Published : 01 Aug 2023 07:29 AM
Last Updated : 01 Aug 2023 07:29 AM
சென்னை: காஞ்சிபுரத்தில் ரூ.1,600 கோடி மதிப்பில் செல்போன் உதிரிபாக தயாரிப்பு மையத்தை நிறுவுவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, பாக்ஸ்கான் நிறுவனத் தலைவர் யங் லியூ நேற்று சந்தித்து, தமிழகத்தில் பாக்ஸ்கான் நிறுவனம் மேற்கொண்டு வரும் புதிய முதலீடுகள் தொடர்பாக விவாதித்தார்.
அப்போது, காஞ்சிபுரத்தில் செல்போன் உதிரிபாக தயாரிப்பு மையத்தை நிறுவுவதற்காக ரூ.1,600 கோடி முதலீடு செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், இந்த முதலீட்டுக்காக தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம் மற்றும்பாக்ஸ்கான் நிறுவனம் ஆகியவற்றுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘‘பாக்ஸ்கான் குழுமத் தலைவர் யங் லியூ மற்றும்அவரது குழுவினரை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைந்தேன். தமிழகத்தில் தொடங்க சாத்தியமுள்ள, பல்வேறு தொழில் வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. 6ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ரூ.1,600 கோடியில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செல்போன் உதிரிபாக தயாரிப்பு தொழிற்சாலையை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் எனது முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. மேலும், மின்வாகனங்கள், மின்னணு உதிரிபாகங்கள் துறை சார்ந்த முதலீடுகள் குறித்தும் ஆலோசித்தோம். மின்னணு பொருட்கள் உற்பத்தித் துறையில், ஆசியாவில் புதிய உற்பத்தி மையமாக தமிழகத்தை உயர்த்தும் லட்சியத்தின் மற்றொரு மைல்கல்லாக இந்த சந்திப்பு அமைந்தது’’ என்று தெரிவித்துள்ளார்.
அழைப்பு மையம் விரிவாக்கம்
தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: இணையதள குற்றங்கள் குறித்த அழைப்புகள் பெருகி வரும் நிலையில், ஏற்கெனவே உள்ளஅழைப்பு மையம், கட்டுப்பாட்டு அறை விரிவாக்கம் செய்யப்பட வேண்டி உள்ளது. அதன்படி, இந்தமையத்தில் உள்ள 8 இருக்கைகளை 15 இருக்கைகளாக உயர்த்தவும், புதிதாக 15 பணியாளர்களை 3 ஆண்டுகளுக்கு ரூ.9.28 கோடியில் நியமிக்கவும், இந்தஆண்டுக்கு ரூ.3.10 கோடி வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் காவல் துறை மானிய கோரிக்கையின்போது முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி, இணையதள குற்றப்பிரிவு தலைமையகத்தில் உள்ள ‘1930’ அழைப்பு மையம், கட்டுப்பாட்டு அறையை 15 இருக்கைகள் கொண்ட மையமாக விரிவாக்கம் செய்ய ரூ.9.28 கோடிக்கு நிர்வாக அனுமதி அளித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT