Last Updated : 13 Nov, 2017 10:04 AM

 

Published : 13 Nov 2017 10:04 AM
Last Updated : 13 Nov 2017 10:04 AM

மழைக்காலத்தில் கார், இரு சக்கர வாகனங்களை பராமரிப்பது எவ்வாறு?- பழுதுபார்ப்பு நிபுணர்கள் விளக்கம்

மழைக்காலத்தில் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்து பழுதுபார்ப்பு நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக இருசக்கர வாகன பழுதுபார்ப்பவர்களுக்கு பயிற்சி அளித்துவரும் சென்னையைச் சேர்ந்த பொறியாளர் ஜி.வின்சென்ட்ராஜ் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

இரு சக்கர வாகனத்தின் பிடிமானத்தில் முக்கிய பங்கு வகிப்பவை டயர்கள். எனவே, அதில் காற்றை நிரம்பும்போது அந்தந்த வாகனங்களுக்கு தயாரிப்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ள அழுத்தத்தின்படி காற்றை நிரப்ப வேண்டும். பொத்தம் பொதுவாக பெட்ரோல் நிலையங்களில் காற்றை நிரப்ப கூடாது. காற்று குறைவாக இருந்தால் வாகனத்தின் சாலை பிடிமானம் அதிகமாகி மைலேஜ் குறைவாக கிடைக்கும். எடையை இழுக்க இன்ஜின் சிரமப்படும். காற்றின் அளவு அதிகமானால் வாகனம் குதிக்கும். அப்போதும் மைலேஜ் குறையும்.

மழைக்காலத்தில் டயர்கள் சரியாக இருக்க வேண்டும். பலர் வாகனத்தின் பின்புறத்தில் பாரம் அதிகம் இருக்கும் என்பதால் பின்புறம் தேய்ந்த டயரை மட்டும் மாற்றுகின்றனர். முன்புற டயர் வழுவழுப்பாகவே இருக்கும். இதனால், புதிதாக மாற்றும் பின்புற டயரும் விரைவில் தேய்ந்துவிடும். டயரை பொறுத்தவரை இரு டயர்களையும் ஒரே நேரத்தில் மாற்றுவது நல்லது.

தண்ணீர் தேங்கியிருந்தால்..

பெரும்பாலானோர் வீட்டுக்கு செல்லும் அவசரத்தில் தண்ணீர் தேங்கியுள்ள பகுதி வழியாக வாகனத்தில் செல்கின்றனர். அவ்வாறு செல்ல வேண்டுமெனில் சக்கரங்களின் ஆக்சில் அல்லது சைலன்சருக்கு கீழ் தண்ணீர் உள்ள பகுதிகளில் செல்லலாம். அதற்கு மேல் தண்ணீர் இருந்தால் சைலன்சருக்குள் தண்ணீர் புகுந்து இன்ஜினை பாதிக்கும். எனவே, கூடுமானவரை தண்ணீர் நிறைந்த பகுதியில் வாகனத்தில் செல்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக சுரங்கப்பாதை வழியாக செல்வதை தவிர்க்க வேண்டும். ஸ்கூட்டர்களில் இன்ஜின் தாழ்வாக இருப்பதால் அதில் செல்வோர் கூடுதல் கவனமாக இருப்பது அவசியம்.

ஸ்பார்க் பிளக், கார்பரேட்டர், ஏர் பில்டர் ஆகியவை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். பலர் மழைக்காலத்தில் வாகனத்தை வெளியில் நிறுத்தும்போது ‘சைடு ஸ்டான்ட்’ பயன்படுத்தி நிறுத்துகின்றனர். அவ்வாறு நிறுத்தும்போது பெட்ரோல் டாங்கிலிருந்து வடியும் தண்ணீர் நேராக ஸ்பார்க் பிளக்கில் விழும். ஸ்பார்க் பிளக் ஈரமாகும் போது அடிக்கடி வாகனம் நின்றுவிடும் அல்லது ஸ்டார்ட் ஆகாது. எனவே, நிறுத்தும்போது பிரதான ஸ்டான்டை பயன்படுத்துவது நல்லது.

மழைக்காலத்தில் வாகனத்தை உடனே நிறுத்துவது கடினம். எனவே, முன்னே செல்லும் வாகனத்துக்கு குறிப்பிட்ட இடைவெளி விட்டு பின் செல்வது நல்லது. இதனால், விபத்து நேர்வதற்கான வாய்ப்புகள் குறையும்.

இன்ஜின் ஆயில்

இன்ஜின் ஆயிலை பலர் அவ்வப்போது மாற்றமாட்டார்கள். சிலர் மழைக்காலம் முடிந்தபிறகு மாற்றிக்கொள்ளலாம் என்று இருப்பார்கள். மழைக்காலத்தில் கிளட்ச்சின் பயன்பாடு அதிகமாக இருக்கும். எனவே, மழைக்காலத்துக்கு முன்பே ஆயிலை மாற்றுவது இன்ஜினுக்கு நல்லது. மேலும், போர்க் ஆயில் (Fork oil) பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. அதை பெரும்பாலானோர் மாற்றுவதும் இல்லை. 6,000 கி.மீட்டருக்கு ஒருமுறை அதை மாற்ற வேண்டும். Fork ஆயிலை மாற்றாவிட்டால் குழி, மேடுகளில் செல்லும்போது அதிர்வு முழுவதும் வாகனத்தின் கைப்பிடி மூலமாக தோள்களில்தான் வந்து சேரும். எனவே, அதை மாற்றுவது நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.

வைப்பரில் கவனம் தேவை

கார் பராமரிப்பு குறித்து ‘மை டிவிஎஸ்’ நிறுவனத்தின் தலைவர் ஜி.ஆர்.ரங்கநாதன் கூறியதாவது:

மழைக்காலத்தில் வைப்பர் மிக முக்கியமானது. எனவே, வைப்பர் பிளேடினை சோதனை செய்து சரியான கால இடைவெளியில் மாற்றி வைத்திருக்க வேண்டும். அதேபோன்று, காரின் முன்புற கண்ணாடியை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். மழைக்காலத்துக்கு முன்பாகவே கார் பேட்டரி டெர்மினல்களில் பெட்ரோலியம் ஜெல்லியை (வேஸ்லின்) தடவி வைத்திருப்பது அவசியம். இதனால் பேட்டரி வயர் இணைப்பில் அரிப்பு தடுக்கப்படுவதோடு, விரைவாக பேட்டரி ஸ்டார்ட் ஆகும்.

மழையின்போது தண்ணீருக்குள் செல்ல நேர்ந்தால் முதல் கியரில் மெதுவாக வாகனத்தை இயக்க வேண்டும். இடையில் நிறுத்த நேர்ந்தால் ஆக்சிலேடரை விடாமல் இருக்க வேண்டும். அப்போதுதான் சைலன்சருக்குள் தண்ணீர் செல்லாது.

வாகனத்தை பின்தொடராதீர்கள்

மழைக்காலத்தில் சேறும் சகதியும் வாரி அடிக்கும்பொழுது அதனைத் தடுக்க ‘மட் ஃபிளாப்’ மிக அவசியம். இதனால் கார் சகதியாவது தடுக்கப்படுவதோடு, அருகில் பயணிக்கும் வாகனங்களின் முன்புற கண்ணாடியில் சேறு விழுவதையும் தவிர்க்கலாம். மழைக்காலத்தில் லாரி, பஸ் போன்ற வாகனங்களைப் பின் தொடர வேண்டாம். முன்னால் செல்லும் வாகனம் காரின் முன் கண்ணாடியில் சகதியை வாரி இறைக்கலாம். இதனால் எதிரே வரும் வாகனங்களைப் பார்க்க முடியாமல் விபத்துக்குள்ளாகவும் வாய்ப்புண்டு.

கன மழையில் காரை ஓட்டும்போது முன் விளக்குகளை எரியவிட வேண்டும். அதனால், உங்கள் கார் வருவதை மற்ற வாகன ஓட்டிகள் தெரிந்துகொள்ள உதவும். ஏசி-ல் Fresh air mode பயன்படுத்தி, காரின் முன் கண்ணாடியில் காற்று படுமாறு பார்த்துகொண்டால் முன் கண்ணாடியில் பனி போன்று தண்ணீர் படர்வதை தவிர்க்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x