Published : 01 Aug 2023 12:30 PM
Last Updated : 01 Aug 2023 12:30 PM
சென்னை: 2023-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருதுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தேர்வு செய்யப்பட்டுளளார். சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் விருதினை வழங்கவுள்ளார்.
இது தொடர்பாக அரசு விடுத்துள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாட்டுக்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் "தகைசால் தமிழர்" என்ற பெயரில் புதிய விருது 2021-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விருதாளரை தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
அக்கூட்டத்தில், இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, 'சமூகப் பாகுபாட்டுக்கு ஆளான மக்களுக்கு' ஆதரவாக தந்தை பெரியார் நடத்திய சமூகப் பிரச்சாரங்கள் மற்றும் போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு நாற்பது முறை சிறைவாசம் அனுபவித்தவரும், 1962-இல் விடுதலை நாளிதழ் ஆசிரியராக பொறுப்பேற்று, தொடர்ந்து 60 ஆண்டுகளையும் கடந்து மிகச் சிறப்பாக பணி செய்து வருபவரும், உண்மை, பெரியார் பிஞ்சு, The Modern Rationalist - (ஆங்கிலம்) இதழ்களுக்கு ஆசிரியரும், திராவிடர் கழகத் தலைவருமான கி.வீரமணிக்கு 2023-ம் ஆண்டுக்கான "தகைசால் தமிழர் விருது" வழங்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
"தகைசால் தமிழர்" விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கி. வீரமணிக்கு, ரூ.10 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆகியவை ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலினால் வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT