திருச்சி சட்டக் கல்லூரியில் ரெகுலர் படிப்பில் சட்டம் முடித்து மீண்டும் பாளை சிறைக்கு வந்து பிஹெச்.டி-யும் முடித்தார். இப்போது அவர் தமிழக பல்கலைக்கழகம் ஒன்றில் கணிதத் துறை தலைவராக இருக்கிறார்.

இப்போது கூட மதுரை மத்திய சிறையிலிருந்து 6 கைதிகள் சட்டக் கல்லூரிக்கு தினமும் எஸ்கார்ட் இல்லாமலேயே போய் வந்து கொண்டிருக்கிறார்கள். இப்படி இதுவரை கடந்த 30 வருடங்களில் சுமார் 4,600 கைதி களை பட்டதாரிகளாக்கி இருக் கிறோம். தமிழகத்தில் மட்டுமல்லா மல் புதுச்சேரி, கேரளம், கர்நாடகம், ஆந்திரம், அந்தமான், மகாராஷ் டிரம் உள்ளிட்ட மாநிலங்களிலும் எங்களது சேவை தொடர்கிறது.

ஆயுள் கைதிகளுக்கு அறிவு போதிப்பது மட்டுமல்லாமல் வெளியில் உள்ள அவர்களது குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் சேவையையும் செய்து கொண்டிருக்கிறோம். எங்களது ’அணைக்கும் கரங்கள்’ அமைப்பின் மூலம் இதுவரை சுமார் 1,200 பேருக்கு திருமணம் நடத்தி இருக்கிறோம். இதில் ஒரு சில குழந்தைகளுக்கு அவர் களது தந்தை, யாரை கொலை செய்துவிட்டு சிறையில் இருக் கிறாரோ அந்தக் குடும்பங்களுடன் சமரசம் பேசி அந்தக் குடும்பத்து பையன்களுக்கே திருமணம் செய்து கொடுத்திருக்கிறோம்.

என்னுடைய மாணவர்களில் பலர் இப்போது உயர் பதவிகளில் இருக்கிறார்கள். அவர்கள் எங் களின் நிதித் தேவைகளை கவனித் துக் கொள்வதால் எங்களது பணி தடையின்றி போய்க்கொண் டிருக்கிறது. எனது சேவையை பாராட்டி கடந்த வாரம் சென்னை யில், வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கினார்கள். சிறையிலிருந்து விடுதலையாகும் கைதிகளின் மறுவாழ்வுக்கு அரசாங்கம் சிறப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் மீண்டும் அவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிறைக்குத்தான் வரு வார்கள்.

எனவே, குற்றச் செயல் களை தடுக்கும் நடவடிக்கையாக கைதிகளின் மறுவாழ்வு விஷயத் தில் அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும்’’ நிஜமான அக்கறை யுடன் சொன்னார் நோவா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x