Published : 12 Jul 2014 09:45 AM
Last Updated : 12 Jul 2014 09:45 AM
ஒவ்வொரு விவசாயிக்கும் ஏற்படும் மகசூல் இழப்புக்கு ஏற்ப காப்பீட்டுத் தொகை கிடைக்கும் வகையில் தேசிய வேளாண் பயிர் காப்பீட்டுத் திட்டத்தை திருத்தி அமைக்க வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
ராதாபுரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ எம்.அப்பாவு இது தொடர்பாக தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது:
கடந்த 1995 முதல் 2010-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் 2 லட்சத்து 56 ஆயிரத்து 913 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விவசா யத்தில் ஏற்பட்ட நஷ்டமும், சாகுபடிக்காக வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததுமே அவர்களின் தற்கொலைக்கான காரணங்கள் என ஆய்வில் தெரிய வந்துள்ளன. எனினும் இத்தகைய நெருக்கடிகளிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சாகுபடிக்கான கடன் கொடுப்பதால் மட்டும் விவசாயிகளின் பிரச்சினை தீர்ந்து விடாது. விவசாயத் துறையை மேம்படுத்த பலகட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அவற்றில் ஒன்றுதான் பயிர் காப்பீட்டுத் திட்டம்.
மகசூல் பாதிப்பு ஏற்படும் எல்லா விவசாயிகளுக்கும் பயன் தரும் வகையில் தற்போது நடைமுறையில் உள்ள பயிர் காப்பீட்டுத் திட்டம் இல்லை. மழை, புயல், வெள்ளம், வறட்சி, பூச்சித் தாக்குதல் என பல காரணங்களால் சாகுபடி பாதிக்கப்பட்டு விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்படுகிறது.
அதுபோன்ற நேரங்களில் ஒவ்வொரு விவசாயிக்கும் ஏற்படும் பாதிப்பை தனித்தனியாக மதிப்பீடு செய்து, ஒவ்வொருவரின் தனிப்பட்ட பாதிப்புக்கு ஏற்ப காப்பீட்டுத் தொகை நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.
ஆனால் தற்போது அத்தகைய நடைமுறை இல்லை. ஒரு பிர்க்கா (வருவாய் ஆய்வாளர் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி) முழுவதும் சில இடங்களில் மாதிரி மகசூல் சோதனைகள் நடத்தப்பட்டு, பிர்க்கா அளவில் ஏற்படும் சராசரி மகசூல் இழப்பீடு மதிப்பீடு செய்யப்படுகிறது.
அதன்படி அந்த பிர்க்காவில் உள்ள எல்லா விவசாயிகளுக்கும் ஒரே மாதிரியான பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது. பயிர் சாகுபடி முற்றாக அழிந்து போகும் விவசாயிகளுக்கும் பிர்க்கா அளவிலான சராசரி இழப்பீட்டுக்கான காப்பீட்டுத் தொகை மட்டுமே கிடைக்கும்.
தற்போதைய பயிர் காப்பீட்டு முறை விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பீட்டை ஈடு செய்வதாக இல்லை. ஆகவே, பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சேரும் ஒவ்வொரு விவசாயியின் வயலிலும் ஏற்படும் மகசூல் இழப்பு எவ்வளவு என்று தனித்தனியாக மதிப்பீடு செய்யப்பட்டு, அந்த இழப்புக்கு ஏற்ற காப்பீட்டுத் தொகை வழங்கும் வகையில் திட்டத்தை திருத்தி அமைக்க வேண்டும்.
அதேபோல் நெல், தென்னை, கரும்பு உள்பட சுமார் 20 பயிர்கள் மட்டுமே காப்பீடு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இது சரியல்ல. விவசாயிகள் சாகுபடி செய்யும் எல்லா பயிர்களும் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும்.
ஆகவே, காப்பீட்டுத் திட்டத்தில் எல்லா பயிர்களையும் சேர்க்கவும், திட்டத்தில் சேரும் ஒவ்வொரு விவசாயிக்கும் ஏற்படும் மகசூல் இழப்புக்கு ஏற்ப காப்பீட்டுத் தொகையை வழங்கிடவும் நீதிமன்றம் உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு தற்காலிக தலைமை நீதிபதி சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகி யோரைக் கொண்ட முதன்மை அமர்வில் வெள்ளிக்கிழமை விசா ரணைக்கு வந்தது.
அப்போது, இந்த மனு தொடர் பாக மத்திய, மாநில அரசுகள் பதில் மனுக்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை 4 வார காலத்துக்கு ஒத்தி வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT