Published : 01 Aug 2023 05:59 AM
Last Updated : 01 Aug 2023 05:59 AM

விஏஓக்கள் கைத்துப்பாக்கி கோரிய விவகாரம்: நிலுவையில் உள்ள புகார் விவரங்களை டிஜிபியிடம் கோரியது உள்துறை

கோப்புப்படம்

சென்னை: விஏஓக்கள் சங்கம் தற்காப்பு பயிற்சி, கைத்துப்பாக்கி வழங்க கோரிய நிலையில், நிலுவையில் உள்ள புகார்கள் தொடர்பான விவரங்களை அளிக்கும்படி தமிழக டிஜிபியிடம் உள்துறை கேட்டுள்ளது.

தூத்துக்குடியில் கிராம நிர்வாக அலுவலர், அப்பகுதியில் மணல் கொள்ளை தொடர்பாக புகார் அளித்த நிலையில், அவரை அலுவலகத்திலேயே கொலை செய்த சம்பவம் சமீபத்தில் நடைபெற்றது. இதேபோல், சேலம் ஓமலூரில் கிராம நிர்வாக அலுவலர் மணல் கடத்திய வாகனத்தை பிடித்ததால், அவரை கொலை செய்யும் நோக்கத்தில் விரட்டிய சம்பவம் நடைபெற்றது. இந்நிலையில், இந்த சம்பவங்களை குறிப்பிட்டு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அக்கடிதத்தில், விஏஓக்களுக்கு தற்காப்பு பயிற்சிவழங்க வேண்டும். தேவை ஏற்படும் பட்சத்தில் அவர்களுக்கு கைத்துப்பாக்கி வழங்க வேண்டும் என்றும், புகார்கள் தொடர்பாக காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இக்கோரிக்கை தொடர்பாக, தமிழக டிஜிபிக்கு, உள்துறை கூடுதல் செயலர் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், சேலம் ஓமலூர் தாலுகாவில் மானாத்தாள் பகுதியில் மணல் கடத்திய டிராக்டர், பொக்லைன் வாகனத்தை விஏஓவாக பணியாற்றி வந்த வினோத்குமார் பிடித்ததால் ஏற்பட்ட பிரச்சினையில் உயிருக்கு அச்சுறுத்தும் சம்பவங்கள் நடப்பதால் தற்காப்புக்காக பயிற்சியும், தேவைப்படும் பட்சத்தில் கைத்துப்பாக்கியும் வழங்க வருவாய்த்துறை ஊழியர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனு மீது தக்க நடவடிக்கை எடுத்து அறிக்கை அனுப்பவேண்டும். மேலும் கிராம நிர்வாக அலுவலர்கள் அளித்து நிலுவையில் உள்ள புகார்கள் குறித்த விவரத்தையும் அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x