Published : 19 Nov 2017 08:44 AM
Last Updated : 19 Nov 2017 08:44 AM
தஞ்சாவூரில் நடைபெறவுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக மன்னர் சரபோஜி அரசினர் கல்லூரி மைதான ஆடுகளத்தை சேதப்படுத்தி 1,000 கார்கள் நிறுத்த பார்க்கிங் ஏரியா தயார் செய்து வருகின்றனர். இதற்காக கொட்டப்படும் கருங்கல் ஜல்லித் துகள்களால் மைதானம் பாழ்படுத்தப்படுகிறது என பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தஞ்சாவூரில் வரும் 29-ம் தேதி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தமிழக அரசின் சார்பில் புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள மாநகராட்சி திடலில் நடத்தப்பட உள்ளது. இதற்காக பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த திடலின் அருகே உள்ள மன்னர் சரபோஜி அரசினர் கலைக் கல்லூரி மைதானத்தில் மாணவர்களின் கால்பந்தாட்ட ஆடுகளம் மற்றும் தட கள விளையாட்டுகளுக்கான மைதானத்தை சேதப்படுத்தி, கருங்கல் ஜல்லித் துகள்களை கொட்டி ஆயிரம் கார்கள் நிறுத்துவதற்காக பார்க்கிங் ஏரியாவாக மாற்றியுள்ளனர்.
இந்த கருங்கல் ஜல்லித் துகள்களை விழா முடிந்த பின்னர் அகற்ற முடியுமா என்பதுதான் இப்போது தஞ்சாவூர் மக்களின் பெரும் ஐயமாக உள்ளது.
மைதானத்தை பாழ்படுத்துவதா?
இதுகுறித்து சரபோஜி கல்லூரி பேராசிரியர் ஒருவர் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகளவில் கிராமப்புற மாணவர்கள் என 4 ஆயிரம் பேர் இங்கு படிக்கின்றனர். 40 ஏக்கரில் கல்லூரியும் விளையாட்டு மைதானமும் அமைந்துள்ளது. ஏற்கெனவே, மறைந்த முதல்வர் ஜெயலலிதா வந்தபோது கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் ஹாக்கி விளையாடும் இடத்தில் நிரந்தர ஹெலிபேட் அமைத்தனர். அதன்பிறகு மாணவர்கள் வேறு இடத்தில் ஹாக்கி விளையாடி வருகின்றனர்.
இந்த விளையாட்டுத் திடலில் தினமும் மாணவர்கள் கால்பந்து, ஹாக்கி, தொடர் ஓட்டம் ஆகியவற்றை விளையாடி பல்கலைக்கழக அளவில் பல பரிசுகளை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் கல்லூரி முதல்வரின் முன் அனுமதியில்லாமல் விளையாட்டு மைதானத்தில் பொக்லைன் உள்ளிட்ட இயந்திரங்களைக் கொண்டு வாகன நிறுத்துமிடம் தயார் செய்தனர்.
மேலிடத்தில் அனுமதி
அப்போது, இந்த பணி எதற்காக, யாரிடம் அனுமதி பெற்றீர்கள் என கல்லூரி பேராசிரியர்கள் கேட்டபோது, மேலிடத்தில் அனுமதி பெற்றாகிவிட்டது. கல்லூரி நிர்வாகத்தின் அனுமதி தேவையில்லை எனக்கூறிவிட்டு பணியைத் தொடங்கியுள்ளனர்.
மாணவர்கள் விளையாடும் இந்த மைதானத்தில் வீட்டுமனைகளை விற்பனை செய்யும் லே-அவுட் போன்று மைதானம் முழுவதும் கருங்கல் ஜல்லித் துகள்களை கொட்டி வைத்துள்ளனர். ஏழை மாணவர்கள் காலில் ஷூ அணியாமல் ஓடும்போது, கண்ணாடி போல உள்ள கூரிய கருங்கல் துகள்கள் காலைக் கிழித்து காயத்தை ஏற்படுத்தும். இந்த ஜல்லித் துகள்கள் மீது செருப்பு இல்லாமல் யாரும் நடக்க முடியாது.
தற்போது மழைக்காலமாக இருப்பதாலும், வாகனங்கள் மைதானத்தில் வந்து செல்லும்போது இந்த கருங்கல் துகள்கள் அனைத்தும் மண்ணோடு மண்ணாகி விடும். அதை கூட்டியோ, உறிஞ்சியோ எடுக்க வாய்ப்பில்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதா இதே இடத்தில் 2 நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அப்போதுகூட இப்படி செய்ததில்லை. தற்போது மைதானத்தை பாழ்படுத்துகின்றனர் என்றார்.
இதுகுறித்து வழக்கறிஞர் வெ.ஜீவக்குமார் கூறியதாவது: தஞ்சாவூருக்கு முன்பு மறைந்த முதல்வர் ஜெயலலிதா வந்தபோது கல்லூரி மைதானத்தில் தற்காலிகமாக ஹெலிபேட் அமைத்தனர். நிகழ்ச்சி முடிந்ததும் அதை அகற்றுவதாகக் கூறினர். ஆனால், அதை நிரந்தர ஹெலிபேடாக்கிவி்ட்டனர். அதுபோல, தற்போது கல்லூரி மைதானத்தை வாகன நிறுத்துமிடமாக்கி உள்ளனர். இனி ஒவ்வொரு நிகழ்ச்சி நடக்கும் போதும், இதேபோல மைதானத்தை பாழ்படுத்தினால் மாணவர்கள் எதிர்காலத்தில் விளையாட்டு துறையில் பிரகாசிக்க முடியாமல் போக வாய்ப்புள்ளது. எனவே, இதுவே இறுதியான நடவடிக்கையாக இருக்க வேண்டும் என்பதுதான் எல்லோரது எதிர்பார்ப்பும், இல்லையென்றால் நீதிமன்றத்தை அணுகி மாணவர்களின் நலனை காக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஜல்லி துகள்கள் அகற்றப்படும்
இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை கூறியதாவது: மன்னர் சரபோஜி கல்லூரி மைதானத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு வருவோர் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில், கருங்கல் ஜல்லித் துகள் கொட்டப்பட்டுள்ளது. விழா முடிந்ததும் அவை அகற்றப்படும். இந்த விழாவை முன்னிட்டு கல்லூரி மைதானமும் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (நவ.17) மாணவர்கள், கல்லூரி முதல்வர், பேராசிரியர்களிடம் இதை எடுத்துக் கூறியுள்ளோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT