Published : 01 Aug 2023 11:31 AM
Last Updated : 01 Aug 2023 11:31 AM
ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி பேரூராட்சி கூட்டத்தில் இருந்து துணைத் தலைவர் உட்பட பெரும்பான்மை திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால் கோரம் இல்லாததால் ரூ.9.5 கோடி மதிப்பிலான குடிநீர் குழாய் அமைக்கும் தீர்மானம் நிறுத்தி வைக்கப்பட்டது.
ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி பேரூராட்சி சாதாரண கூட்டம் நேற்று நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் ஜெயமுருகன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் சந்திரகலா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சாஸ்தா கோயில் கூடுதல் தலைமை நீரேற்றும் நிலையத்திலிருந்து ரூ. 9.5 கோடி மதிப்பில் குழாய் அமைப்பதற்கான தீர்மானம் வாசிக்கப்பட்டது.
துணைத் தலைவர் விநாயக மூர்த்தி: ரூ.9.5 கோடி மதிப்பிலான திட்டம் குறித்து துணை தலைவர் உட்பட எந்த கவுன்சிலர்களிடம் கருத்து கேட்கவில்லை. மேலும் தீர்மானத்தில் திட்டம் குறித்த முழு விவரம் தெரிவிக்கப்படவில்லை. கடந்த 18 மாதங்களாக பேரூராட்சி வரவு செலவுகள் குறித்த ஆவணங்கள் மன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை, என்றார்.
இளங்கோவன், திமுக: குடிநீர் குழாய் பாதிக்கும் தீர்மானத்திற்கு அனைவரும் ஒப்புதல் வழங்க வேண்டும், என்றார்.
குழாய் அமைக்கும் பணிகள் குறித்து நேரடியாக கள ஆய்வு செய்து, அதன் பின் சிறப்பு கூட்டம் நடத்தி தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்கலாம் என பெரும்பான்மை கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.
பேரூராட்சி தலைவர்: தீர்மானத்தை நிறைவேற்றாமல் திருப்பி அனுப்பினால். மீண்டும் நிதி கிடைப்பதில் சிக்கல் ஏற்படும், என்றார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து துணைத் தலைவர் இளங்கோவன் உட்பட கவுன்சிலர்கள் பொன் லட்சுமி, குமரேஸ்வரி, முத்து லட்சுமி, முருகேஸ்வரி, மயிலம்மாள், மணிகண்டன் உட்பட ஏழு பேர் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். மொத்தம் உள்ள 13 கவுன்சிலர்களில் 7 பேர் தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்ததால் கவுன்சில் கோரம் இல்லாமல் தீர்மானம் நிறுத்தி வைக்கப்பட்டது.
இது குறித்து செயல் அலுவலர் சந்திர கலாவிடம் கேட்ட போது, கூட்டத்திற்கு தீர்மானம் நிறைவேற்ற போதிய பெரும்பான்மை இல்லாததால், மீண்டும் கூட்டம் நடத்தி உறுப்பினர்களின் ஒப்புதலுடன் தீர்மானம் நிறைவேற்றப்படும், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT