Published : 01 Aug 2023 01:29 PM
Last Updated : 01 Aug 2023 01:29 PM
திருப்பத்தூர்: அடிப்படை வசதிகள் இன்றி, முட்புதர்கள் மண்டிக்கிடக்கும் குனிச்சி சமுதாய சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி, சிதிலமடைந்த கட்டிடங்களை புதுப்பிக்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 அரசு மருத்துவமனைகளும், 37 அரசு ஆரம்ப சுகாதார நிலை யங்களும், ஊராட்சி ஒன்றிய அளவில் 6 சமுதாய சுகாதார நிலையங்களும், 162 துணை சுகாதார நிலையங்களும் இயங்கி வருகின்றன. இதில், கந்திலி அடுத்த குனிச்சி பகுதியில் செயல் பட்டு வரும் சமுதாய சுகாதார நிலையமானது 30 படுக்கை வசதிகள் கொண்டதாக உள்ளது.
குனிச்சி மட்டுமின்றி, செவ்வாத் தூர், புதூர், காமராஜர் நகர், மைக்காமேடு, குனிச்சி மோட்டூர், கவுண்டப்பனூர், மாங்குட்டை, பெரியார் நகர், அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் குனிச்சி சமுதாய சுகாதார நிலையத்தையே நம்பியுள்ளனர். இங்கு பணியில் உள்ள மருத்துவர் தினசரி காலை 10 மணிக்கு மேல் வருவதாகவும், செவிலியர்களே பெரும்பாலான மக்களுக்கு சிகிச்சை அளிப்பதாகவும், போதுமான மருந்துகள் இல்லை என கிராமமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து திருப்பத்தூர் அடுத்த செவ்வாத்தூர் புதூர் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மூர்த்தி என்பவர் ‘இந்து தமிழ் திசை' செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘திருப்பத்தூர் - தருமபுரி சாலையில் இயங்கி வரும் குனிச்சி சமுதாய சுகாதார நிலையமானது பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதன் கட்டிடங்கள் தற்போது வலுவிழந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. மருத்துவமனை வளாகம் முழுவதும் முட்புதர்கள் மண்டிக் கிடக்கின்றன.
தாமதமாக வரும் மருத்துவர்: நுழைவு வாயிலில் உள்ள பெயர் பலகை கூட துருப்பிடித்து உறுதித் தன்மையை இழந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் தான் உள்ளது. மருத்துவமனை சுற்றிலும் சுற்றுச்சுவர் இல்லாததால் நோயாளிகளின் பாதுகாப்பு கேள்விக் குறியாக உள்ளது. 30 படுக்கை வசதிகளை கொண்ட இந்த சமுதாய சுகாதார நிலையத்தில் போதுமான மருத்துவ பணி யாளர்கள் இல்லை. காலை 9 மணிக்கு வர வேண்டிய மருத்துவர் காலை 10 மணிக்கு மேல் தான் வருகிறார்.
இதனால், கிராமப்பகுதியில் வசிக்கும் மாணவர்கள், தொழி லாளர்கள் காலை நேரத்தில் சிகிச்சை எடுக்க வந்தால் செவிலியர்களிடம் சிகிச்சை பெற்று செல்ல வேண்டிய நிலை உள்ளது. இரவு நேரத்தில் மருத்துவர்கள் இருப்பது இல்லை. அந்த நேரத்தில் காய்ச்சல், பிரசவம், விஷப் பூச்சிக்கடி என வருவோர்களை 10 கி.மீ., தொலைவு உள்ள திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு செவிலியர்கள் அனுப்பி விடுவதால் கிராமப்புற மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
3 ஊராட்சிகள், 30-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சை பெற்று வரும் குனிச்சி சமுதாய சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும். சிதிலமடைந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும். போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களை பணிய மர்த்த வேண்டும் என்பதே கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக் கையாக உள்ளது’’ என்றார்.
இது குறித்து மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் மருத்துவர் செந்தில் கூறும்போது,‘‘குனிச்சி சமுதாய சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மருத்துவ பணியாளர்களை பணியமர்த்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். விரைவில், அனைத்தும் சரி செய்யப்படும். மருந்துகள் தேவைக்கு ஏற்ப இருப்பு உள்ளது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT