Published : 01 Aug 2023 02:10 PM
Last Updated : 01 Aug 2023 02:10 PM

மத்தியப் பல்கலை. பேராசிரியர் பணி | “முழுமையான சமூக நீதி எப்போது கிடைக்கும்?” - ராமதாஸ் கேள்வி

சென்னை: “மத்தியப் பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்களில் 4 சதவீதத்தினர் மட்டுமே பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். முழுமையான சமூக நீதி கிடைக்க இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் காத்திருக்க வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்தியா முழுவதும் உள்ள 45 மத்தியப் பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் 1,341 பேராசிரியர்களில் 60 பேர், அதாவது 4 சதவீதத்தினர் மட்டுமே பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். 2,817 இணைப் பேராசிரியர்களில் 187 பேர், அதாவது 6 சதவீதத்தினர் மட்டுமே பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களில் தெரியவந்திருக்கிறது. மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு 1990-ம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு 34 ஆண்டுகள் ஆகியும் பேராசிரியர் பணிகளில் ஓபிசி வகுப்பினரின் பிரதிநிதித்துவம் 4 சதவீதத்தை தாண்டாதது அதிர்ச்சியளிக்கிறது.

பட்டியலினத்தவருக்கான பிரதிநிதித்துவமும் 10 சதவீதத்தை தாண்டவில்லை; பழங்குடியினர் பிரதிநிதித்துவமும் 5 சதவீதத்தை தாண்டவில்லை. அதே நேரத்தில் உயர்வகுப்பினர் நிரம்பியுள்ள பொதுப் பிரிவினரின் பிரதிநிதித்துவம் பேராசிரியர் பணியிடங்களில் 85 சதவீதமாகவும், இணைப் பேராசிரியர் பணியிடங்களில் 82 சதவீதமாகவும் உள்ளது. மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் சமூக நீதி எந்த அளவுக்கு சூறையாடப்படுகிறது என்பதற்கு இதை விட சிறந்த எடுத்துக்காட்டு தேவையில்லை.

27% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில் திட்டமிட்டு செய்யப்படும் சதிகள் தான் சமூக நீதி சூறையாடல்களுக்கு காரணம். பேராசிரியர் மற்றும் இணைப் பேராசிரியர் பணிகளுக்கு ஓபிசி வகுப்பில் தகுதியானவர்கள் இருந்தாலும் கூட, அவர்கள் கிரீமிலேயர்கள் என்று கூறி, அவர்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது. அவர்களைத் தவிர மற்றவர்கள் தகுதியற்றவர்கள் என்று கூறி வேலைவாய்ப்பு மறுக்கப்படுகிறது.

இவ்வளவையும் செய்து விட்டு, ஓபிசி பிரிவில் தகுதியானவர்கள் இல்லை என்று கூறி, அந்த இடங்கள் பொதுப்பிரிவுக்கு மாற்றப்பட்டு, உயர் சாதியினரைக் கொண்டு நிரப்பப்படுகின்றன. இப்படித்தான் சமூக நீதி சூறையாடப்படுகிறது. ஓபிசி வகுப்பினருக்கு முழுமையான சமூக நீதி இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்து கிடைக்கும் என்பது தெரியவில்லை.

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சமூக நீதி சூறையாடப்படுவதை தவிர்க்க, முதல் நடவடிக்கையாக கிரீமிலேயர் முறை ஒழிக்கப்பட வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் முழுக்க முழுக்க அவர்களைக் கொண்டே நிரப்பப்பட வேண்டும்; அந்த இடங்கள் பொதுப்பிரிவுக்கு மாற்றப்படக் கூடாது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டு இதுவரை நிரப்பப்படாமல் இருக்கும் அனைத்து பணியிடங்களும், பின்னடைவு பணியிடங்களாக அறிவிக்கப்பட்டு, அவற்றை ஓபிசி வகுப்பினரைக் கொண்டு நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x