Published : 01 Aug 2023 06:30 AM
Last Updated : 01 Aug 2023 06:30 AM
சென்னை: வெடிபொருள் உட்பட முக்கிய வழக்குகளை விசாரிக்கும் `புலன் விசாரணை' பிரிவு காவல் நிலையங்கள் சென்னையில் இன்றுமுதல் செயல்பட உள்ளன.
சென்னை காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள முக்கிய வழக்குகளான கொலை, ஆதாயக் கொலை, கொள்ளை, வழிப்பறி, சந்தேக மரணம், ஆட்கடத்தல், வெடிபொருள், மத, சாதி ரீதியான மோதல் உட்பட பல்வேறு வகையான வழக்குகளில் விரைந்து துப்பு துலக்க வசதியாக சென்னை பெருநகர காவலில் உள்ள 12 காவல் மாவட்டங்களிலும் 12 புலன் விசாரணை பிரிவு காவல் நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
இப்பிரிவில் உள்ள போலீஸாருக்கான 3 நாட்கள் பயிற்சி முகாம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 27-ம் தேதிமுதல் நடைபெற்றது. இதை காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் தொடங்கி வைத்திருந்தார்.
இந்நிலையில், இந்த `புலன் விசாரணை' பிரிவு காவல் நிலையங்கள் இன்றுமுதல் சென்னையில் செயல்பட உள்ளன. சென்னை காவலில் உள்ள 12 காவல் மாவட்டங்களில், அந்தந்த மாவட்ட துணை ஆணையர்கள் மேற்பார்வையில், குற்றப்பிரிவு போலீஸார் தலைமையில் இவை செயல்பட உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT