Published : 01 Aug 2023 08:38 AM
Last Updated : 01 Aug 2023 08:38 AM

குமரி மட்டி வாழைப்பழம், ஜடேரி நாமக்கட்டி, வீரவநல்லூர் செடி புட்டா சேலைக்கு புவிசார் குறியீடு

தஞ்சாவூர்: கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம், ஜடேரி நாமக்கட்டி, வீரவநல்லூர் செடி புட்டா சேலை ஆகிய 3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதாக, அறிவுசார் சொத்துரிமை வழக்கறிஞர் சங்கத் தலைவர் ப.சஞ்சய்காந்தி நேற்று தெரிவித்தார்.

இதுகுறித்து தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தமிழகத்தைச் சேர்ந்த 58 பொருட்கள் உட்பட நாட்டில் 450-க்கும் அதிகமான பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. நாட்டிலேயே அதிக பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்று தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

2020 ஆக.28-ம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் ஜடேரி திருமண் (நாமக்கட்டி) தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நாமக்கட்டிக்கும், 2021 ஜூன் 15-ம் தேதி தமிழ்நாடு அரசின் கைத்தறி துறை உதவியுடன் திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் சவுராஷ்டிரா நெசவாளர்கள் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் சார்பில் செடி புட்டா சேலைக்கும், 2021 ஏப்.29-ம் தேதி மதுரை அக்ரி பிசினஸ் இன்குபேஷன் அமைப்பு சார்பில் கன்னியாகுமரி மட்டி வாழைப்பழத்துக்கும் புவிசார் குறியீடு அங்கீகாரம் கோரி விண்ணப்பிக்கப்பட்டது. இந்த விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், மார்ச் 30-ம் தேதி மத்திய அரசிதழில் அறிவிக்கை வெளியிட்டது.

இதைத்தொடர்ந்து, 4 மாதங்கள் கடந்த நிலையில், விண்ணப்பங்களுக்கு மறுப்புகள் எதுவும் வராததால், ஜடேரி நாமக்கட்டி, செடி புட்டா சேலை, கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம் ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் நேற்று கிடைத்துள்ளது.

இதனால், இந்த 3 பொருட்களின் விற்பனை விலை உயர்ந்து, இவற்றை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள், நெசவாளர்கள், விவசாயிகள் ஆகியோரின் வாழ்வாதாரம் உயரும். இப்பொருட்களுக்கென தனி சட்டப் பாதுகாப்பு கிடைக்கும். இப்பொருட்களை பல்வேறு நாடுகளில் விற்பனை செய்ய உலக அங்கீகாரம் கிடைக்கும் என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x