Published : 01 Aug 2023 01:42 PM
Last Updated : 01 Aug 2023 01:42 PM
அரக்கோணம்: கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில்போடப்பட்டுள்ள அன்வர்திகான்பேட்டை ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே அனவர்திகான்பேட்டை உள்ளது. இதன் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் பல்வேறு தேவைகளுக்காக தங்களின் போக்குவரத்துக்கு இந்த பகுதியில் உள்ள ரயில் சேவையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரயில் நிலையம் அருகே அரக்கோணம்-நெமிலி ஆகிய பகுதிகளை இணைக்கும் இடத்தில் ரயில்வே ‘கேட்' உள்ளது.
அரக்கோணம், நெமிலி, திருத்தணி, சோளிங்கர், பனப்பாக்கம், காவேரிப்பாக்கம் மற்றும் அதைச்சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொது மக்கள் இந்த ரயில்வே ‘கேட்’ வழியாகத்தான் சென்று வரவேண்டும். இந்த வழியாக தினசரி கனரக வாகனங்கள் முதல் 300-க்கும் மேற்பட்ட அனைத்து வகை வாகனங்களும் சென்ற வண்ணம் உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதை தவிர்க்க கடந்த 2012-ம் ஆண்டு ரயில்வே நிர்வாகம் சார்பில் இந்த இடத்தில் பாலம் அமைக்கும் பணிகளை தொடங்கின. அடுத்த சில ஆண்டுகளில் ரயில்வே நிர்வாகம் தங்கள் பகுதிக்கு உட்பட்ட இடத்தில் பாலம் அமைக்கும் பணிகளை நிறைவு செய்தது. ஆனால், ரயில்வே நிர்வாகம் கட்டி முடித்த ரயில்வே பாலத்தில் இருந்து தொடர்ந்து சற்று தொலைவுக்கு மாநில அரசு பாலம் கட்ட வேண்டியுள்ளது.
ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக மேம்பால பணிகளை தொடங்காமல் மாநில அரசு கிடப்பில் போட்டுள்ளது. இது குறித்து பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்துக்கு மனு அளித்து வருகின்றனர். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, "திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டம் அன்வர்திகான்பேட்டை ஆகிய இரு இடங்களிலும் ஒரே நேரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. மூன்றாண்டுகளுக்குள் கடம்பத்தூர் ரயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டுள்ளது.
ஆனால், அன்வர்திகான்பேட்டை மேம்பாலம் இன்னும் நிறைவு பெறவில்லை. இப்பணிகள் முடிய இன்னும் எத்தனை ஆண்டுகள் கிடப்பில் கிடக்கும் என தெரியவில்லை. எனவே, இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான அன்வர்திகான் பேட்டை மேம்பால பணியை முடித்து கொடுக்க, மாவட்ட நிர்வாகமும், மாவட்ட அமைச்சரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
இது குறித்து மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தரப்பில் கேட்ட போது, "மாவட்டத்தில் மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலை பணிகள் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி வேகமாக நடைபெற்று வருகின்றன. அன்வர்திகான்பேட்டை ரயில்நிலையம் மேம்பால பணிகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து, பணிகள் மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT