Published : 02 Aug 2023 08:30 AM
Last Updated : 02 Aug 2023 08:30 AM
சென்னை: கடந்த 2011-ம் ஆண்டு வரை ஆசியாவின் மிகப்பெரிய சட்டப்பேரவைத் தொகுதியாக விளங்கியது வில்லிவாக்கம். அதன்பின் மறுவரை செய்யப்பட்டு சாதாரண தொகுதியைப் போல மாறியது. தொகுதியின் பரப்பளவு குறைந்தாலும் சிறப்பளவில் இங்குள்ள முக்கிய இடங்களும் தொழில் நிறுவனங்களும் நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்த வண்ணமே இருக்கின்றன.
இங்குள்ள சிட்கோ பகுதியில் ஏராளமான தொழிற்சாலை, தொழில் நிறுவனங்கள், செவ்வாய்க்கிழமை கோயில் எனஅழைக்கப்படும் அகத்தீஸ்வரர் கோயில், பாலியம்மன் கோயில், ஐசிஎப் ரயில் பெட்டி தொழிற்சாலை, இஎஸ்ஐ தலைமைமருத்துவமனை, மனநல மருத்துவமனை என ஏராளமான பகுதிகள் வில்லிவாக்கத்தை மேம்படுத்தி வருகின்றன.
குறிப்பாக இங்குள்ள ஐசிஎப் ரயில் பெட்டி தொழிற்சாலையில் இருந்து செல்லும் ரயில்கள்தான் நாடு முழுவதும் ஓடிக்கொண்டிருக்கின்றன. இங்கு ஆயிரக்கணக்கானோர் வேலை செய்து வருகின்றனர். இவையனைத்துக்கும் மேலாக வில்லிவாக்கம் ஏரியின் நடுவில் நடந்து செல்லும் வகையில் பாதை, ஏரி அருகே விளையாட்டு உபகரணங்கள், நடைபாதை என பல்வேறு சீரமைப்புப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
இவ்வாறு சிறப்புக்குரிய பகுதிகள் ஒவ்வொரு திசையில் இருப்பதால் அவற்றை ஒருங்கிணைக்கும் முக்கிய பணியைச் செய்து வருவது வில்லிவாக்கம் பேருந்து நிலையம்தான். வடபழனி, பட்டினம்பாக்கம், வேளச்சேரி, அண்ணா சதுக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. இதில் ஆயிரக்கணக்கானோர் நாள்தோறும் பயணம் செய்கின்றனர்.
மேலும் சென்னை புறநகர் பகுதி ரயில் நிலையங்களில், அதிக முக்கியத்துவம் வாயந்த வில்லிவாக்கம் ரயில் நிலையமும் பேருந்து நிலையத்துக்கு அருகே அமைந்துள்ளதால் இப்பகுதி நாள்தோறும் பரபரப்பாகவே காணப்படும்.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்த பழமையான பேருந்துநிலையத்தில் பல ஆண்டுகளாக அடிப்படை வசதி செய்து தரப்படவில்லை என்பதுதான் பெரும் சோகம்.
இதுதொடர்பாக பயணி அன்வர் கூறியதாவது: தொழிற்கூடங்களுக்கு நடுவில் அமைந்திருப்பதால் சென்னையின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி திருவள்ளூர், காஞ்சிபுரம் என அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இங்கு அடிப்படை வசதிகள்என்பது முற்றிலுமாக ஏற்படுத்தப்படவில்லை.
குறிப்பாக குடிநீர் வசதி சுத்தமாக இல்லை. கழிப்பறையும் இல்லாத நிலையில், தற்போது மாநகராட்சி சார்பில் ஒப்பனை அறை கட்டப்பட்டுள்ளது. ஆனாலும் பூட்டுதான் தொங்குகிறது. திறந்திருக்கும் நிலையில் பார்க்கவே இல்லை. அதுவும் பேருந்து நிலையத்துக்கு வெளியில் இருப்பதால் பேருந்துநிலையத்தின் பின்பகுதிதான் பெரும்பாலான பயணிகளுக்கு திறந்தவெளி கழிப்பறையாக உள்ளது.
பேருந்து நிலையத்துக்கு வரும் பெண்கள் இந்த திறந்தவெளி கழிப்பறையால் கடும் சங்கடத்துக்கு ஆளாகின்றனர். மேலும் பெண்களுக்கும் கழிப்பறை இல்லாததால் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
மற்றொரு பயணி வில்சன் கூறுகையில், "நான் இங்கிருந்து 2 கிமீ தொலைவில் இருந்து தினமும் பேருந்து நிலையம் வருகிறேன். இங்கு வாகன நிறுத்தம் இருந்தால் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பேருந்தில் சென்று திரும்ப முடியும். இதேநிலைதான் பல பயணிகளுக்கும் உள்ளது. வாகன நிறுத்தம் இல்லாததால் இன்னலுக்கு ஆளாகிறோம்.
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் பேருந்து நிலையத்தில் வாகன நிறுத்தம் இருந்தது. பராமரிப்பு ஒப்பந்தம் முடிவடைந்ததால் வாகன நிறுத்தம் அகற்றப்பட்டது. எனவே வாகன நிறுத்தத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும். மேலும், இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லை. எல்இடி விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சிலர் கூறியது: எங்களுக்கான ஓய்வறையும் சரியான முறையில் தூய்மைப்படுத்தப்படுவதில்லை. குறிப்பாக கழிப்பறை எப்போதும் துர்நாற்றம் வீசும் நிலையிலேயே இருக்கிறது. பேருந்து நிலையத்தை சீரமைக்கும்போது தான் எங்களுக்கும் விடியல் கிடைக்கும் என நினைக்கிறோம். எங்களுக்கு மட்டுமின்றி, பயணிகள் அனைவரும் பயன்பெறும் வகையில் சுத்தமான குடிநீர் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்.
ஒரே இடத்தில் மட்டும்தான் மேற்கூரை உள்ளது. வெயில், மழை என அனைத்து காலங்களுக்கும் ஏற்ற வகையில் பேருந்து நிலையம் முழுமைக்கும் மேற்கூரை அமைக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.
இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: ஐசிஎப் பேருந்து நிலையத்தை இடமாற்றும்போது வில்லிவாக்கம் வரையில் பேருந்துகள் இயங்கும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் பேருந்து சேவை விரிவுபடுத்தப்பட்டு, வில்லிவாக்கம் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் பயன்பெற்று வருகின்றனர். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், பேருந்துநிலையத்தில் தற்போதைய சூழலில் எந்தவித சீரமைப்புப் பணிகளும் மேற்கொள்ள இயலாது.
அதேநேரம், வழக்கை துரிதப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதன்பின் வில்லிவாக்கம் பேருந்து நிலையத்துக்கு புத்துயிர் கொடுக்கப்படும். அப்போது அடிப்படை வசதிகளையும் தாண்டி, மக்கள் எதிர்பாராத வகையில் சிறப்பான முறையில் பேருந்து நிலையம் மாற்றியமைக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT