Published : 28 Nov 2017 12:30 PM
Last Updated : 28 Nov 2017 12:30 PM
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலிலதாவுக்கு டிசம்பர் 5-ல் நினைவு தினம் அனுசரிக்க தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 75 நாள் சிகிச்சைக்கு பிறகு கடந்த ஆண்டு டிசம்பர்.5-ம் தேதி காலமானார். அவரது உடல், மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிடம் அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில், நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று அப்போது முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். அதற்கு ரூ.15 கோடி ஒதுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதன்பின், தமிழக முதல்வராக பொறுப்பேற்ற கே.பழனிசாமி, ஜெயலலிதா நினைவு மண்டபம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.
வரும் டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் வருகிறது. அதையொட்டி, அவருக்கு நினைவு மண்டபம் அமைக்கும் பணியை தமிழக அரசு துரிதப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் வழக்கறிஞர் குமாரவேல் சார்பாக, வழக்கறிஞர் துரைசாமி என்பவர் இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு நினைவு தினம் அனுசரிப்பது குறித்து முறையீடு செய்திருந்தார்.
இந்த முறையீடு, நீதிபதி டி.எஸ் சிவஞானம், எம் சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் கீழ் விசாரணைக்கு வந்தது.
அதில், "முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு தேதி இன்னும் சர்ச்சைக்குரியதாக உள்ளது. ஜெயலலிதா டிசம்பர் 5 ஆம் தேதிதான் இறந்தாரா? என்பதே சந்தேகத்துக்குக்கிடமாக உள்ளது. ஏனென்றால் திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய இடங்களில் நடைபெறவிருந்த இடைத் தேர்தல்களில் வேட்பாளர்களையும், கட்சி சின்னங்களையும் அங்கீகரித்து முதல்வர் ஜெயலலிதா இடது கை விரல் ரேகையை பதிவிட்டு இருக்கிறார்.
இதில் திருப்பரங்குன்றம் பதிவேட்டில் வைத்த அவரது ரேகை சரியாக இல்லை என்று தேர்தல் ஆணையத்தில் ஓரு முறையீடு செய்யப்பட்டிருக்கிறது. இறந்தவர்களின் கை ரேகைதான் தெளிவாக இருக்காது என்ற குற்றச்சாட்டு ஏற்கெனவே வைக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஜெயலலிதா டிசம்பர் 5-ம் தேதிதான் இறந்தார் என்று கூற முடியாது சூழல் உள்ளது.
இந்த நிலையில் அவரது நினைத்தினம் அனுசரிக்கப்படுவதற்கு தடைவிதிக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
இதனை ஏற்று கொண்ட நீதிபதிகள் இது தொடர்பாக மனுதாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT