Published : 16 Nov 2017 05:05 PM
Last Updated : 16 Nov 2017 05:05 PM
சுவை மிகுந்த மீனாக அறியப்படும் அயிரை மீன் விரைவில் தமிழகத்தின் மாநில மீனாக அறிவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தங்களுக்கு சொந்தமான அதிகாரபூர்வ மீன் வகைகளை அடையாளம் காண மத்திய அரசு ஒவ்வொரு மாநிலத்தையும் கேட்டுக் கொண்டுள்ளது.அந்தவகையில் அயிரை மீனை தமிழகத்தின் தேசிய மீனாக அறிவிக்க தமிழக மீன்வளத்துறை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக துணை வேந்தர் எஸ். ஃபெலிக்ஸ் கூறும்போது, ''அயிரை மீனை தமிழகத்தின் மாநில மீனாக அறிவிப்பது குறித்து மீன்வளத்துறை இயக்குநர் மற்றும் உயர் அதிகாரிகளிடத்தில் ஆலோசித்து வருகிறோம். கேரளாவில் காரை மீன் ஏற்கெனவெ மாநில மீனாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மீன்வளத்துறை குளம் மூலம் மீன் உற்பத்தி செய்யும் தொழில் நுட்பத்தில் வெற்றி கண்டுள்ளது. இந்த வகையில் அயிரை மீன் அதிக வணிக மதிப்புடையதாக பார்க்கப்படுகிறது.
நமது நிதி செயலாளர் கே. சண்முகம் மீன் வளர்ப்பு நுட்பங்களை வளர்ப்பதில் ஆர்வமாக இருக்கிறார். எனவே நாங்கள் இதற்காக இரண்டு ஆராய்ச்சி நிலையங்களை அமைக்க முடிவு செய்துள்ளோம். ஒன்று சென்னையிலுல்ள மாதவரத்திலும் மற்றொன்று கன்னியாகுமரியிலுள்ள பரக்கையிலும் அமைய உள்ளது. இதற்கான நிதி அரசிடமிருந்து பெறப்பட்ட பிறகு பணிகள் தொடங்கும். மாதவரத்தில் ஏற்கெனவே இதற்கான ஆரம்பப் பணிகளை துவங்கி விட்டோம்.
ஒருகிலோ அயிரை மீன் சந்தையில் ரூ.1200 முதல் ரூ.1500வரை விற்கப்படுகிறது. அயிரை மீனைப் பொறுத்தவரை அம்மீன் ஏரி, குளம், ஆறு எல்லாவற்றிலும் கிடைக்கும்'' என்று கூறினார்.
மத்திய நீர்வாழ் உயிரின மையத்தின் டீன் கார் மார்க்ஸ் கூறும்போது,
''தஞ்சாவூரைச் சேர்ந்த புகழேந்தி என்ற விவசாயியால் அயிரை மீனை முதல் முதலில் குளத்தில் வெற்றிகரமாக வளர்ந்தார்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவர் எங்களை தொடர்பு கொண்டு குளத்தில் அயிரை மீனை வளர்ப்பதற்கான ஆலோசனை பெற்றார். அவருக்கு நாங்கள் தொழில்நுட்ப உதவி அளித்தோம். தற்போது அவர் பெரும் வெற்றி பெற்றுள்ளார்.
மேலும் அயிரை மீனை பிற மீன்களுடன் இனக்கலப்பில் ஈடுபடுத்தி புதிய வகை மீன்களை உற்பத்தி செய்து வருகிறார். அயிரை மீன் ஊட்டச்சத்து நிறைந்த மருத்துவ குணம் கொண்ட மீனாகும். அயிரை மீனை முழுவதுமாக உட்கொள்வதால் அதனை சாப்பிடுபவர்களுக்கு அதிக கால்சியம் கிடைக்கிறது'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT