Published : 05 Nov 2017 09:44 AM
Last Updated : 05 Nov 2017 09:44 AM

மழை நிலவரங்களை எளிதில் தெரிந்துகொள்ள வானிலை ஆய்வு மைய இணையதளம் தமிழில் வடிவமைப்பு: தவறான தகவல்கள் பரப்புவதைத் தடுக்க ஏற்பாடு

மக்களை அச்சுறுத்தும் வகையில் தவறான வானிலை நிலவரங்கள் பரப்பப்படுவதைத் தடுக்க, சென்னை வானிலை ஆய்வு மையம் தனது பிரத்யேக இணையதளத்தை தமிழில் வடிவமைத்துள்ளது. இதன்மூலம் மழை எச்சரிக்கை உள்ளிட்ட விவரங்களை பொதுமக்கள் எளிதில் தெரிந்து கொள்ள முடியும்.

கடந்த 2015-ல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள் ளம் காரணமாக, வானிலை முன்னெச்சரிக்கை நிலவரங்களைத் தெரிந்துகொள்வதில் மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் முகநூல், ட்விட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் வானிலை முன்னெச்சரிக்கை நிலவரங்கள் உலா வருகின்றன. அவற்றில் பல தகவல்கள் நம்பகத்தன்மை அற்றவையாகவும், சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட வானிலை முன்னெச்சரிக்கை நிலவரங்களாகவும் உள்ளன.

இதுபோன்ற செயல்கள் மக்கள் மத்தியில் தேவையற்ற பீதியை ஏற்படுத்துகின்றன. இவற்றைத் தடுக்கும் விதத்தில், நம்பகமான, சரியான வானிலை நிலவரங்களை பொதுமக்கள் எளி தில் தெரிந்துகொள்ளும் வகையில், சென்னை வானிலை ஆய்வு மையம், தனது http://imdchennai.gov.in இணையதளத்தில் வானிலை நிலவரம் குறித்த விவரங்களை தமிழில் படிக்கும் வகையில் மாற்றி அமைத்துள்ளது. முகப்பு பக்கத்திலேயே அனைத்து விவரங்களும் கிடைக் கும் வகையில் இந்த இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் கூறியது:

வடகிழக்கு பருவமழைக் காலம் என்பது, தமிழகத்துக்கு முக்கிய மழைக்காலமாக உள்ளது. இந்த காலகட்டத்தில் வானிலை முன்னெச்சரிக்கை நிலவரங்களை தெரிந்துகொள்ள மக்கள் ஆர்வமாக இருப்பார்கள். அண்மைக் காலமாக அத்தகைய ஆர்வம் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

எங்கள் இணையதளத்தில், இதுநாள் வரை ஆங்கிலத்தில் மட்டுமே தகவல்கள் கொடுக்கப்பட்டு வந்தன. அனைத்து தகவல்களையும் முகப்பு பகுதியில் வைக்க முடியாது. வானிலை முன்னெச்சரிக்கை நிலவரங்கள், ஏதாவது ஒன்றினுள் பதிவு செய்யப்பட்டிருக்கும். அந்த இணையதளத்தை, தொடர்ந்து பார்வையிட்டு வருபவர்களுக்கு மட்டுமே, எந்தெந்த தகவல்கள், எதனுள் இருக்கிறது என்பது தெரியும். சாதாரண மக்கள் பார்வையிடுவது சிரமமாக இருக்கும்.

மேலும் சமூக வலைதளங்களில் தவறான வானிலை நிலவரங்கள் பரப்பப்படுகின்றன. அதனால் மக்கள் பீதி அடைகின்றனர். இதைத் தடுக்கும் விதமாகவும், மக்களுக்கு சரியான வானிலை நிலவரம் சென்று சேரவும், சென்னை வானிலை ஆய்வு மைய இணையதளம் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதில், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் எவ்வளவு மழை பெய்துள்ளது, எந்தெந்த மாவட்டத்தில், எவ்வளவு மழை பெய்துள்ளது, கனமழைக்கு என்று ஏதேனும் எச்சரிக்கை இருக்கிறதா என்பதை, வானிலை ஆய்வு மைய இணையதளத்தை திறந்த உடனே, அதன் முகப்பு பக்கத்தில் கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம். இந்த விவரங்கள் அனைத்தும் தமிழில் இடம்பெற்றுள்ளன. அதை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

வடகிழக்கு பருவமழை காலத்துக்காக பிரத்யேகமாக இந்த இணையதள வசதி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களின் ஆலோசனைகளைப் பெற்று, இந்த வசதியை மேலும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இது மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற இணையதளம். இதில் வானிலை தொடர்பான அதிகாரப்பூர்வமான தகவல்களை மட்டுமே வெளியிடுவோம். சமூக வலைதளங்களில் வானிலை தொடர்பாக எந்த தகவல் வந்தாலும், வானிலை ஆய்வு மைய இணையதளத்தை திறந்து பார்த்து, உண்மை நிலையை மக்களே தெரிந்துகொள்ள, இந்த சேவை வசதியாக இருக்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x