Published : 01 Aug 2023 09:41 PM
Last Updated : 01 Aug 2023 09:41 PM
மேட்டூர்: மேட்டூர் அணை காவிரி ஆற்றை ஒட்டியுள்ள படித்துறை பகுதியில் தேங்கிக் கிடக்கும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 18-ம் தேதி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்நாளில் காவிரி ஆற்றில் புதுமணத் தம்பதி புனித நீராடுவதும், காவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சிறப்பு பூஜைகளும் நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு விழா, வரும் நாளை மறுதினம் (ஆகஸ்ட் 3-ம் தேதி) நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் மேட்டூர் காவிரியில் புனித நீராடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த விழா தொடர்பான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. குறிப்பாக, பெண்கள், ஆண்களுக்கான உடை மாற்றுவதற்கான தற்காலிக அறை, போலீஸார் கண்காணிப்பு கோபுரம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, மேட்டூர் காவரி ஆற்றின் படித்துறை பகுதியில் மீன் கழிவுகள், குப்பைகள், அழுக்கு துணிகள்,உள்ளிட்டவை தேங்கி கிடக்கிறது. மேலும், புதர் மண்டியும் காணப்படுவதால், கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில், நாளை மறுதினம் ஆடிபெருக்கு விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் வருவார்கள். இதனிடையே, படித்துறை பகுதியில் ஏராளமான குப்பை கழிவுகள் தேங்கி கிடப்பதால், மக்கள் புனித நீராடுவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், சுகாதார சீர்கேட்டால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, காவிரி ஆற்றின் படித்துறை பகுதியில் உள்ள குப்பை கழிவுகளை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுததுள்ளனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT